வடதிருமுல்லைவாயில் மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில், சென்னை
முகவரி
அருள்மிகு மாசிலாமணீஸ்வரர் திருக்கோயில், வட திருமுல்லை வாயில், சென்னை – 609 113. போன்: +91-44- 2637 6151
இறைவன்
இறைவன்: மாசிலாமணீஸ்வரர் இறைவி: கொடியிடைநாயகி
அறிமுகம்
வடதிருமுல்லைவாயில் – மாசிலாமணீஸ்வரர் கோயில் சுந்தரர் பாடல் பெற்ற தலமாகும். இது திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆவடி வட்டத்தில் உள்ள திருமுல்லைவாசல் எனும் ஊரில் அமைந்துள்ளது. இத்தலம் கிருதயுகத்தில் இரத்தினபுரமாகவும், திரேதாயுகத்தில் வில்வவனமாகவும், துவாபரயுகத்தில் சண்பக வனமாகவும், கலியுகத்தில் முல்லைவனமாகவும் விளங்குகிறது என்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். தல விருட்சம்: முல்லை தீர்த்தம்: கல்யாண தீர்த்தம்
புராண முக்கியத்துவம்
பல்லாண்டுகளுக்கு முன்பு, வனமாக இருந்த இப்பகுதியில் தங்கியிருந்த வாணன், ஓணன் எனும் இரண்டு அசுரர்கள் முனிவர்களை துன்புறுத்தினர். அவர்களை விரட்ட வந்த தொண்டைமான் மன்னன் போரிட்டும் வெல்ல முடியாமல் திரும்பினான். அப்போது, பட்டத்து யானையின் கால் ஒரு முல்லைக்கொடியில் சிக்கிக் கொண்டது. மன்னன், யானையின் மீது இருந்தபடியே முல்லைக் கொடிகளை வெட்டினான். வெட்டப்பட்ட இடத்தில் இருந்து ரத்தம் பீறிட்டது. அவன் பயந்து போய், கீழே இறங்கி பார்த்தபோது, மண்ணிற்கு அடியில் இருந்த லிங்கத்தை பார்த்தான். லிங்கத்தின் மீதிருந்து ரத்தம் வழிந்ததைக் கண்டான். சிவபெருமானின் வடிவமான லிங்கத்தை வெட்டிய வருத்தத்தில், உயிரையே மாய்க்கச் சென்றான். அப்போது சிவன் அவனைப் பாதுகாக்கும் நோக்கத்தில், அம்பாளைக் கூட அழைக்காமல் தனியாக மன்னனுக்கு காட்சி தந்தார், ” வெட்டுப்பட்டதற்காக வருந்த வேண்டாம் என்றும், வெட்டுப்பட்டாலும் மாசு இல்லாத தூய மணியாகவே விளங்குவோம்’ என்றும் கூறி அருள் செய்தார். அதன்பிறகு இங்கு வந்த அம்பாள் சுவாமிக்கு வலதுபுறத்தில் எழுந்தருளினாள். பின் சிவன், நந்தியை மன்னனுடன் அனுப்பி அசுரர்களை வெல்லும்படி செய்தார். மன்னன், அசுரர்கள் வைத்திருந்த இரண்டு வெள்ளெருக்கம் தூண்களை எடுத்து வந்து இவ்விடத்தில் வைத்து, மாசிலாமணீஸ் வரருக்கு கோயில் கட்டினான். இவ்விரு தூண்களும் சிவன் கருவறைக்கு முன்பு தற்போதும் உள்ளதைக் காணலாம்.
நம்பிக்கைகள்
பவுர்ணமி, அமாவாசை, கிருத்திகை, பிரதோஷம் ஆகிய நேரங்கள் தவிர்த்த பிற நேரங்களில் இங்குள்ள நந்திக்கு பூஜை செய்து சாத்திய மாலையை அணிந்து கொண்டால் திருமணத்தடை, புத்திரதோஷம் நீங்கும் என்பது ஐதீகம்
சிறப்பு அம்சங்கள்
இங்குள்ள நந்தி அசுரர்களை அழிப்பதற்காக மன்னருக்கு துணையாகச் சென்றதால், சுவாமியை பார்த்தபடி இல்லாமல், எதிர்த்திசையை நோக்கி திரும்பியபடி உள்ளது. சுவாமியே பிரதானம் என்பதால் நவக்கிரக சன்னதி இல்லை. சூரியனுக்கு மட்டும் தனி சன்னதி உண்டு. அம்பாள் கொடி போன்ற அழகிய இடையுடன் இருப்பதால், கொடியிடைநாயகி எனப்படுகிறாள். வெள்ளிக்கிழமை பவுர்ணமி தினத்தில் இவளை வணங்கினால் பாவவிமோசனம் கிடைக்கும் என்பதும், இத்தலத்து வரலாற்றை கேட்டாலே முக்தி கிடைக்கும் என்பதும் நம்பிக்கை. பிரகாரத்தில் சோழபுரீஸ்வரர், லவ குசர்கள் வணங்கிய குசலபுரேஸ்வரர், வள்ளி, தெய்வானையுடனான சுப்பிரமணியர் உள்ளனர்.
திருவிழாக்கள்
வைகாசி பிரம்மோற்ஸவம், மாசித்தெப்ப விழா, ஆனியில் வசந்த உற்சவம்.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத்துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
திருமுல்லைவாசல்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவள்ளூர்
அருகிலுள்ள விமான நிலையம்
சென்னை