பேராவூர் ஆதித்தேஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்
முகவரி
பேராவூர் ஆதித்தேஸ்வரர் திருக்கோயில், பேராவூர், மயிலாடுதுறை வட்டம் நாகப்பட்டினம் மாவட்டம் – 612203
இறைவன்
இறைவன்: ஆதித்தேஸ்வரர் இறைவி: ஞானாம்பிகை
அறிமுகம்
பேராவூர் ஆதித்தேஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் நாகபட்டினம் மாவட்டம், பேராவூர் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும். ஆடுதுறை – கோமல் சாலையில் சுமார் 7 கி.மீ. சென்று வீரசோழன் ஆற்றங்கரை என்னுமிடத்தில் வலப்புறமாக பிரியும் சாலையில் சுமார் 1 கி.மீ. சென்றால் பேராவூரை அடையலாம். திருவாவடுதுறை மற்றும் குத்தலாத்தில் இருந்தும் இத்தலத்தை அடையலாம். திருவாவடுதுறையில் இருந்து தென்கிழக்கே சுமார் 5 கி.மீ. தொலைவிலும், குத்தலாத்தில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவிலும் இத்தலம் உள்ளது. நச்சினார்க்குடி என்ற ஊரிலிருந்து 3 கி.மீ., சாத்தனூர் என்ற ஊரிலிருந்து சுமார் 3 கி.மீ. இத்தலத்தில் இறைவன் ஆதித்தேஸ்வரர் என்று பெயருடன் எழுந்தருளியுள்ளார். அம்பிகையின் திருநாமம் ஞானாம்பிகை. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இத்தலம் அப்பர் திருவாக்கில் இடம்பெற்றுள்ள சோழ நாட்டு வைப்புத்தலமாகும்.
புராண முக்கியத்துவம்
ஆதித்ய சோழனால் கட்டப்பட்ட இக்கோவில் ஒரு கற்றளியாகும். மூலவர் சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார். கோயிலின் பெயர் ஆதிச்தேச்சுரம் எனப்படும். கோவிலில் தற்போது திருப்பணி வேலைகள் தொடங்கப்பட்டு பாதியில் நின்று உள்ளது. ஆலயத்திலுள்ள பரிவார மூர்த்தங்கள் யாவும் பாலாலயம் செய்யப்பட்டு, கோவிலுக்கு வெளியே ஒரு கூரைக் கொட்டகையில் வைக்கப்பட்டுள்ளன. மூலவர் ஆதித்தேஸ்வரர் மட்டும் கருவறையில் உள்ளார். விநாயகர் சந்நிதி, முருகர் சந்நிதி, கஜலட்சுமி சந்நிதி, சண்டிகேஸ்வரர் சந்நிதி ஆகியவை புதிதாக கட்டப்பட்டு உள்ளே மூர்த்தங்கள் இன்றி காட்சி அளிக்கின்றன. ஆலயத்தின் பின்புற மதிற்சுவர் மட்டுமே உள்ளது. மற்ற மூன்று பக்கமும் மதிற்சுவர் இல்லாமல் ஆலயம் காட்சி அளிக்கிறது. பூஜைகளும் நின்று விட்டன.
சிறப்பு அம்சங்கள்
அம்பிகை ஓரு சாபத்தால் பசுவாக பூலோகத்தில் அலைந்து, திரிந்து, மகாவிஷ்னுவால் பாதுகாக்கப்பட்டு, திருவாவடுதுறையில் சாபம் நீங்கப் பெற்று, திருமணஞ்சேரியில் மீண்டும் சிவபெருமானை மணந்து கொண்ட புராண நிகழ்ச்சிகள் மயிலாடுதுறையை அடுத்துள்ள பல தலங்களுடன் தொடர்பு கொண்டுள்ளன. அவற்றில் பேராவூராகிய இத்தலமும் ஒன்று என்பது இத்தலத்தின் சிறப்பு. இத்தலத்தில் தான் சிவபெருமான் பெரியதோர் எருதின் வடிவம் கொண்டு பசு வடிவிலிருந்த அம்பிகையைப் பின்தொடர்ந்ததாகக் கூறப்படுகிறது. இத்தலத்திற்கு அருகிலுள்ள சாத்தனூரில் தான் பசுக்களை மேய்த்துக் கொண்டு வந்த மூலன் என்ற இடையன் உயிர் பிரிய, பசுக்கள் அவன் உடலைச் சுற்றி நின்று அழுது கொண்டிருந்தது. கைலாயத்தில் திருநந்திதேவர் அருள் பெற்ற சிவயோகி ஒருவர் காவிரியாற்றின் கரைகளிலுள்ள திருப்பதிகளை தரிசித்துக் கொண்டு வரும் வேளையில் சாத்தனூரை அடைந்தார். பசுக்கள் கூட்டம் ஒன்று நின்று அழுவதைக் கண்ட சிவயோகியார், கூடு விட்டுக் கூடு பாயும் தனது சக்தியைப் பயன்படுத்தி இடையன் உடலில் புகுந்தார். திருமூலராக அவர் மாறி 3000 ஆண்டுகள் வாழ்ந்து ஆண்டிற்கு ஒன்றாக ஒரு பாடல் இயற்றினார். அதுவே திருமந்திரம் என்ற நூலாகும்.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத் துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பேராவூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
மயிலாடுதுறை
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி