பொட்டவெளி காமாட்சியம்மன் சமேத கைலாசநாதர் திருக்கோயில், கடலூர்
முகவரி :
பொட்டவெளி காமாட்சியம்மன் சமேத கைலாசநாதர் திருக்கோயில்,
பொட்டவெளி,
கடலூர் மாவட்டம் – 607302.
இறைவன்:
கைலாசநாதர்
இறைவி:
காமாட்சியம்மன்
அறிமுகம்:
பத்மாசுரன் தவம் செய்த இடமாக கருதப்படுகிறது கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பொட்டவெளி என்னும் கிராமம். இங்கு சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன் சோழர் காலத்துக் கட்டடக் கலையில் கட்டப்பட்டது காமாட்சியம்மன் சமேத கைலாசநாதர் திருக்கோயில். அதற்கான கல்வெட்டுச் சான்றுகளும் கோவிலில் உள்ளன. சமய குரவர்கள் நால்வரும் வடலூர் ராமலிங்க சுவாமிகளும் இவ்வாலயத்திற்கு வந்து தரிசனம் செய்து இருப்பதாக கூறுகிறார்கள். மிகவும் சிதிலமடைந்த இந்த கோயில், சில ஆண்டுகளுக்கு முன்பு பக்தர்களின் பங்களிப்பால் புத்தம்புது கோயிலாக புதுப்பிக்கப்பட்டது.
கடலூர் மாவட்டம், புவனகிரியில் இருந்து குறிஞ்சிப்பாடி செல்லும் சாலையில் 10 கிலோமீட்டர் தொலைவில் பொட்டவெளி கிராமம் உள்ளது. பேருந்து நிறுத்தத்திலிருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று கோயிலை அடையலாம்.
புராண முக்கியத்துவம் :
புராணகாலத்தில் பத்மாசுரன் என்ற ஓர் அரக்கன் இருந்தான். ஒருசமயம் அவன் பரமனை நோக்கி கடும் தவம் புரிந்தான். அதனால் மகிழ்ந்த சிவபெருமான் அவர் முன் தோன்றி என்ன வரம் வேண்டும் என்று கேட்டான். உடனே பத்மாசுரன் உங்களுக்கு இணையான ஒருவரைத் தவிர வேறு யாராலும் எனக்கு அழிவு வரக்கூடாது என்று வரம் கேட்டான். இறைவன் அப்படியே வரம் தந்தார் என்றும் முருகப்பெருமானால் பத்மாசுரன் அழிவு நிகழ்ந்தது என்று புராணங்கள் சொல்கின்றன. இந்த இடம் பத்மாசுரன் தவம் செய்த இடமாக கருதப்படுகிறது
நம்பிக்கைகள்:
திருமண தடை உள்ளவர்கள், நீண்ட நாட்களாக குழந்தை இல்லாமல் இருக்கும் தம்பதியர், கடன் பிரச்சினையால் அவதிப்படுபவர், வியாதியால் அவதிபடுவோர், இறைவன் கைலாசநாதரை விபூதி காப்பு சாத்தி வேண்டிக்கொண்டால் விரைவில் அவர்கள் கோரிக்கை நிறைவேறுவதாக கூறப்படுகிறது.
இங்குள்ள பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி அன்று செவ்வரளி பூக்களால் மாலை தொடுத்து அணிவித்து நெய்தீபம் ஏற்றி மனதாரப் பிரார்த்தனை செய்து கொண்டால் கண் திருஷ்டி அகலும். வீட்டில் தீய சக்திகள் அண்டாது என்பது நம்பிக்கை.
பிரதோஷ நாட்களில் நந்தி பகவானுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகிறது. படித்துவிட்டு வேலையில்லாமல் இருப்பவர்கள் தங்கள் கல்வி சான்றிதழ்களை பிரதோஷத்தன்று பூஜையில் வைத்து வழிபட்டால் விரைவில் நல்ல வேலை கிடைக்கின்றன.
கார்த்திகை மாத திங்கட்கிழமைகளில் பஞ்சாட்சர மந்திரத்தை சொல்லி பிரகாரத்தை 8, 18, 51, 108 என்ற கணக்கில் சுற்றிவந்தால் சகலமும் கிட்டும். மார்கழி மாதத்தில் தினமும் திருப்பள்ளியெழுச்சி ஐப்பசி மாதம் அன்னாபிஷேகத்தில் புதிய இங்கு பிரசாதமாக தரப்படும் அன்னத்தை உட்கொண்டால் நோய் நொடிகள் அண்டாது என்கிறார்.
சிறப்பு அம்சங்கள்:
கிழக்கு நோக்கிய ஆலயம். உள்ளே நுழைந்ததும் பிரதோஷ நந்தி தொடர்ந்து மகாமண்டபம் அதன் முகப்பில் சிவன், பார்வதி, விநாயகர், முருகன், சுதை சிற்பங்கள் காட்சி தர அவர்களை வணங்கி விட்டு உள்ளே சென்றால் நந்தி, பலிபீடம், விநாயகர், முருகன் தரிசனம் கிடைக்கிறது. அர்த்தமண்டபத்தில் பன்னிரு திருமுறைகள் அடுக்கி வைக்கப்பட்டு ருத்ராட்ச மாலை அணிவிக்கப்பட்டு உள்ளது.
அடுத்துள்ள கருவறையில் மூலவர் கைலாசநாதர் லிங்கம் மூர்த்தமாக அருள்பாலிக்கிறார். அவருக்கு கீழே பிரதோஷ நாயகர் உற்சவர் சிலை உள்ளது. கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி, விநாயகர், அண்ணாமலையார், முருகன், வள்ளி, தெய்வானை, பிரம்மா, துர்க்கை, சண்டிகேஸ்வரர் சன்னதிகள் உள்ளன. பிரகாரத்தில் முன்புறம் பைரவர், சிவலிங்கம், விநாயகர், சூரியன் சந்திரன் சன்னதிகள் இடதுபுறம் நால்வர் சன்னதியும் சேக்கிழார் சன்னதியும் உள்ளது.
மூலவருக்கு முன்னால் இடப்பக்கம் காமாட்சி அம்மன் சன்னதி இருக்கிறது. இதில் தெற்கு கிழக்கு நோக்கி இரு அம்மன்கள் தரிசனம் தருவது விசேஷம் .இந்த ஆலயம் புனரமைப்பு செய்யப்பட்ட போது பூமியிலிருந்து ஒரு அம்மன் சிலை கிடைத்தது. அந்த அம்மணியை கிழக்கு நோக்கி வைத்து வழிபாடு செய்து வருகிறார்கள்.
திருவிழாக்கள்:
விநாயகர் சதுர்த்தி, முருகனுக்கு சஷ்டி திதி, வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடக்கிறது. மகா சிவராத்திரி அன்று கோவில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கும். நான்கு கால பூஜைகள் நடைபெறும். அப்போது வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்படும். சுற்றுப்புற கிராம மக்கள் சிவராத்திரி அன்று இரவு முழுக்க கோவிலை தரிசனம் செய்வார்கள்.
காலம்
2000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத்துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பொட்டவெளி
அருகிலுள்ள இரயில் நிலையம்
கடலூர்
அருகிலுள்ள விமான நிலையம்
பாண்டிச்சேரி