Sunday Jul 07, 2024

மணக்கால் ஐயன்பேட்டை அபிமுக்தீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்

முகவரி

அருள்மிகு அபினாம்பிகை சமேத அபிமுக்தீஸ்வரர் திருக்கோயில், பெருவேளூர், மணக்கால் அய்யம்பேட்டை -610 104 குடவாசல் தாலுக்கா, திருவாரூர் மாவட்டம். போன்: +91- 4366 – 325 425

இறைவன்

இறைவன்: அபிமுக்தீஸ்வரர் ( பிரிய நாதர்) இறைவி: அபினாம்பிகை (ஏழவார் குழலி)

அறிமுகம்

மணக்கால் ஐயன்பேட்டை அபிமுகேசுவரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 92ஆவது சிவத்தலமாகும். சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.கும்பகோணம்-குடவாசல், திருவாரூர்ப் பேருந்து சாலையில் மணக்கால் என்ற இடத்தின் அருகே உள்ளது. திருக்கோயில் உள்ளே வைகுந்த நாராயணப் பெருமாளுக்குத் தனி சந்நிதி உள்ளது. இத்தலத்தில் மோகினி வடிவெடுத்த பெருமாள் இறைவனை வழிபட்டு ஆண்வடிவம் பெற்றார் என்பது தொன்நம்பிக்கை.

புராண முக்கியத்துவம்

ஒரு முறை கங்காதேவி சிவபெருமானிடம்,””இறைவா! இவ்வுலக உயிர்கள் எல்லாம் தங்களது பாவங்களை போக்கி கொள்வதற்காக என்னிடம் வருகின்றன. இதனால் அனைத்து பாவங்களும் என்னிடம் சேர்ந்து விட்டன. இதை தாங்கள் தான் போக்கி அருளவேண்டும்,”என வேண்டினாள். கங்கையின் வேண்டுதலை ஏற்ற இறைவன்,””கங்கா! முருகன் தோற்றுவித்த தீர்த்தம் கொண்ட காவிரித் தென்கரைத்திருத்தலத்தில் நீராடி உனது பாவங்களை போக்கி கொள்,”என்றார். அதன்படி கங்கை இத்தலத்தில் நீராடி இறைவனை வழிபட்டு தன் பாவங்களை போக்கி கொண்டதாக வரலாறு கூறுகிறது. எனவே தான் அம்மன் இங்கு ராஜராஜேஸ்வரியாக அமர்ந்த தவக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். தேவாரப்பாடல் பெற்ற கோயில்களில் காஞ்சிபுரம், திருமீயச்சூர் ஆகிய தலங்களில் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கும் அம்மன் இத்தலத்திலும் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிப்பது சிறப்பம்சமாகும். இத்தலத்தில் தான் “லலிதா திரிசதை’ பாடப்பட்டது. இத்தல விநாயகர் கணபதி என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். கங்கை, முருகன், பிருங்கி முனிவர், கவுதம முனிவர் ஆகியோர் இத்தல இறைவனை வழிபட்டுள்ளனர். சுமார் 70 சென்ட் பரப்பளவில் கிழக்குநோக்கிய 5 நிலை ராஜ கோபுரத்துடன் கோயில் அமைந்துள்ளது. கோச்செங்கண்ணன் என்ற சோழமன்னன் கட்டிய மாடக்கோயில்களில் இதுவும் ஒன்று. கோயில் கீழ்பகுதியில் விநாயகரும், அர்த்தநாரீஸ்வரரும் அருள்பாலிக்கிறார்கள். இடதுபக்கம் சிவன் சன்னதியும், நடுவில் முருகன் சன்னதியும், வலது பக்கம் அம்மன் சன்னதியுமாக கோயில் சோமாஸ்கந்த அமைப்பில் உள்ளது. கால பைரவர், ஸ்ரீ பைரவர், வடுக பைரவர் என மூன்று பைரவர்கள் அருள்பாலிக்கிறார்கள்.

நம்பிக்கைகள்

திக்குவாய் உள்ளவர்கள், பேசும் ஆற்றல் இல்லாதவர்கள் இங்கு வந்து வழிபாடு செய்தால் பலன் நிச்சயம். சுக்கிரனுக்குரிய பரிகார ஸ்தலம். கடன் பிரச்னை உள்ளவர்கள் வழிபாடு செய்கிறார்கள்.

சிறப்பு அம்சங்கள்

சிவபெருமானின் தேவாரப்பாடல் பெற்ற தலங்களுள், முருகன் பூஜை செய்த தலங்கள் வைத்தீஸ்வரன் கோவில், கீவளூர், பெருவேளூர், திருவிடைக்கழி ஆகியன. அதேபோல், முருகன் இத்தலத்தில் தங்கி தவம் செய்து தன்பெயரால் தீர்த்தம் உண்டாக்கி, சிவனை வழிபட்டு வேலாயுதமும், அருளாற்றலும் பெற்ற தலம். முருகன் பூஜை செய்த தலமாதலால் இத்தலம் “பெருவேளூர்’ எனப்பட்டது. அருணகிரிநாதர் திருப்புகழ் பாடிய தலம். தேவ அசுரர்கள் பாற்கடலை கடைந்து அமுதம் எடுத்த போது, அது அசுரர்களின் கையில் கிடைக்காமல் செய்ய பெருமாள் மோகினி அவதாரம் எடுத்தார். இவர் தனது அவதார நோக்கம் நிறைவேறிய பின், மீண்டும் தனது ஆண் உருவத்தை பெறுவதற்காக இத்தலத்து இறைவனை வேண்டினார் என தல வரலாறு கூறுகிறது. பெருமாள் இங்கு தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். சரஸ்வதீஸ்வரர் கோயிலின் கீழ் பிரகாரத்தில் ஆறு சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இதில் ஒரு லிங்கம் “சரஸ்வதீஸ்வரர்’ என்ற திருநாமத்துடன் விளங்குகிறது. முன்பு ஒரு முறை ஊமைச்சிறுவன் ஒருவனை அவனது பெற்றோர் இந்த சரஸ்வதீஸ்வரர் சன்னதிக்கு அழைத்து வந்து வழிபாடு செய்தனர். இவர்களது வழிபாட்டில் மனமிறங்கிய சிவன் சிறுவனுக்கு பேசும் சக்தியை தந்தார் என கோயில் வரலாறு கூறுகிறது.

திருவிழாக்கள்

கந்த சஷ்டியும், வைகாசி விசாகமும் இத்தலத்தின் முக்கிய திருவிழா ஆகும். இது தவிர சிவனுக்குரிய அனைத்து விசேஷ நாட்களும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்துசமயஅறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

ஐயன்பேட்டை

அருகிலுள்ள இரயில் நிலையம்

கும்பகோணம்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top