மஞ்சக்கொல்லை தண்டாயுதபாணி, முத்தாலம்மன் திருக்கோயில், கடலூர்
முகவரி :
மஞ்சக்கொல்லை தண்டாயுதபாணி, முத்தாலம்மன் திருக்கோயில்,
மஞ்சக்கொல்லை,
கடலூர் மாவட்டம் – 608601.
இறைவன்:
தண்டாயுதபாணி
இறைவி:
முத்தாலம்மன்
அறிமுகம்:
அருட்பிரகாச வள்ளலாரின் ஆலோசனைப்படி தாய்க்கும் மகனுக்கும் ஒரே வளாகத்தில் கோயில் கட்டப்பட்ட தளம் கடலூர் மாவட்டத்தில் உள்ள மஞ்சக்கொல்லை. கடலூர் மாவட்டம், புவனகிரி, சேத்தியாத்தோப்பு ஆகிய ஊர்களில் இருந்து மஞ்சக்கொல்லைக்கு நேரடி பேருந்து வசதி உள்ளது.
புராண முக்கியத்துவம் :
அக்காலத்தில் வள்ளலார் இராமலிங்க அடிகளார் தில்லையம்பலவாணனை தரிசிக்க கடலூரில் இருந்து இவ்வூர் வழியாக நடை பயணம் செல்வது வழக்கம். அங்கே அவருக்கு சீடர்கள் நிறைய இருந்தனர். ஒருநாள் அவரிடம் எங்கள் ஊரில் ஆலயம் கட்ட ஆசை, அதனால் வள்ளலாரிடம் என்ன கோவில் கட்டுவது என ஆலோசனை கேட்டனர். அவரும் ஒரே வளாகத்தில் தண்டாயுதபாணி முத்தாலம்மன் கோயில் கட்டுங்கள் என கூறி குறிப்பிட்ட இடத்தை தேர்வு செய்து தந்தார். அந்த ஊர் மக்கள் தண்டாயுதபாணிக்கு முத்தாரம்மனுக்கு முதலில் கீற்றுக்கொட்டகை அமைத்து ஆலயம் கட்டப்பட்டது. பின்னர் ஒருகாலகட்டத்தில் கல்கட்டத்திற்கு மாறி கும்பாபிஷேகம் கண்டது.
நம்பிக்கைகள்:
தண்டாயுதபாணிக்கு இளநீர் அபிஷேகம் செய்து பிரார்த்தனை செய்து கொண்டால் இன்னல்கள் அகன்று குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும். நீண்ட நாட்களாக இருக்கும் திருமணத்தடை அகன்று இனிய வாழ்வு அமைகிறது. அவ்வாறு தடையாக இருந்து திருமணம் கைகூடி அவர்கள் தம்பதி சமேதராக இவ்வாலயத்திற்கு வந்து முருகனின் மனம் குளிர சந்தன அபிஷேகம் செய்து மகிழ்கிறார்கள்.
குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியினர் அம்மனை வேண்டிக் கொண்டு தொட்டில் கட்டி வழிபாடு செய்தால் விரைவில் குழந்தை பாக்கியம் கிட்டும். வெள்ளிக்கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்தால் ஆரோக்கியமான வாழ்வை அருள்கிறாள்.
சிறப்பு அம்சங்கள்:
முதலில் இருப்பது தண்டாயுதபாணி கோயில் உள்ளே நுழைந்ததும் மயில் பலிபீடத்தை தொடர்ந்து கருவறையில் தண்டாயுதபாணி கையில் வேலுடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். இவருக்கு முன்பாக சிறு மாடத்தில் வள்ளலாரும் தரிசனம் தருகிறார். விவசாயத்தை தொழிலாக கொண்ட இக்கிராம மக்கள் விவசாய பணிகளை தொடங்குமுன் விதைகளை கோயிலில் வைத்து பிரார்த்தனை செய்கின்றனர். பின் அதை வைத்து விவசாயம் செய்ய எந்த இடர்பாடும் இல்லாமல் நல்ல விளைச்சல் கிடைக்கிறது. முதல் அறுவடையில் கிடைக்கும் தானியத்தில் குறிப்பிட்ட பங்கினை முருகனுக்கு சமர்ப்பித்து தங்கள் நன்றிக் கடனை செலுத்துகிறார்கள்.
தண்டாயுதபாணி ஆலயத்தை அடுத்து முத்தாரம்மன் ஆலயம் உள்ளது மகா மண்டபத்தில் விநாயகர் மற்றும் முருகன் சன்னதிகள் அமைந்துள்ளன தொடர்ந்து கருவறையில் அமர்ந்த கோலத்தில் காட்சி தருகிறாள்.
திருவிழாக்கள்:
வள்ளலாரின் வழிகாட்டுதலின்படி ஆலயம் கட்டப்பட்டதால் ஒவ்வொரு பூச நட்சத்திரத்தன்று சிறப்பு அபிஷேகம் மற்றும் அன்னதானம் நடைபெறுகிறது. தைப்பூசத்தன்று சிறப்பு அபிஷேகம் நடைபெற்று சந்தனகாப்பு அலங்காரத்தில் தண்டாயுதபாணி காட்சி தருவார். தண்டாயுதபாணிக்கு பத்து நாள் சித்ரா பவுர்ணமி உற்சவம் விமரிசையாக நடைபெறுகிறது. கொடியேற்றத்துடன் தொடங்கும் விழாவில் தினமும் முருகனுக்கு அபிஷேக அலங்காரங்கள் ஆராதனைகள் நடைபெறுகிறது. ஒன்பதாம் நாள் இரவு வள்ளி-தெய்வானை சமேத முருகப் பெருமான் வீதியுலா வருவார். அதனால் தண்டாயுதபாணி மற்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு காவடி திருவிழா நடைபெறும். ஆடி மாதம் அம்மனுக்கு உற்சவம் நடைபெறுகிறது ஆடி கடைசி வெள்ளியன்று சிறப்பு அபிஷேகம் சாகை வளர்த்தல் முத்துப் பல்லக்கில் அம்மன் வீதிஉலா என அமர்க்களப்படும்.
காலம்
1300 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மஞ்சக்கொல்லை
அருகிலுள்ள இரயில் நிலையம்
கடலூர்
அருகிலுள்ள விமான நிலையம்
பாண்டிச்சேரி