Monday Jan 27, 2025

மதூர் ஸ்ரீ மதானந்தேசுவரர்-சித்திவிநாயகர் திருக்கோயில், கேரளா

முகவரி

மதூர் ஸ்ரீ மதானந்தேசுவரர்-சித்திவிநாயகர் திருக்கோயில், மதூர், காசர்கோடு மாவட்டம், கேரளா மாநிலம் – 671124.

இறைவன்

இறைவன்: ஸ்ரீ மதானந்தேசுவரர்-சித்திவிநாயகர் இறைவி: பார்வதி

அறிமுகம்

மதூர் ஸ்ரீ மதானந்தேசுவரர்-சித்திவிநாயகர் கோயில் என்பது கேரளத்தின், காசர்கோடு மாவட்டதில் உள்ள ஒரு புகழ்பெற்ற சிவன் மற்றும் பிள்ளையார் கோயில் ஆகும். இந்த கோயிலானது காசர்கோடு நகரில் இருந்து ஏழு கி.மீ. தொலைவில், மதுவாகினி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. கோவிலின் முதன்மைத் தெய்வம் மதனாந்தீசுரர் எனப்படும் சிவன், அதாவது காமம், ஆசை ஆகியவற்றை கொன்ற கடவுள் என்பதாகும். கோயிலின் முதன்மை தெய்வமாக சிவன் இருந்தாலும் இங்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுவது கருவறையின் தெற்கே நிறுவபட்டுள்ள பிள்ளையாருக்கே ஆகும். காசி விசுவநாதர், தர்மசாஸ்தா, சுப்பிரமணியர், துர்க்கை பரமேஸ்வரி, வீரபத்திரர், குலிகா ஆகியோர் இந்த கோயிலின் பரிவார தெய்வங்களாக உள்ளனர். முதன்மை கருவறைக்குள் பார்வதி தேவியும் உள்ளார்.

புராண முக்கியத்துவம்

மாதுரி என்றொரு இளம்பெண் புல்லறுக்கச் சென்றபோது சட்டென்று அவள் அரிவாள் ஓர் இடத்தில் பட, அவ்விடத்திலிருந்து ரத்தம் கசிய ஆரம்பித்தது. பயந்துபோன அவள் ஓடிப்போய் அவ்வூர் அரசரிடம் விவரத்தைக் கூறினாள். உடன் அங்கு சென்று பார்த்த அரசன் அவளிடம், பெண்ணே, நீ பயப்படாதே ! தெய்வத்தை முழுமையாகப் பிரார்த்தித்துக்கொண்டு உன் கையிலுள்ள அரிவாளை, வேகமாக கிழக்குப்புறமாக வீசியெறி என்றான். அவளும் கண்களை மூடிப் பிரார்த்தித்து, அரிவாளைக் கிழக்குப்புறமாக வீச, அந்த அரிவாள் பாயஸ்வினி ஆற்றின் மேற்குப்புறம் போய் விழுந்தது. அவ்விடத்தில் புலியும் பசுமாடும் அருகருகே புல் மேய்ந்து கொண்டிருந்ததைக் கண்டார்கள். அவ்விடத்தின் தெய்வீகத்தை உணர்ந்த அரசன் அங்கே சிவன் கோயில் ஒன்றை எழுப்பினார். இந்த தெய்வீகம் உறையும் இடத்தைக் கண்டுபிடிக்க உதவிய அந்தப் பெண்ணின் பெயரையே அவ்விடத்துக்குச் சூட்டினான் அரசன். நாளடைவில் அவ்வூர் மாதூர் ஆகிவிட்டது. இந்தக் கோயில் சிவனுக்காகவே கட்டப்பட்டது என்றாலும், இங்குள்ள விநாயகர் மிகவும் பிரசித்தம். கோயிலில் சிவலிங்க பிரதிஷ்டைக்குரிய யாகத்தை ஆரம்பிக்கும் முன்னர் விநாயகருக்குண்டான பூஜைகளை முறைப்படி செய்யத் தவறியதால், திடீரென இடியும் மின்னலுமாக மழை கொட்டோ கொட்டென்று கொட்டி கோயிலைச் சுற்றி பெருவெள்ளம் ! கோயிலே மூழ்கிவிடும் நிலை ! இதற்குக் காரணம் என்னவாக இருக்கும் என்று வேத விற்பன்னர்கள் யோசித்தபோதுதான், தங்கள் தவறை உணர்ந்தார்கள். விநாயகப் பெருமானே ! நாங்கள் அறியாமல் செய்துவிட்ட குற்றத்தை தயைகூர்ந்து பொறுத்தருளுங்கள் என மனமாரப் பிரார்த்தித்து, யாகம் நடக்கவிருக்கும் இடத்திலுள்ள வடகிழக்குச் சுவரில் விநாயகரின் படத்தை வரைந்து வணங்கினார்கள். படம் மட்டும் போதுமா ? அவருக்குப் பிடித்தமான நைவேத்தியம் கொழுக்கட்டை அல்லவா ! அந்தக் கொட்டும் மழையில் கொழுக்கட்டையை எப்படிச் செய்வது என அனைவரும் குழம்பி நின்ற வேளையில், தலைமை வேத விற்பன்னர் ஒரு காரியம் செய்தார். கோலம் போடுவதற்காக வைத்திருந்த பச்சரிசி மாவை ஒரு பிடி அள்ளி, அங்கு எரிந்துகொண்டிருந்த நிலவிளக்கில் சூடாக்கி உருண்டையாக்கி, விநாயகா ! இந்தப் பச்சப்பமே இன்று உனக்கு நைவேத்தியம். இதனைப் பிரியமுடன் ஏற்றுக்கொண்டு, ஒரு விக்னமும் இன்றி இந்த யாகத்தைச் சிறப்பாக முடித்துக் கொடு என்று கண்ணீர்ணீ மல்கப் பிரார்த்தித்தார். அவர் இவ்விதம் பிரார்த்தித்த கணமே மழை முற்றிலுமாக நின்றுபோனது. வரைந்த படத்தில் விநாயகரின் சக்தி முழுமையாகப் புகுந்துகொண்டதற்கு இதனை விட வேறு அத்தாட்சி எதற்கு? சிவலிங்கப் பிரதிஷ்டைக்குப் பின்னர், விநாயகருக்கும் சிலாரூபம் அமைத்தார்கள். நாளாக நாளாக விநாயகரின் உருவம் வளர ஆரம்பித்தது. கோயிலின் மேற்கூரையை இடிக்கும் அளவு அவரின் உருவம் உயர்ந்து வளர, பக்தர்கள் திரும்பவும் விநாயகரைப் பிரார்த்தித்தார்கள். உடன் அவரும் தன் உயரத்தைக் குறைத்துக்கொண்டு பக்கவாட்டில் வளர ஆரம்பித்துவிட்டார். இந்த விநாயகர் பத்தாம் நூற்றாண்டில் பிரதிஷ்டை செய்யப்பட்டவர். 1.68 மீட்டர் உயரத்தில் தெற்கு பார்த்து வீற்றிருக்கிறார்.

நம்பிக்கைகள்

பக்தர்கள் தங்களது பிரார்த்தனைகள் நிறைவேற இங்குள்ள விநாயகரை வழிபட்டுச் செல்கின்றனர். இங்குள்ள விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றியும், சிதறுகாய் உடைத்தும் நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.

சிறப்பு அம்சங்கள்

கோயிலின் முதன்மை தெய்வமாக சிவன் இருந்தாலும் இங்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுவது கருவறையின் தெற்கே நிறுவபட்டுள்ள பிள்ளையாருக்கே ஆகும். இந்த விநாயகர் பத்தாம் நூற்றாண்டில் பிரதிஷ்டை செய்யப்பட்டவர். 1.68 மீட்டர் உயரத்தில் தெற்கு பார்த்து வீற்றிருப்பது சிறப்பு. கும்பாலாவை ஆண்ட முதலாம் நரசிம்மன் பாண்டிய மன்னனுடன் போரிடச் சென்றபோது இந்த விநாயகரைப் பிரார்த்திக்கொண்டு சென்று வெற்றிவாகை சூடினான். அதன் நினைவாக இக்கோயிலில் ஒரு விஜய ஸ்தம்பத்தை நிறுவினான். 1784-ல் இக்கோயிலைச் சூறையாட வந்த திப்பு சுல்தான், தன் வாளால் இக்கோயிலில் உள்ள புண்ணிய தீர்த்த சுவரை இடிக்க ஆரம்பித்தான். அச்சமயம் தாகம் மேலிட, அருகிலுள்ள கிணற்று நீரைப் பருகினான். உடன் ஓர் உற்சாக ஊற்று உள்ளத்தில் பரவிட, ஒரு வாய் நீர் அருந்தியதற்கு இத்தனை நிம்மதியா என விநாயகரின் கருணையால் புத்தி தெளிந்து மலபார் நோக்கி சென்றார். ஆனால் தனது வீரர்களையும் இஸ்லாமிய மதகுருக்களையும் திருப்திப்படுத்த அவர் அடையாளத் தாக்குதலாக வாளால் வெட்டினார். கோயிலைச் சுற்றி கட்டப்பட்ட கட்டிடத்தில் இந்த குறி இன்னும் காணப்படுகிறது. கோயிலின் கட்டிடக்கலையானது யானையின் பின்புறத்தை ஒத்த 3 அடுக்கு கஜபிருஷ்ட வடிவில் உள்ளது. இங்கு இராமாயணக் காட்சிகளை சித்தரிக்கும் அழகிய மரச் சிற்பங்கள் உள்ளன. இந்தக் கோயிலானது துளு நாட்டின் பாரம்பரிய ஆறு பிள்ளையார் கோயில்களில் ஒன்றாகும். கோடை விடுமுறையில் இளம் மாணவர்களுக்கு வேத வகுப்புகள் இந்த கோயிலால் நடத்தப்படுகிறது. இதில் அடிப்படை சமசுகிருதப் பாடங்களும் அடங்கும்.

திருவிழாக்கள்

இங்கு விநாயகருக்கு மூட்டப்ப சேவை என்ற விசேஷ சேவை நடைபெறுகிறது. விநாயகரின் கழுத்துவரை அரிசி மாவு, வாழைப்பழம் மற்றும் வெல்லத்தால் செய்யப்பட்ட அப்பத்தால் மூட வேண்டும். இதுவே மூட்டப்ப சேவை. இந்த மூட்டப்ப சேவைக்கு நாள் குறிக்கும் ஒரு மாதத்துக்கு முன்பிருந்தே அருகிலுள்ள ஆரூர், கடுகன்காவு மற்றும் கனிப்புரு என்ற மூன்று ஊர்களிலும் கணபதி ஹோமம் மற்றும் ஏனைய திருவிழாக்களைக் கொண்டாட ஆரம்பிக்கிறார்கள். மூட்டப்ப சேவை ஆரம்பிப்பதற்கு முன்பாக, முதலில் விநாயகர் விக்கிரத்தைச் சுற்றி கரும்பால் வேலி அமைக்கிறார்கள். அதன்பின் விதவிதமான அபிஷேகங்கள்… கடைசியாக நெய் அபிஷேகம் ! இந்த அபிஷேகம் முடிந்ததும் விநாயகரின் கழுத்துவரை அப்பத்தால் மூடி அப்ப நைவேத்தியம். அப்பம் சார்த்தி புது வஸ்திரத்தால் மூடிவிடுகிறார்கள். அதன்மேல் அருகம்புல்லால் கும்ப வடிவில் மூடி, ஒரு மூட்டை அரிசியையும் விநாயகரின் முன்னே வைத்து விடுகிறார்கள். இதற்குப் பின் மிக விமரிசையாக உதய அஸ்தமன பூஜை, வசந்த பூஜை, சோமவார பூஜை, கணபதி ஹோமம் போன்றவை அனைத்தும் நடைபெறுகின்றன. மறுநாள் அதிகாலை மகா பூஜைக்குப் பின்னர் பிரசாதங்கள் வழங்கப்படுகிறது.

காலம்

10 ஆம் நூற்றாண்டு

நிர்வகிக்கப்படுகிறது

திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு

அருகிலுள்ள பேருந்து நிலையம்

மதூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

காசர்கோடு

அருகிலுள்ள விமான நிலையம்

மங்களூர்

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top