மாந்துறை ஆம்ரவனேஸ்வரர் திருக்கோயில், திருச்சி

முகவரி
அருள்மிகு ஆம்ரவனேஸ்வரர் திருக்கோயில், லால்குடி தாலுகா, மாந்துறை- 621 703.திருச்சி மாவட்டம். போன்: +91-99427 40062, 94866 40260
இறைவன்
இறைவன்: ஆம்ரவனேஸ்வரர் இறைவி: பாலாம்பிகை
அறிமுகம்
திருமாந்துறை ஆம்ரவனேசுவரர் கோயில் மாந்துறை கிராமத்தில் அமைந்துள்ள தேவாரப்பாடல் பெற்ற சிவத்தலம். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 58வது சிவத்தலமாகும். மாந்துறை திருச்சிராப்பள்ளி – லால்குடி பேருந்துத் தடத்தில் உள்ள ஒரு சிறு கிராமம். இது லால்குடியிலிருந்து மேற்காக சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. திருச்சி, லால்குடி மற்றும் ஸ்ரீரங்கம் ஆகியவற்றில் இருந்து பேருந்து மூலம் செல்ல வசதி கொண்டுள்ளது. இச்சிற்றூரின் பெரும் சிறப்பு இங்கு ஆயிரம் ஆண்டுகளுக்கும் அதிகமான தொன்மை வாய்ந்த கோயில் கொண்ட திருத்தலமாக இது இருப்பதே.
புராண முக்கியத்துவம்
முன்னொரு காலத்தில் இப்பகுதி மாமரங்கள் நிறைந்த வனமாக இருந்தது. இவ்வனத்தில் தவம் செய்த மகரிஷி ஒருவர் சிவ அபச்சாரம் செய்ததால் மானாக பிறக்கும்படி சாபம் பெற்றார். அவர் இவ்வனத்திலேயே, தங்களின் முற்பிறவியில் செய்த பாவத்தால் மான்களாக பிறந்த அசுரகுல தம்பதியர்களுக்கு பிறந்தார். ஒருநாள் குட்டி மானை விட்டுவிட்டு, தாய் மானும், தந்தை மானும் வெளியே சென்றுவிட்டன. அவை இரைதேட சென்ற இடத்தில் வேடுவ தம்பதி வடிவில் வந்த சிவனும், பார்வதியும் அவற்றை அம்பால் வீழ்த்தி சாபவிமோசனம் தந்தனர். இரவு நெடுநேரம் ஆகியும் தாய் மான் இருப்பிடத்திற்கு திரும்பாததால் கலங்கிய குட்டிமான் கண்ணீருடன் காத்துக் கொண்டிருந்தது. நேரம் ஆக, ஆக மானுக்கு பசியெடுக்கவே அது அலறியது. சிவனும், பார்வதியும் அதனைப் பெற்ற மான் வடிவில் இங்கு வந்தனர். பசியால் வாடியிருந்த குட்டி மானுக்கு பார்வதி தேவி பால் புகட்டினார். தந்தை வடிவில் வந்த சிவன் அதனை ஆற்றுப்படுத்தினார். சிவன், பார்வதியின் தரிசனம் பெற்ற குட்டி மான் தன் சாபத்திற்கு விமோசனம் பெற்று மீண்டும் மகரிஷியாக மாறியது. அவரது வேண்டுதலுக்காக சிவன் இத்தலத்தில் சுயம்புவாக எழுந்தருளினார். பார்வதிதேவியும் இங்கேயே தங்கினாள்.
நம்பிக்கைகள்
அம்பாளுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டால் பால தோஷத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு குணமாகும் என்பது நம்பிக்கை. கிரக தோஷம் உள்ளவர்கள் நவக்கிரக சன்னதியில் வேண்டிக்கொள்கிறார்கள்.
சிறப்பு அம்சங்கள்
தேவலோக சிற்பியான விஸ்வகர்மாவின் மகளாக சமுக்யா தேவி பிறந்தாள். பேரழகு கொண்டவளாக இருந்த அவளை சூரியன் மணந்து கொண்டார். அவள் சூரியனுடன் மிகுந்த அன்பு கொண்டு அவருடன் வாழ்ந்து வந்தாள். நாளுக்கு நாள் சூரியனின் உக்கிரம் அதிகரிக்கவே அவளால் வெப்பத்தைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவள் சூரியனிடம் முறையிட்டும் அவர் உக்கிரத்தை குறைக்கவில்லை. ஒரு காலகட்டத்தில் அவரது வெப்பத்தை தாங்கவே முடியாது என்ற நிலைக்கு வந்த சமுக்யாதேவி, தான் தந்தையிடமே வந்துவிடுவதாக விஸ்வகர்மாவிடம் கேட்டாள். அவரோ மகளுக்கு ஆறுதல் கூறி சாந்தப்படுத்தினார். ஆனாலும் அவளால் கணவனின் உக்கிரத்தை பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. எனவே, கணவனைப் பிரிந்து செல்ல முடிவெடுத்தாள். தான் சென்றுவிட்டால் கணவன் மனம் வருந்துவார் என்று எண்ணிய அவள் தன்னில் இருந்து சற்றும் வித்தியாசம் காணமுடியாதபடி தன் நிழலில் இருந்து ஒரு உருவத்தை உண்டாக்கினாள். அவளை தனக்கு பதிலாக சூரியனின் மனைவியாக இருந்து பணிவிடை செய்யும்படி பணித்தாள். (சமுக்யாதேவியால் நிழல் வடிவமாக உருவாக்கப்பட்டவளே சாயாதேவி). பின் அவள் சூரியனைப்பிரிந்து தன் தந்தையிடமே வந்து சேர்ந்தாள். விஸ்வகர்மா அவளுக்கு பலவாறு எடுத்துச் சொல்லியும் அவள் கணவனிடம் செல்லவில்லை. தந்தையின் அனுமதியில்லாமலேயே அவருடன் தங்கியிருந்ததால் மனம் கலங்கிய சமுக்யாதேவி குதிரை வடிவம் எடுத்து இத்தலம் வந்து தன் கணவனின் உக்கிரம் குறையவும், அவரது உக்கிரத்தை பொறுத்துக் கொண்டு மீண்டும் கணவனுடன் சேரவும் சிவனை வேண்டி தவம் செய்தாள். இதனிடையே சாயாதேவியின் நடத்தையின் வித்தியாசத்தைக் கண்ட சூரியன், அவள் சமுக்யாதேவி அல்ல என அறிந்து கொண்டார். அவர் விஸ்வகர்மா மூலமாக தன் மனைவி பிரிந்து வந்ததை தெரிந்து கொண்டு, அவரிடமே தன் உக்கிரத்தையும் குறைத்தார். பின் அவர் இத்தலம் வந்து சிவனை வழிபட்டு சமுக்யாதேவியுடன் மீண்டும் சேர்ந்தார். இதன் அடிப்படையில் இங்கு நவக்கிரக சன்னதியில் சூரியன் சமுக்யாதேவி மற்றும் சாயாதேவி ஆகிய இருவருடன் இருப்பது போல அமைக்கப்பட்டிருக்கிறது. அருகிலேயே சூரியன் தனியாகவும் இருக்கிறார். பிற கிரகங்கள் அனைத்தும் சூரியனைப் பார்த்தபடியே இருக்கிறது. சதுர்த்தி பூஜை: மான்களாக பிறந்த அசுர தம்பதியர் மற்றும் மகரிஷிக்கு சிவன் ஒரு அகங்கார சதுர்த்தியன்று (செவ்வாய்க்கிழமை சதுர்த்தி) விமோசனம் தந்ததாக ஐதீகம். இதன் அடிப்படையில் இங்கு சுவாமிக்கு செவ்வாய்க்கிழமைகளில் வரும் சதுர்த்தி திதியன்று சிறப்பு பூஜைகள் நடக்கிறது. இந்நேரத்தில் சுவாமியை வழிபட்டால் குறைவிலாத வாழ்க்கை கிடைக்கும், பாவங்களுக்கு மன்னிப்பு கிடைக்கும் என்பது நம்பிக்கை.
திருவிழாக்கள்
இறைவன் ஆம்ரவனேஸ்வரர் சந்நிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பங்குனி மாதத்தில் முதல் 3 நாள்களில் சூரிய ஒளி சுவாமி மீதுபடுகிறது. அம்பாள் தெற்கு நோக்கி காட்சி தருகின்றாள். ஆடிவெள்ளி, நவராத்திரி, அன்னாபிஷேகம், கார்த்திகைச் சோம வாரங்கள், திருவாதிரை, சிவராத்திரி முதலிய விழாக்கள் நடைபெறுகின்றன.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்துசமயஅறநிலையத்துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மாந்துறை
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருச்சி
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி