Sunday Jul 07, 2024

பையூர் பிள்ளைவயல் காளியம்மன் திருக்கோயில், சிவகங்கை

முகவரி :

பையூர் பிள்ளைவயல் காளியம்மன் திருக்கோயில்,

பையூர்,

சிவகங்கை மாவட்டம் – 630203.

இறைவன்:

பிள்ளைவயல் காளியம்மன்

அறிமுகம்:

 தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பையூர் கிராமத்தில் அமைந்துள்ள பிள்ளைவயல் காளியம்மன் கோயில் காளிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த கோவில் 500 ஆண்டுகள் பழமையானது. கோயில் வயல்வெளியில் இருப்பதாலும் இந்த அம்மனுக்கு, “பிள்ளைவயல் காளியம்மன்,’ என்று பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது.

இக்கோயில் பற்றி ஆராய்ச்சி செய்த அருங்காட்சியக அதிகாரிகள் அம்மன் சிலை வடிவத்தை வைத்து பார்க்கும்போது இது ஆந்திராவில் செய்யப்பட்ட சிலை என்றும், 500 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதையும் உறுதி செய்தனர்.

புராண முக்கியத்துவம் :

       500 ஆண்டுகளுக்கு முன் பையூர் கிராம பகுதியில் வசித்த மக்கள் தங்களைப் பாதுகாக்க அம்மனின் உதவியை வேண்டினர். அவர்களின் கருத்தாக்கத்தால் உருவானாள் காளியம்மன். பல ஆண்டுகளாக அவர்கள் காளியை சிங்காரத்தோப்பு ஊரணிக்கரையில் வைத்து வழிபட்டனர். முஸ்லிம் மன்னர்களின் படையெடுப்பின் போது, இந்து கோயில்கள் அழிக்கப்பட்டன. அச்சமயத்தில் இந்த காளியை பாதுகாக்க எண்ணி, அம்மன் சிலையை கண்மாய்க்குள் இருந்த கிணற்றில் கல்லைக்கட்டி போட்டு விட்டனர். பல ஆண்டுகள் கழித்து கண்மாய் தூர் வாரும்போது, சிலை வெளிப்பட்டது. பின்பு அம்பிகையை தற்போதுள்ள இடத்தில் பிரதிஷ்டை செய்தனர். தன்னைக் காக்கும் சோதனையை மக்களுக்கு தந்த அம்பிகை, அந்த சோதனையில் வென்ற மக்களை இப்போது பாதுகாத்து வருகிறாள்.

நம்பிக்கைகள்:

இக்கோயிலின் சிறப்பே குழந்தை பாக்கியம் தருவதுதான். திருமணமான தம்பதியர் இக்கோயிலுக்கு வந்து வழிபட்டால் அடுத்தாண்டு அவர்களுக்கு குழந்தை பாக்கியம் நிச்சயம் என்பது நம்பிக்கை.

சிறப்பு அம்சங்கள்:

      அம்பாள் மக்களை சோதிப்பாள், தன் பிள்ளைகள் சோதனையில் வெற்றி பெறுகிறார்களா என கவனிப்பாள். இப்படித்தான் சிவகங்கை மாவட்டம் பையூர் பிள்ளைவயல் காளியம்மன் 500 ஆண்டுகளுக்கு முன் மக்களை சோதித்தாள். முஸ்லிம் படையெடுப்பின் போது, தன் சிலைக்கு ஆபத்து வரச் செய்தாள். மக்களோ சிலையை பாதுகாத்து, அவள் வைத்த சோதனையில் வெற்றி பெற்றனர். இப்போது பராமரிப்பே இல்லாமல், கஷ்டப்படுவது போல நடிக்கிறாள். தன்னை பாதுகாக்க யாராவது ஒருவர் முன் வருகிறார்களா என காத்துக் கொண்டிருக்கிறாள் இந்த ஆந்திரத்து ஆதிபராசக்தி.

திருவிழாக்கள்:

ஆண்டு தோறும் ஆடி முதல் வெள்ளியன்று காப்புக்கட்டு, தீமிதி விழாக்கள் நடக்கும். கடைசி வெள்ளியன்று பூச்சொரிதல் திருவிழா சிறப்பாக நடக்கும். மாதந்தோறும் சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது.

காலம்

500 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

பையூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

சிவகங்கை

அருகிலுள்ள விமான நிலையம்

மதுரை

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top