மீஞ்சூர் வரதராஜபெருமாள் கோவில், திருவள்ளூர்

முகவரி :
வரதராஜ பெருமாள் கோவில்
மீஞ்சூர்,
திருவள்ளூர் மாவட்டம் – 601203.
இறைவன்:
வரதராஜ பெருமாள்
இறைவி:
பெருந்தேவி தாயார்
அறிமுகம்:
வரதராஜ பெருமாள் கோவில் தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் வட்டம், மீஞ்சூர் நகரத்தின் மையமான இடத்தில் அமைந்துள்ளது. வடகாஞ்சி என்று அழைக்கப்படும் இக்கோயில் அபிமான தலம் ஆகும். விஜயநகர மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட ஐநூறு ஆண்டுகள் பழமையானது எனக் கருதப்படுகிறது. இக்கோவிலின் கருட சேவை நிகழ்வின்போது பல லட்சம் பக்தர்கள் கூடுகின்றனர். இவ்வூர் தேவதானத்திலிருந்து 8 கி.மீ. தொலைவிலும், பொன்னேரியிலிருந்து 11 கி.மீ. தொலைவிலும், சென்னையிலிருந்து 26 கி.மீ. தொலைவிலும், மாவட்டத் தலைநகர் திருவள்ளூரிலிருந்து 52 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.
புராண முக்கியத்துவம் :
கிழக்கு நோக்கி அமைந்துள்ள இக்கோவிலின் ஐந்து நிலை இராஜகோபுரம் தொன்மைமிக்கதாகும். இராஜகோபுரத்தைத் தாண்டி உள்ளே சென்றால் கொடிமரத்தைக் காணலாம். தல மரம் மகிழமரம் ஆகும். இக்கோவிலின் மூலவர் வரதராஜ பெருமாள் ஆவார். மூலவர் கருவறை கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கருவறையில் மூலவர் ஏழரை அடி உயரத்தில், சிறீ தேவி, பூதேவி புடை சூழ சங்கு சக்கரம் ஏந்தி, நின்ற நிலையில் வரதராஜ பெருமாள் காட்சி தருகிறார். பெருந்தேவி தாயார் சன்னதியும் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கருடன், யோக நரசிம்மர், ஆண்டாள், சக்கரத்தாழ்வார், ஆகியோர் தனி சன்னதியில் அருள்பாலிக்கின்றனர். கோவிலை அடுத்து ஆனந்தபுஷ்கரணி எனும் தெப்பக்குளம் உள்ளது. இக்கோவிலில் சில சோழர்கள் காலத்து கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. மதுராந்தக உத்தம சோழனின் (கி.பி. 973-985) மூன்றாம் ஆட்சியாண்டு கல்வெட்டு (ARE 134 of 1916), சோழ-குல-சுந்தர-விண்ணகர் என்று அழைக்கப்படும் இந்த விட்ணு கோவில், கேசவன் கருகைக்கோன் என்பவனால் அலிவலகேசவ பெருமாளுக்கு, கி.பி 973 ஆம் ஆண்டு கட்டப்பட்ட செய்தியைப் பதிவு செய்துள்ளது. முதலாம் இராஜேந்திர சோழனின் நான்காம் ஆட்சியாண்டுக் கல்வெட்டு (ARE 133 of 1916), இக்கோவில் திருவிழாக்களுக்காக நிலக்கொடைவழங்கிய செய்தியினைப் பதிவு செய்துள்ளது. இங்கிருந்த கல்லாடேசுவரம் உடையார் கோவில் பற்றியும் இது குறிப்பிட்டுள்ளது.விஜயநகர மன்னர் அச்சு தேவராயர் திருப்பணி செய்ததாக சில கல்வெட்டுக்கள் உள்ளன.
திருவிழாக்கள்:
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலைப் போலவே இக்கோவிலிலும் பிரம்ம உற்சவம் வைகாசி மாதம் பத்து நாட்கள் சிறப்பாக நடைபெறுகிறது. உற்சவத்தின் 7 ஆம் நாள் தேரோட்டம் நடைபெறுகிறது. கருடசேவை நிகழ்வின்போது பல லட்சம் பக்தர்கள் கலந்துகொள்கிறார்கள். வைகுண்ட ஏகாதசி இங்கு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. புரட்டாசி மாத சனிக்கிழமை பூசை இங்கு சிறப்பாக நடைபெறுகிறது.






காலம்
500 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மீஞ்சூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
மீஞ்சூர்
அருகிலுள்ள விமான நிலையம்
சென்னை