மணிக்கிராமம் திருமேனி அழகேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
முகவரி
மணிக்கிராமம் திருமேனி அழகேஸ்வரர் திருக்கோயில், மணிக்கிராமம், சீர்காழி வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம் – 609104.
இறைவன்
இறைவன்: திருமேனியழகர் இறைவி: செளந்தர நாயகி
அறிமுகம்
நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி – திருவெண்காடு – பூம்புகார் பேருந்து தடத்தில், சீர்காழியில் இருந்து 10 கி.மீ தொலைவில் உள்ளது மணிக்கிராமம். அழகேஸ்வரர் ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. மகாமண்டபத்தில் வலதுபுறம் அன்னை செளந்தர நாயகி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறாள். இங்கு அன்னையின் திருமேனி கருவறைப் பக்கம் சற்றே திரும்பியபடி அமைந்துள்ளது. திருச்சுற்றில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், மகாலட்சுமி, பைரவர், துர்க்கை, நவக்கிரகங்கள் ஆகியோரின் சன்னதிகள் உள்ளன. 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயம், இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. தினசரி ஒரு கால பூஜை நடக்கிறது. இத்தலம் அப்பர் திருவாக்கில் இடம்பெற்றுள்ள சோழ நாட்டு வைப்புதலமாகும்.
புராண முக்கியத்துவம்
கோயில் கல்வெட்டில் தலபுராணமாக பதிக்கப்பட்டுள்ள செய்தி கர்நாடக தேசத்தை வல்லபராஜா என்ற மன்னன் ஆண்டு வந்த நேரம் அது. குழந்தை இல்லையே எனத் தவித்த அந்த மன்னனுக்கு நீண்ட காலத்திற்குப் பிறகு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தை பிறப்பிலேயே ஊமையாகவும், முடமாகவும் இருந்ததால், மன்னனின் வேதனை அதிகரித்தது. குழந்தை வளர்ந்து சிறுவனானதும், அவனுக்கு குஷ்டரோக நோய் பற்றியது. நாளாக ஆக அந்த நோயின் வீரியம் அதிகமாகியது. சிறுவனின் உருவம் மாறியது. பார்க்கவே அருவருப்பான நிலையை அடைந்தான் அந்தச் சிறுவன். மகனின் ஊனத்தால் மன வேதனையில் இருந்த மன்னன், இப்போது மீளாத் துயரில் ஆழ்ந்தான். ஒரு காவலாளியை அழைத்த மன்னன், தன் மகனை தண்டகாவனத்தில் கொண்டு போய் விட்டு விட்டு வரும்படி பணித்தான். காவலாளியும் மன்னன் கூற்றுப்படி அந்தச் சிறுவனை தண்டகாவனத்தில் கொண்டு போய் விட்டுவிட்டு திரும்பினான். வனத்தில் விடப்பட்ட சிறுவன் அங்கிருந்து நடந்தபடியே மதங்காசிரமம் என்னும் மணிக்கிராமம் பகுதிக்கு வந்தான். அங்கு அருள்பாலிக்கும் அழகேஸ்வரர் ஆலயத்தில் உள்ள இறைவனை வணங்கினான். அங்கேயே தங்கினான். கோவில் பூஜைக்காக வரும் அர்ச்சகர், அந்தச் சிறுவனை தினமும் கண்டு வந்தார். ஒரு நாள் இறைவனுக்கு அபிஷேகம் செய்த தீர்த்தத்தை அச்சிறுவனுக்குக் கொடுத்து அருந்த செய்தார். தினசரி அச்சிறுவன் அபிஷேக தீர்த்தத்தை அருந்த அவன் நோய் மெல்ல மெல்ல குணமாகத் தொடங்கியது. அவனது உருவம் மாறத் தொடங்கியது. பேசத் தொடங்கினான். முட நோய் நீங்கியது. இறைவன் அருளால் அவனுடைய உடற்பிணிகள் அனைத்தும் நீங்கி, பேசும் வல்லமையும் பெற்று விளங்கினான். இறைவனாகிய திருமேனியழகர், அவனுக்கு காட்சி தந்து, அவனுடைய வரலாற்றினை சொல்லி, அவனுக்கு தேர், வில் முதலிய படைக்கலங்களயும் பலத்தையும் அருளி, அவனுடைய நாட்டுக்கு அனுப்பி வைத்தார். அவனும் தன் நாடு திரும்பி, நல்லாட்சி புரிந்து, மறவாமல் இறைவனை வழிபட்டு வாழ்ந்தான்.” – பராசர புராணம். மணிக்கிராமத்தார் என்னும் மணி வணிகர் வளமுடன் வாழ்ந்த பகுதி இன்று மணிக்கிராமம் என்ற பெயரில் ஊராக உள்ளது. மணிக்கிராமத்தார் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே கடல் வழிச் சென்று பிற நாடுகளுடன் வாணிகம் செய்து வந்துள்ளனர். சயாம் நாட்டில் ‘தகோபா’ என்னுமிடத்தில் மணிக்கிராமத்தார் வெட்டிய ‘அவணி நாரணம்’ என்னும் ஏரி பற்றிய கல்வெட்டு ஒன்று உள்ளது என்று சொல்லப்படுகிறது.
நம்பிக்கைகள்
இங்கு குழந்தை பாக்கியம் வேண்டுவோர் அன்னையின் சன்னிதியில் தரப்படும் ஐந்து மஞ்சள் பலகைகளை தேய்த்து குளித்து வர, அவர்கள் பலன் காண்பது உறுதி என்கிறார்கள்.
சிறப்பு அம்சங்கள்
இந்த ஆலயத்தில் நவராத்திரி, சிவராத்திரி, சோமவார தினங்களில் இறைவன் இறைவிக்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. கார்த்திகை மாதம் மூன்றாவது வியாழக்கிழமை ஆலயத்தில் உள்ள தட்சிணாமூர்த்திக்கு விசேஷ அபிஷேக, ஆராதனை நடைபெறுகிறது.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத் துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மணிக்கிராமம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
சீர்காழி
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி