பூவாலைக்குடி புஷ்பவனேஸ்வரர் (பூவாலைநாதர்) கோயில், புதுக்கோட்டை
முகவரி :
பூவாலைக்குடிபூவாலைநாதர் கோயில்,
பூவாலைக்குடி, பொன்னமராவதி வட்டம்,
புதுக்கோட்டை மாவட்டம் – 622402.
இறைவன்:
புஷ்பவனேஸ்வரர்
இறைவி:
சுந்தரவல்லி
அறிமுகம்:
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பொன்னமராவதி வட்டத்தில் வையாபுரி வழியாகவும், செவலூர் விலக்கில் இறங்கி கோவனூர் வழியாகச் செல்லும் அரசமலைச் சாலையில் 3 கி.மீ. தூரம் வடக்காகச் சென்றால் பூவாலைக்குடி உள்ளது. இந்த ஊரின் தென்புறமுள்ள சிறிய பாசன ஏந்தலின் மேற்கிலுள்ள வனப் பகுதிக்குள் உள்நுழைந்து குன்றின் மீது உள்ள புஷ்பவனேஸ்வரர் என்ற பூவாலைநாதர் கோயிலை அடையலாம். கோயில் சுமார் 10 அடி உயரமுள்ள சிறிய குன்றை குடைந்து உருவாக்கப்பட்ட சிவன் கோயிலாகும். ஒரு காலத்தில் சீரோடும் சிறப்போடும் விளங்கிய இக்கோயில், வனாந்திரத்தில் இருப்பதாலும் கண்மாயைக் கடந்தது செல்லவேண்டும் என்பதாலும் இதன் பழமையும் பெருமையும் வெளி உலகத்திற்க்கு சரியாக எடுத்துச் சொல்லப்படாத்தாலும் கோயிலுக்கு பக்தர்களின் வருகை குறைந்து காணப்படுகிறது, இக்கோயில் இந்தியத் தொல்லியல் துறையின் பராமரிப்பில் இருந்தாலும் புதுக்கோட்டை கோயில்களின் நிர்வாகத்தில் இருக்கிறது.
புராண முக்கியத்துவம் :
கோயிலில் சிறிய கருவறையும், கருவறைக்கு முன்பாக முன் மண்டபமும் இயற்கை மலைப் பாறையில் குடையப்பட்டுட்ள்ளது. முன் மண்டபத்தை பிற்காலத்தவர் கருங்கல் கட்டுமானத்தால் விரிவுபடுத்தி மகா மண்டபமும் மகா மண்டபத்துக்கு முன்பாக தூண்களை நிறுத்தி உத்தரம் ஆகியவைகளைக் கொண்டு முன் மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு தென்புறத்தில் அர்த்தமண்டபம், முன் மண்டபம் ஆகியவற்றோடு அம்பாள் கிழக்குப் பார்த்துத் அமர்ந்ந்துள்ளார். பூவாலைநாதர் கோயிலின் கருவறையின் பின்புறம் கருவறைக்கு வடக்கில் உள்ள பாறையில், முருகன் கோயில் கருவறை முன் மண்டபம் ஆகியவற்றோடு சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானையுடன் மயில் மீது அமர்ந்து காட்சி தருகிறார்.
பைரவர் சன்னதி: சுவாமி கோயிலின் வட கிழக்கில் பைரவருக்கு கருங்கல்லால் கட்டப்பட்ட தனிக் கோயிலில் பைரவர் தெற்கு பார்த்துத் சமபங்க ஸ்தானத்தில் நின்று காட்சி தருகிறார்.
நம்பிக்கைகள்:
பாறையில் இருக்கும் சுப்பிரமணியரை தைப்பூசத்தன்று வணங்கினால் துன்பம் நீங்கும் என்பது ஐதீகம்.
சிறப்பு அம்சங்கள்:
கல்வெட்டுட்ச்செய்திகள்: புஷ்பவனேஸ்வரர் கோயில் தென்புறம் சுவரிலுள்ள கல்வெட்டுட் இரண்டாம் இராஜேந்திர சோழரின் 5ஆவது ஆட்சியாண்டுக் கல்வெட்டாகும். கோயில் தென்புறம் சுவரிலுள்ள கல்வெட்டு மூன்றாம் குலோத்துங்க சோழனின் கல்வெட்டு பூவாலைக்குடி கோனாட்டின் கூடலூர் நாட்டு ஊராக இருந்ததைத் தெரிவிக்கிறது.
திருவிழாக்கள்:
பிரதோஷம், அஷ்டமி வழிபாடு, தமிழ்மாதப்பிறப்பு, ஆடி வெள்ளிக்கிழமைகளிலில் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அன்னாபிஷேகம், மகாசிவராத்திரி ஆகிய விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பூவாலைக்குடி
அருகிலுள்ள இரயில் நிலையம்
புதுக்கோட்டை
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி