Friday Jan 10, 2025

பெரிய கொழப்பலூர் திருக்குராரீஸ்வரர் திருக்கோடில், திருவண்ணாமலை

முகவரி :

பெரிய கொழப்பலூர் திருக்குராரீஸ்வரர் திருக்கோடில்,

பெரிய கொழப்பலூர், சேத்துப்பட்டு அருகில்,

திருவண்ணாமலை மாவட்டம் – 632313.

இறைவன்:

திருக்குராரீஸ்வரர்

இறைவி:

 திரிபுரசுந்தரி

அறிமுகம்:

 அசுவினி நட்சத்திரக்காரர்கள் அவசியம் வழிபடவேண்டிய அற்புதமான சிவாலயம் ஒன்று திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு அருகில் உள்ளது. பொன் – பொருள், பதவி, சொத்து, செல்வம்-செல்வாக்கு போன்ற வற்றை இழந்து தவிக்கும் அன்பர்கள், இந்தத் தலத்துக்கு ஒருமுறை சென்று வழிபட்டால் போதும்; இழந்த சிறப்புகளை மீண்டும் பெற்று மகிழலாம் என்கிறார்கள் ஆன்மிகப் பெரியவர்கள். பெரிய கொழப்பலூர் என்று வழங்கப்படும் இவ்வூர், இந்திரனும் பாற்கடலில் தோன்றிய வெள்ளைக் குதிரையும் வழிபட்டு சிவனருள் பெற்ற க்ஷேத்திரம் என்கின்றன புராணங்கள்.

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப் பட்டிலிருந்து ஆரணி செல்லும் நெடுஞ்சாலையில், சேத்துப்பட்டில் இருந்து சுமார் 9 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது பெரிய கொழப்பலூர். இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு கால பூஜை நடக்கும் ஆலயம் இது. ஆலயத்தின் எதிரில் உள்ள ஸ்வேத அஸ்வ தீர்த்தம் சீரமைக்கப்பட வேண்டிய நிலையில் உள்ளது.

புராண முக்கியத்துவம் :

ஒருமுறை நாரத முனிவர் கடற்கரை வழியே சென்று கொண்டிருந்த போது, வெண்குதிரை ஒன்று கண்ணீர் வடித்தபடி நின்றிருந்ததைக் கண்டார். அருகில் சென்றதும் அது, பாற்கடலில் உதித்த அபூர்வ புரவி என்பதை அறிந்துகொண்டார். “அமிர்தத்துடன் பிறந்த உனக்கு என்ன அவலம் நேர்ந்தது. ஏன் இங்ஙனம் வருத்தத்தில் இருக்கிறாய்?’’ என்று விசாரித்தார் நாரதர். “கத்ரு எனும் நாகக் கன்னிகைக்கும் அவளின் சகோதரி விநதைக்கும் இடையே உண்டான போட்டியை நீங்கள் அறிவீர்கள். என் வால் என்ன வண்ணத்தில் திகழ்கிறது என்பது குறித்துதான் அவர்களுக்கு இடையேயான வாக்குவாதமும் போட்டியும். என்னுடைய வால் கறுப்பு நிறத்தினாலானது என்பது கத்ருவின் வாதம். அதை மெய்ப்பிக்க வெண்மையான என் வாலில் தன் நாகக் குழந்தைகளைச் சுற்றிக்கொள்ளச் செய்தாள். கபடத்தால் சகோதரியை அடிமையாக்கினாள் என்பதை அறிவீர்கள்.

இந்த நிலையில், என் வாலில் சுற்றிய நாகங்களில் ஒன்றான தக்ஷகனின் விஷம் என் தொடைப் பகுதியைத் தாக்கியது. நான் பாற்கடலில் பிறந்த காரணத்தால், உயிருக்கு ஆபத்தில்லை. ஆனால் என் தூய வெண்மை நிறம் கொஞ்சம் கொஞ்சமாக பாழ்ப்பட்டு வருகிறது. இந்தக் கோலத்தில் நான் எப்படி தேவலோகம் செல்வது’’ என்று வருந்தியது. சற்றுநேரம் சிந்தித்த நாரதர், “இத்திருத்தலத்திற்க்கு சென்று ஈசனை வழிபட்டால், விமோசனம் பெறலாம்’’ என்று ஆலோசனையும் ஆசியும் கூறிச் சென்றார்.


வெண்புரவியும் நாரதர் குறிப்பிட்ட தலத்தை அடைந்து, சேயாற்றில் நீராடி சுயம்புவாய் திகழும் குரேசப் பெருமானை நாவால் நக்கியும், நறுமணப் பூக்களால் அர்ச்சித்தும் வழிபட்டது. அதன் பக்தியை மெச்சிய சிவபெருமான், தன்னை ஒருமண்டல காலம் பூஜிக்கும்படி அசரீரியாக அருள்வாக்குக் கொடுத்தார். அதன்படி 48 நாட்கள் பூஜித்து வழிபட்டது வெண்புரவி. நிறைவில் உமையம்மையுடன் ரிஷபாரூடராக அந்தப் புரவிக்குக் காட்சி கொடுத்த சிவபெருமான், அதன் மேனியை மீண்டும் பொலிவுறச் செய்தார். புரவி மகிழ்ந்தது. “இறைவா! உங்கள் மீதான பக்தியில் நான் மனம் குழைந்து பூஜித்த இந்தத் தலம் இனி `குழைசை’ என வழங்கப் பெற வேண்டும்’’ என்று வேண்டியது. இறைவனும் அப்படியே வரம் தர, அவரை வணங்கித் தொழுத வெண்புரவி தேவலோகத்தை அடைந்தது.

இங்ஙனம் வெள்ளைக் குதிரை வழிபட்டதால், இவ்வூர் இறைவனுக்கு ஸ்வேதபரீஸ்வரர் என்றும் ஸ்வேத அஸ்வேஸ்வரர் என்றும் திருப்பெயர்கள் உண்டு. அதேபோல் இப்பெருமான் குரா மரத்தடியில் அருள்வதால், திருக்குராவடி நாதர், திருக்குரா ஈஸ்வரன் என்றும் அழைக்கப்படுகிறார்.

சிறப்பு அம்சங்கள்:

                   ஊரின் வடக்கே அமைந்துள்ளது ஈசனின் ஆலயம். ஸ்வாமி கிழக்கு நோக்கி அருள்கிறார். இரண்டு கோஷ்டங்கள் உள்ளன. கருவறையில், குதிரையின் குளம்படி பட்ட அடையாளத்துடன் சுயம்பு மூர்த்தியாக அருள்கிறார் ஸ்வேத அஸ்வேஸ்வரர். அம்பாள் சிவசுந்தரி சந்நிதி தெற்கு நோக்கி உள்ளது. அம்பாள் திரிபுரசுந்தரி என்றும் அழைக்கப்படுகின்றாள்.

ஆலயத்தின் வாயு மூலையில் வாயு லிங்கம், ஈசான்ய திசையில் பரமேச கூபம் கிணறு ஆகியன உள்ளன. சோழர்காலத்துக் கல்வெட்டு களும் இங்கே உள்ளன.  அஸ்வமாகிய குதிரை வழிபட்டதால் அஸ்வினி நட்சத்திரப் பரிகாரத் தலமாகத் திகழ்கிறது இந்த ஆலயம். வெள்ளைக் குதிரை இழந்த பொலிவை மீண்டும் பெற்ற தலம், இந்திரன் தன் செல்வாக்கை அதிகாரத்தை மீட்டெடுக்க வரம் தந்த க்ஷேத்திரம் இது.  தலவிருட்சம் குரா மரம். ஆலய வளாகத்தின் உள்ளேயே பூந்தோட்டம் அமைந்திருப்பது சிறப்பு.

காலம்

1500 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

பெரிய கொழப்பலூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருவண்ணாமலை

அருகிலுள்ள விமான நிலையம்

பாண்டிச்சேரி

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top