Tuesday Jan 28, 2025

பூரி ஜெகநாதர் ஆலயம் மகாபாரத காலத்துடன் தொடர்புடையது

பாரத திருநாட்டின் பெருமையும் பாரம்பரியமும் கொண்ட அடையாளங்களில் முக்கியமானது ஒரிசாவின் பூரி ஜெகநாதர் ஆலயம்

அந்த பூரி ஜெகநாதர் ஆலயம் மகாபாரத காலத்துடன் தொடர்புடையது, ஒரிசா பகுதி மக்கள் வாழ்வில் மட்டுமல இந்திய மக்களின் வாழ்விலும் ஒன்றிணைந்தது

காசி போல, ராமேஸ்வரம் போல அது அகில இந்திய அடையாள ஷேத்திரம்.

தமிழருக்கு மதுரை பழனி போல அப்பகுதி மக்களுக்கு அது அவ்வளவு முக்கியமானது, 2004 சுனாமி அல்ல அதற்கு முந்தைய பல நூற்றாண்டுக்கு முற்பட்ட சுனாமியில் கூட (பூம்புகார் மூழ்கிய காலமாக இருக்கலாம்) அது பாதுகாக்கபட்டது என்பது வரலாறு

அந்த கோவிலுக்கும் தமிழர்களுக்கும் தொடர்பு உண்டு, பழுதான‌ பழைய ஆலயத்தை புதுபித்து இப்பொழுது இருக்கும் ஆலயத்தை கட்டியவன் சோழ மன்னன் அனந்த வர்மன் சோழகங்கன், வீர ராஜேந்திரனின் பேரன்

பூரி ஆலயத்துக்கு ஏகபட்ட சிறப்புகள் உண்டு, அது அமைந்த விதம் முதல் அந்த சிலைகள் வந்த கதை வரை ஒவ்வொன்றும் ஒரு புத்தகம் எழுதும் அளவு மிகபெரிய பக்தி வரலாறு

ஆனால் அந்த திருவிழா கொண்டாடும் முறைதான் பக்தியின் உச்சம்

ஆம், அங்கு வருடாவருடம் மூன்று தேர்கள் இழுக்கபடும். ஆனிமாதம் பவுர்ணமி முடிந்து இழுக்கபடும் தேர்கள் 10 நாள் கழிந்துதான் நிலைக்கு வரும்

மூன்று தேர்களும் கிருஷ்ணன், பலராமன், மற்றும் அவர்கள் தங்கை சுபத்திரைக்கானது

அக்காலத்தில் ஒருமுறை வலம் வந்த தேர் அத்தோடு சரி, மறுவருடம் புது தேர் செய்வார்களாம், அந்த சம்பிரதாயம் இன்றும் உண்டு, வருடாவருடம் புதுதேர் பிரமாண்டமாக செய்வார்கள்

தேரோட்டத்துக்கு முன்பு பூரி மன்னரே தங்க விளக்குமாற்றால் தெருவினை சுத்தபடுத்த வேண்டும் என்பது அங்குள்ள வழிமுறை, ஆம் மன்னனே வந்து பணிவிடை செய்யும் பெருமை அது

பூரி ஆலயம் என்பது இந்நாட்டின் பாரம்பரியத்தின் மிகபெரும் அடையாளம், இந்நாட்டின் கலாச்சாரத்தின் மிகபெரும் சொத்து

தேசம் கொண்டாடும் மிகபெரும் தலம் அது, அதன் பக்தி முயற்சிகளை நோக்கினாலே அக்கால சமூகம் எவ்வளவு ஆன்மீகத்தின் உச்சத்தில் இருந்தது என்பது புரியும்

ஆம் தேர் செய்வது கோவில் கட்டுவது போல மிக பெரும் விஷயம், ஆண்டுதோறும் புதுதேர் அதுவும் 3 செய்து கொண்டாடினார்கள் என்றால் அவர்களின் பக்தி எவ்வளவு உயர்ந்ததாய் இருந்திருக்கும்?

அவ்வளவு செலவு செய்ய அந்த தேசம் எவ்வளவு வளமாக இருந்திருக்கும்?

இன்னும் அந்த கோவிலில் ஏகபட்ட நம்பிக்கைகள் ஐதீகம் உண்டு. அந்த கோவில் கோபுரத்தில் பறவைகள் அமராது, கோவிலின் கொடி காற்றின் எதிர்திசையில் பறக்கும், கலச நிழல் கீழே விழாது என ஏக நம்பிக்கைகள்

இந்தக் கோவிலில் அன்னதானத்திற்கு சமைக்கப்படும் உணவின் அளவானது தினம்தோறும் ஒரே அளவாகத்தான் சமைக்கப்படும். ஆனால் வருகின்ற பக்தர்களது எண்ணிக்கையானது ஒரு ஆயிரமாக இருந்தாலும் சரி, பத்தாயிரமாக இருந்தாலும் சரி சமைக்கப்பட்ட உணவு என்பது பத்தாமல் போனதே கிடையாது. மிச்சமாகி கீழே கொட்டப்படுவதும் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

காசியில் சிவன் போல அங்கு கண்ணன் சாட்சாத் உண்டு என்பது இந்துக்களின் நம்பிக்கை, அதற்கு சான்றுகளும் ஏராளம்

தஞ்சை கோவிலை போலவே சில மர்மங்களும் உண்டு, அந்த சிலைகள் ஏன் முழுமை செய்யபடவில்லை, கருவரையும் கோவிலும் மர ஆதிக்கம் ஏன்? அந்த அரைகுறை சிலைகள் கடவுளால் ஏன் கொடுக்கபட்டன என ஏராள மர்மம் உண்டு

அந்த மர்மமே அதன் பலமும் ஆயிற்று, அதை தேடி தேடி ஓடிய கூட்டம் அருளை பெற்றதே தவிர மர்மம் இன்னும் அப்படியேதான் இருக்கின்றது

பாதியினை முடிக்காமல் மர்மமாக விட்டால் பக்தர்கள் வந்து கொண்டே இருப்பார்கள் என தெய்வம் திட்டமிட்டிருக்கலாம், மானிட மனத்தின் விசித்திரம் தெய்வத்துக்கே விளங்கும்

மானிடன் குறைவுள்ளவன் என காட்ட அந்த நாடகத்தை இறைவன் நடத்தியுமிருக்கலாம், அந்த கோவில் வரலாறு அதை சொல்கின்றது

ஜரா எனும் வேடனால் கொல்லபட்ட கிருஷ்ணபராத்மா மரமானதாகவும், அந்த மரத்தில் இருந்து உருவான கட்டையில் இருந்து செதுக்கபட்ட சிலைகள் என அதன் வரலாறு தொடங்குகின்றது

இந்திரதுய்மன் எனும் கனவில் வந்த பெருமான், கடலில் இருந்துவரும் கட்டையில் தனக்கு சிலைவடிக்க சொல்லி உத்தரவிட்டான், பல தச்சர்கள் உளி உடைத்த அந்த மரத்தில் சிலைவடிக்க தானே தச்சனாகவும் வந்தார் விஷ்ணுபெருமான்

தச்சர் வேடத்தில் அவர் சொன்ன நிபந்தனை “21 நாட்கள் நான் இருக்கும் அறையினை திறக்க கூடாது, சிலை செய்வதை யாரும் பார்க்கவும்கூடாது” என்பது, அப்படியே வேலை தொடங்கிற்று

ஆனால் அவசரபட்ட மன்னன் இடையிலே திறந்துபார்க்க தன் நாடகபடியே ஆத்திரமுற்ற பெருமான் உன் அவசரத்தால் சிலை முழுமை அடையவில்லை, மானிட்ன் அவசரபட்டால் என்னாகும் என்பதன் அடையாளமாக இச்சிலை இப்படியே அரைகுறையாக இருக்கட்டும் , மானிடருக்கு அவசரம் கூடாது நிதானமும் பொறுமையும்வேண்டும் என்பதன் சின்னமாக இது இருக்கட்டும் என சொல்லிமறைந்தார்

மானிடனுக்கு நிதானமும் பொறுமையும் இருந்தால் அவன் வாழ்வு முழுமை அடையும் , பொறுமையற்ற வாழ்வு அரைகுறையாகும் எனும் பெரும் தந்த்துவத்தை சுமந்து நிற்கின்றன அந்த சிலைகளும் ஆலயமும்

அங்கு மன்னனே தெருவில் இறங்கி ரதவீதிகளை சுத்தபடுத்துவான் அதை நினைவுகூறத்தான் தங்க விளக்குமாறால் தெருகூட்டும் நடைமுறை உண்டு

கோவிலில் இறைவன் முன் எல்லோரும் சமம் என்பதை சொல்லும் தத்துவம் அது, மன்னனுக்கு அங்கு பரிவட்டமோ முதல்மரியாதையோ இல்லை

மாறாக கடைநிலை வேலையினை அவனேதான் முதலில் செய்து தானும் சராசரி பக்தர்களில் ஒருவன் என்பதை காட்டவேண்டும், அச்சம்பிரதாயம் இன்றும் உண்டு

நான்கு லட்சம் சதுர அடி கொண்ட அந்த ஆலயத்தில் உலகின் மிகபெரிய மடபள்ளி அமைந்துள்ளது

அங்கு அடுப்பின் மேல்,  ஒன்றன் மீது ஒன்றாக ஐந்து பானைகள் அடுக்கப்படும். மேலே உள்ள பானையில் உள்ள உணவு தான் முதலில் வேகும் என்பதுதான் இக்கோவிலின் அதிசயம். ஒருமுறை சமையலுக்கு உபயோகப்படுத்தப்பட்ட பானைகளை மறுபடியும் பயன்படுத்துவதில்லை. அதனை உடைத்துவிடுகின்றனர்.

இந்த பானை என்பது மானிட உடலை குறிப்பது, மானிட உடல் நிலையற்றது பாண்டம் போல‌ என்பதைசொல்வது 

புகழ்பெற்ற அந்த ஆலயத்தின் தேரோட்டம் இப்பொழுது நடக்கின்றது, ஒடிசா அரசு அதை முன்னின்று நடத்துகின்றது

அந்த தேர் பாரத அடையாளங்களில் ஒன்று, பாரம்பரியமாக வந்த இந்துக்களின் பெருமைகளில் ஒன்று, அது இப்பொழுது கம்பீரமாக வருகின்றது

பண்டிகைகள் தேச ஒற்றுமையினை வளர்ப்பவை, அவ்வகையில் தேசமே அந்த பண்டிகையினை கொண்டாடுகின்றது

பூரி ஜெகநாதர் அனுதினமும் ராமேஸ்வரம் வந்து செல்வதாக ஐதீகம், அந்த ஜெகநாதர் தமிழகமும் ஆன்மீகத்தில் மலர ஆசீர்வதிக்கட்டும், தமிழகமும் தெய்வீகத்தில் ஒளிரட்டும்

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top