Monday Jan 27, 2025

பெரியநாயக்கன்பாளையம் ஸ்ரீ ரங்கநாதர் திருக்கோயில், கோயம்பத்தூர்

முகவரி :

பெரியநாயக்கன்பாளையம் ஸ்ரீ ரங்கநாதர் திருக்கோயில்,

பாலமலை, பெரியநாயக்கன்பாளையம்,

கோயம்பத்தூர் மாவட்டம்,

தமிழ்நாடு- 641020.

தொலைபேசி: +91-94433 48564

இறைவன்:

ஸ்ரீ ரங்கநாதர்

அறிமுகம்:

 பெரியநாயக்கன்பாளையம் ஸ்ரீ ரங்கநாதர் கோயில் தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தில் அமைந்துள்ள விஷ்ணுவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள மூலவர் ரங்கநாதர் என்று அழைக்கப்படுகிறார். ரங்கநாதர் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் பக்தர்களின் மனதை மகிழ்விக்கிறார். தும்பிக்கை ஆழ்வார் மற்றும் அன்னை ஆகியோர் அந்தந்த சன்னதிகளில் இருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். இக்கோயில் பாலமலை பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ளது. இந்த இடம் இரண்டு மலைகளுக்கு இடையில் உள்ளது. கோயம்புத்தூரில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் பெரியநாயக்கன்பாளையத்தில் கோயில் உள்ளது.

புராண முக்கியத்துவம் :

முன்னொரு காலத்தில் காலவ மகரிஷி இறைவன் நாரயணனைக் குறித்து பல ஆண்டுகள் தவம் இருந்தார். அப்போது, விஸ்வாசு என்ற கந்தவர்னின் குமாரன் துர்தமன் தனது மனைவிகளோடு குளத்தில் நீராடி கொண்டு இருந்தான். கைலாசத்தில் இருந்த ஈஸ்வரனை வழிபட்டு வசிஷ்ட முனிவர் திரும்பி கொண்டு இருந்தார். அப்போது, துர்தமன் மனைவிகள் நீராடுவதை நிறுத்தி கொண்டு குளக்கரையில் ஏறி கொண்டனர். ஆனால், துர்தமன் தொடர்ந்து ஆடை அணியாமல் குளித்துக் கொண்டு இருந்தான். இதனால் சினமடைந்த வசிஷ்ட மகரிஷி துர்தமனை அரக்கனாக சபித்தார். இதனால் துர்தமனின் மனைவிகள் கலக்கமடைந்தனர்.

தங்களுக்கு மாங்கல்ய பிச்சை அளிக்க வேண்டும் என்று வசிஷ்ட மகரிஷியிடம் வேண்டினார். அவர்கள் பிரார்த்தனையால் மனமிரங்கிய வசிஷ்டரும் இன்னும் சிறிது காலத்தில் உங்கள் நாயகன் உங்களை வந்தடைவான் என்று கூறினார். அது வரை நீங்கள் பகவானை பூஜித்து வாருங்கள் என்றார். இதன்படியே துர்தமனும் பல ஆண்டு காலம் காடு மேடுகளில் சுற்றி அலைந்தான். இந்நிலையில் காலவ மகரிஷியை கண்டு ஆந்திரமடைந்து அரக்க உருவில் இருந்த துர்தமன் காலவ மகரிஷியை துன்புறுத்த துவங்கினான். அரக்கனின் பிடியில் சிக்கி தவித்த காலவ மகரிஷி பெருமாளை வேண்ட பெருமாளும் திருக்கரத்தை பயன்படுத்தி அரக்கனை அடக்கினார். பின்னர், காலவ மகரிஷி பெருமாளை வழிபட்டார். துர்தமனும் சாப விமோசனம் பெற்றான். இந்த நிகழ்வு இங்கு நடந்ததாக கூறப்படுகிறது.

முன்னொரு காலத்தில் நந்தபூபாலர் என்ற அரசர் ஆட்சிசெய்து வந்தார். இவருடைய மகன் தர்மகுப்தர். நந்தபூபாலர் ஆட்சியைத் துறந்து இறைவனை வழிபட காட்டுக்கு சென்றார். இந்நிலையில் நந்தபூபாலர் மகன் தர்மகுப்தர் நெறிதவறாமல் ஆட்சி செய்து வந்தார். ஒருநாள். தர்மகுப்தர் வேட்டையாட காட்டுக்கு சென்றார். மாலை மங்கியதும் அடர்ந்த காட்டில் வழிதெரியாமல் தர்மகுப்தர் ஒரு மரத்தின் மீது ஏறி காயத்ரி மந்திரத்தை ஜெபித்து கொண் டிருந்தார். அப்போது சிங்கத்தால் துரத்தப்பட்ட கரடி தர்மகுப்தன் ஏறி இருக்கும் மரத்தின் மீது ஏறி அவனருகே அமர்ந்தது. கீழே சென்றால் இருவரின் உயிருக்கும் ஆபத்து என்பதால், “”முதல் பாதி இரவு நீர் உறங்கி கொள்ளும் நான் காவல் காக்கிறேன். இரண்டாவது பாதி இரவில் நான் உறங்குகிறேன் நீர் காவல் காக்கவேண்டும்,” என கரடி கூறியது. அதன் படியே தர்மகுப்தர் உறங்கினார். அப்போது கீழே இருந்த சிங்கம் கரடியை பார்த்து தர்மகுப்தரை கீழே தள்ளிவிடு என்றது. ஆனால் கரடி உலகத்திலேயே மிகப்பெரிய பாவம் நம்பிக்கை துரோகம் தான் அதனை நான் செய்ய மாட்டேன் என்றது. ஆனால் தர்மகுப்தரின் ஆதரவில் தூங்கும் கரடியை சிங்கத்தின் வார்த்தையில் மதி மயங்கிய தர்மகுப்தன் கீழே தள்ளிவிட்டான். அதிர்ஷ்டவசமாக தப்பித்த கரடியானது தர்மகுப்தரின் நம்பிக்கை துரோகத்தை பொறுக்காது தர்மகுப்தர் பைத்தியம் பிடிக்கும் படியாக சாபமிட்டது. இதனையடுத்து தர்மகுப்தரும் பல இடங்களில் பைத்தியம் பிடித்தவராக அலைந்து திரிந்தார். இதனை கேள்விபட்ட நந்தபூபாலர் மகன் தர்மகுப்தனை அழைத்து கொண்டு ஜைமினி முனிவரிடம் சென்றார். அவரும் தற்போது உள்ள பாலமலை பத்மதீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபடுமாறு கூறினார். அதன்படியே செய்ய தர்மகுப்தர் பைத்தியம் தெளிந்தது.

நம்பிக்கைகள்:

சாபங்களினால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வழிபாடு செய்தால் பாதிப்பு குறையும் என்பது நம்பிக்கை.

சிறப்பு அம்சங்கள்:

கோயிலில் விந்தைகள் பல புரிந்து பக்தர்களின் மனங்களை குளிர வைத்த ரங்கநாதர் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.தாயார் சன்னதியும் தும்பிக்கையாழ்வார் சன்னதிகள் தனித்தனியாய் இருக்கின்றன. கோயிலை சுற்றிலும் சுவாமி உற்சவ காலத்தில் திருத்தேர் வலம் வரவும் ஆயிரக் கணக்கான பக்தர்கள் ஏக காலத்தில் பெருமாளை தரிசிக்கவும் வழி செய்யப்பட்டுள்ளது. இங்கு நிலவும் தட்ப வெப்ப சூழ்நிலை பல வியாதிகளை போக்ககூடிய வகையில் இருப்பதால் பலர் இக்கோயிலுக்கு வருவதை வாடிக்கையாக கொண்டு உள்ளனர். கோயில் அருகே இருளர் என்னும் மலை ஜாதியினர் வசித்து வருகின்றனர். கோயிலுக்கு முன்புறம் உள்ள திருத்தேர் கை தேர்ந்த சிற்பிகளால் செய்யப்பட்டு அழகுற விளங்குகிறது. சனிக்கிழமை மற்றும் அமாவாசை தினங்களில் ஏராளமான பக்தர்கள் இக்கோயிலுக்கு வந்து பெருமாளை வழிபட்டு செல்கின்றனர். உட்பிரகாரத்தில் விநாயகர், ஆஞ்சநேயர், ராமானுஜர் ஆகியோருக்கு சன்னதிகள் உள்ளன.

திருவிழாக்கள்:

சித்ராபவுர்ணமி அன்று திருத்தேர் நிகழ்ச்சி நடக்கும்.

காலம்

1800 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

பெரியநாயக்கன்பாளையம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

கோயம்பத்தூர்

அருகிலுள்ள விமான நிலையம்

கோயம்பத்தூர்

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top