Thursday Jul 04, 2024

பெரியநாயக்கன்பாளையம் சொக்கலிங்கேஸ்வரர் திருக்கோயில், கோயம்புத்தூர்

முகவரி :

பெரியநாயக்கன்பாளையம் சொக்கலிங்கேஸ்வரர் திருக்கோயில்,

பெரியநாயக்கன்பாளையம்

கோயம்புத்தூர் மாவட்டம், தமிழ்நாடு – 641 020

தொலைபேசி: +91 422 269 2637

இறைவன்:

சொக்கலிங்கேஸ்வரர்

இறைவி:

மீனாட்சி

அறிமுகம்:

      தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோயம்புத்தூர் வடக்கு தாலுகாவில் பெரியநாயக்கன்பாளையம் நகரில் அமைந்துள்ள சொக்கலிங்கேஸ்வரர் கோயில், சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மூலவர் சொக்கலிங்கேஸ்வரர் என்றும், தாயார் மீனாட்சி என்றும் அழைக்கப்படுகிறார். கோயம்புத்தூர் மேட்டுப்பாளையம் வழித்தடத்தில் இக்கோயில் அமைந்துள்ளது.

புராண முக்கியத்துவம் :

 பதின்மூன்றாவது நூற்றாண்டில் கட்டப்பட்ட கோயில். மேற்குப் பார்த்து அமைக்கப்பட்ட சிவன்கோயில்கள் சிறப்புமிக்கவை. அவற்றுள் இதுவும் ஒன்று. அக்காலத்தில் பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகள் கூடலூர் என்றே அழைக்கப்பட்டது. கோயில் அமைந்திருக்கும் இடம் சற்றே பள்ளமானதாக இருந்ததோடு, சுற்றிலும் நீரும் தேங்கியுள்ளன. பதினெட்டுச் சித்தர்களுள் ஒருவரான சிவவாக்கியார், கூடலூர் பெரும்பள்ளம் சொக்கனே போற்றி என்று இத்தல நாயகனை போற்றிப் பாடியபாடல் கோவை அருகே கோயில் பாளையத்திலுள்ள ஈஸ்வரன் கோயில் கல்வெட்டில் உள்ளது. சொக்கலிங்கேஸ்வரர் சன்னிதியின் அருகில் அன்னை மீனாட்சியின் சன்னிதி இருக்கிறது. பழமையான இந்த கோயில் காலப்போக்கில் வெகுவாக சிதிலமடைந்தது. பின்னர் சிவனடியார்களின் ஒத்துழைப்போடு திருப்பணிகள் நடைபெற்று இன்று பொலிவுடன் திகழ்கிறது.

நம்பிக்கைகள்:

தம்பதி சமேதராக இருக்கும் சொக்கலிங்கேஸ்வரரை தரிசித்தால் திருமணத் தடைகள் நிவர்த்தியாகும், தீராத நோய் நொடி நீங்கும் என்பது நம்பிக்கை.

சிறப்பு அம்சங்கள்:

      இத்தலத்தில் நவகிரக வழிபாடு மிகவும் விசேஷம். முதலில் மூலவருக்கும், அம்பாளுக்கும் மாலை அணிவித்து தேங்காய், பழம் மற்றும் கோயிலில் செய்த சர்க்கரைப் பொங்கலை சமர்ப்பித்து அர்ச்சனை செய்ய வேண்டும். பிறகு அனைத்து நவகிரகங்களுக்கும் புது வஸ்திரங்கள் மற்றும் மாலை அணிவித்து தேங்காய், பழம் சமர்ப்பித்து அர்ச்சனை செய்ய வேண்டும். இதன் மூலம் விரைவில், விரும்பிய மணவாழ்க்கை பெறலாம் என்கிறார்கள்.

மூலவர் முதல் பரிவார தெய்வங்கள் வரை அனைத்துக் கடவுளரும் தம்பதி சமேதராக அருளும் தலம், விசாலாமான மைதானத்தினுள் தல விருட்சமான நாவலம்மரம், சிந்தாமணி விநாயகர், கன்னிமார் தெய்வங்களும் ஒரு சேர நின்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்கள். பிரதான நுழைவாயில் உள்ளே கருவறையில் அருள்கிறார்.சொக்கலிங்கஸ்வரர். கனகசபையில் நடராஜர், சிவகாமி அம்மையாருடன் அருள்பாலிக்கிறார். ஆருத்ரா தரிசனத்தன்று இவர்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்படுகிறது. அன்று அவர்களிருவரும் கோயிலை வலம் வருவதோடு, சிந்தாமணி விநாயகரை பதினோரு முறை சுற்றிவருவர்.

இங்கு திருமாலும் சேவை சாதிக்கிறார். ராதா, வேணுகோபாலசுவாமி, ருக்குமணி ஆகியோர் சிறப்பாக வீற்றிருந்து பக்தர்களின் வேண்டுகோளை நிறைவேற்றுகிறார்கள். வைகுண்ட ஏகாதசி உள்ளிட்ட பெருமாளுக்கான அனைத்து விசேஷங்களும் இங்கே சிறப்பாக நடத்தப்படுகின்றன. சித்தி, புத்தியுடன் விநாயகப் பெருமானும், அவரது தம்பியான சுப்பிரமணியர் வள்ளி-தெய்வானையுடனும் தனித்தனி சன்னிதியில் வீற்றிருக்கிறார்கள். இவ்விருவருக்குமான விசேஷ தினங்களில் சிறப்பு வழிபாடுகள் உண்டு. சந்திரன் ரோகிணியுடன் அமர்ந்திருக்க சூரியனோ உஷா மற்றும் பிரத்யுஷாவுடன் அருள்பாலிக்கிறார். அறுபத்து மூன்று நாயன்மார்கள், நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, பைரவர், பிரம்மா பிராகாரத்தில் வீற்றிருக்க, மீனாட்சி தாயாரை நோக்கியபடி ஐயப்பன் சன்னிதி அமைந்திருக்கிறது.

திருவிழாக்கள்:

      பிரதோஷம், சிவராத்திரி, ஆருத்ரா தரிசனம், மார்கழி மாத திருக்கல்யாணம், அமாவாசை போன்றவை சிறப்பாக நடைபெறுகின்றன. கார்த்திகை மாதம், நான்காவது சோமவாரத்தின்போது ஆயிரத்தெட்டு சங்குகள் கொண்டு சொக்கலிங்கேஸ்வரருக்கு நடக்கும் அபிஷேகத்தைக் காண்பது ஏழு பிறவிக்கான பாவங்களையும் தீர்க்குமென்கிறார்கள். மீனாட்சி அன்னைக்கு ஆடிவெள்ளி, ஆடிப்பூரம், கேதார கவுரி விரதம், தைவெள்ளி ஊஞ்சல் உற்சவம் ஆகியன வெகு விமரிசையாக நடத்தப்படுகின்றன. மதுரை சென்று மீனாட்சியை தரிசிக்கு வாய்ப்பில்லாதவர்கள் இந்த மீனாட்சியை தரிசிக்கலாம்.

காலம்

1800 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

பெரியநாயக்கன்பாளையம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

கோயம்புத்தூர்

அருகிலுள்ள விமான நிலையம்

கோயம்புத்தூர்

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top