ராஜாங்கட்டளை மதுசுந்தரேஸ்வரர் சிவன்கோயில், திருவாரூர்
முகவரி :
ராஜாங்கட்டளை மதுசுந்தரேஸ்வரர் சிவன்கோயில்,
ராஜாங்கட்டளை, நீடாமங்கலம் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 610202.
இறைவன்:
மதுசுந்தரேஸ்வரர்
இறைவி:
அமிர்தநாயகி
அறிமுகம்:
இக்கோவிலைக்காண திருவாரூரிலிருந்து வடபாதிமங்கலம் செல்லும் சாலையில் திருநாட்டியத்தான்குடி சென்று அதன் தெற்கில் ஒரு கி.மீ., தூரத்தில் இந்த அழகிய திருக்கோவிலை காணலாம். முன்னொரு காலத்தில் பெருங்கோயிலாக இருந்துள்ளது. தற்போது இருப்பதை எடுத்துக்கட்டி வழிபாட்டுக்கு கொண்டுவந்துள்ளனர். ராஜாங்கட்டளை என அழைக்கப்படும் இளமதுக்கூரில் 10ம் நூற்றாண்டில் உருவான திருக்கோவில் தான் இந்த மதுசுந்தரரேஸ்வரர் என்ற திருக்கோவிலாகும். இக்கோவில் 10ம் நூற்றாண்டில் முதலாம் குலோத்துங்கச் சோழனால் கட்டப்பட்டது.
இறைவன் மதுசுந்தரேஸ்வரர் இறைவி – அமிர்தநாயகி பசுமையான மூன்று கிராமங்களுக்கு மத்தியில் உள்ளது இந்த திருக்கோயில். இக்கோவில் லிங்கத்தின்மீது வில்வமரத்தில் உள்ள தேன் கூட்டிலிருந்து தேன் எப்போதும் சொட்டிக்கொண்டே இருப்பதால் மதுசுந்தரேஸ்வரர் என்ற பெயர் உண்டானது. அதேபோன்று, இந்த நர்த்தன விநாயகர் பக்தர்களுக்கு செல்வம், சித்தபிரம்மை நீக்கம், வியாதி குணமடைதல், குடும்ப கவலை நீங்க அருள் தருபவர். இத்திருக்கோவில் தற்போது இந்து அறநிலையத்துறை கீழ் செயல்படுகிறது. கோவிலுக்கு பல ஏக்கர் விவசாய நிலங்கள் இருந்தும், எவ்வித வருவாயும் இல்லாமல் பாழடைந்த நிலையில் இருந்தது, பின்னர் பெருமுயற்சியின் பலனாக கோயில் எழும்பி உள்ளது.
கிழக்கு நோக்கிய கோயில் இறைவன் கிழக்கு நோக்கியும் அம்பிகை தெற்கு நோக்கியும் உள்ளனர். இறைவன் முன்னம் நீண்ட தகரகொட்டகை போடப்பட்டு உள்ளது அதன் கடைசியில் நந்தி சிறிய மண்டபத்தில் உள்ளார். கருவறை வாயிலில் நர்த்தன கணபதியும், முருகனும் உள்ளனர். கருவறை கோட்டங்களில் பழைமையான தக்ஷணமூர்த்தி உள்ளார் அது பின்னமானதால் புதிதாக ஒரு தக்ஷணமூர்த்தி சிலை ஒன்றை வைத்துள்ளனர். பின்புறம் விஷ்ணு சிலை மற்றும் துர்கை சிலையும் உள்ளது. சண்டேசர் வழமையான இடத்தில் உள்ளார். கோயிலின் வடபுறம் ஒரு பழமையான வில்வமரம் ஒன்றுள்ளது அதன் கீழ சில விநாயகர் மற்றும் சண்டேசர் சிலைகள் உள்ளன.
கோயில் பின்புறம் ஐந்து லிங்க மூர்த்திகள் வரிசையாக வைக்கப்பட்டுள்ளன. அவை பழம் கோயிலின் பிரகார லிங்க மூர்த்திகள் ஆகலாம். வடகிழக்கில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நவக்கிரக மண்டபம் உள்ளது. அருகில் ஒரு பழமையான பைரவர் வைக்கப்பட்டு உள்ளார். அர்ச்சகர் தங்க ஒரு கூரை கொட்டகை அமைக்கப்பட்டு உள்ளது. பிரகார சிற்றாலயங்கள் விநாயகருக்கும் முருகனுக்கும் இரு மேற்கு மூலைகளில் அமைந்து உள்ளன. சிவாச்சாரியார் கிடைக்காத நிலையில் ஒரு அடியார் ஒருவரை வைத்து பூஜைகள் நடக்கின்றன.
காலம்
10 ஆம் நூற்றாண்டு
அருகிலுள்ள பேருந்து நிலையம்
ராஜாங்கட்டளை
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி