பூண்டி ஊன்றீஸ்வரர் திருக்கோயில், சென்னை
முகவரி
அருள்மிகு ஊன்றீஸ்வரர் திருக்கோவில் பூண்டி நீர்த்தேக்கம் அஞ்சல் வழி திருவள்ளூர் திருவள்ளூர் மாவட்டம் PIN – 602023
இறைவன்
இறைவன்: ஊன்றீஸ்வரர், ஆதாரதாண்டேசுவரர் இறைவி: கெளரி அம்பாள்
அறிமுகம்
திருவெண்பாக்கம் – ஊன்றீஸ்வரர் கோயில் செங்கற்பட்டு மாவட்டத்தில் தற்போது பூண்டி நீர்த்தேக்கத்தில் அமைந்துள்ளது. நீர்த்தேக்கத்தில் நீர் குறையும் காலத்தில் , பழைய கோயில் உள்ளே உள்ளதைக் காண முடியும். தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 250 வது தேவாரத்தலம் ஆகும்.
புராண முக்கியத்துவம்
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சுந்தரர் திருவொற்றியூரில் தங்கி இருக்கும் போது சங்கிலி நாச்சியாரை திருவொற்றியூரில் இருந்து பிரிய மாட்டேன் என்று சபதம் செய்து கொடுத்து திருமணம் செய்து கொண்டார். ஒரு சமயம் திருவாரூரில் உள்ள பரவை நாச்சியாரை நினைத்து திருவொற்றியூரில் இருந்து புறப்பட்டார். சங்கிலி நாச்சியாருக்கு செய்து கொடுத்த சத்தியத்தை மீறியதால் சுந்தரர் திருவொற்றியூர் தலத்தின் எல்லையை விட்டு வெளியேறியபோது, சிவன் அவரது இரண்டு கண்களையும் பறித்துக் கொண்டார். சத்தியத்தை மீறியதால் தன் கண்கள் பறிபோனதை உணர்ந்த சுந்தரர் சிவனிடம் தனக்கு கண்களை தரும்படி வேண்டினார். அவரோ கண்கள் தரவில்லை. இரண்டு கண்களும் தெரியாமல் தட்டுத்தடுமாறியபடியே திருவாரூர் செல்லும் வழியில் இத்தலம் வந்தார் சுந்தரர். இங்கு சிவனிடம் தனக்கு கண்கள் தரும்படி கேட்டார். சிவனோ அமைதியாகவே இருந்தார். சுந்தரர் விடவில்லை. இறைவன் ஊண்றீசுவரர் மேல் பதிகம் பாடி கண்ணொளி கேட்டபோது இறைவன் ஊண்றுகோல் கொடுத்து அருளினார். கண்ணொளிக்குப் பதிலாக ஊண்றுகோல் கொடுத்த இறைவன் மேல் கோபம் கொண்ட சுந்தரர் இறைவனைப் பார்த்து நீர் உள்ளே இருக்கிறீரா என்று கேட்க இறைவனும் “உளோம் போகீர் ” என்று பதில் அளிக்கிறார். ஊண்றுகோல் பெற்ற சுந்தரர் கோபத்தில் அதை வீசியெறிய அது நந்தியின் மேல் பட்டு அதன் கொம்பு உடைந்தது. இந்த சிவாலயத்தில் உள்ள சிவன் சந்நிதி முன் உள்ள நந்தியின் வலது கொம்பு உடைந்து காணப்படுகிறது. மின்னொளி அம்பாள்: சுந்தரர் கண் தெரியாமல் ஊன்றுகோலை வைத்துக்கொண்டு தடுமாறியபோது, அம்பாள் அவருக்கு வழிகாட்டி கூட்டிச் செல்வதற்காக கிளம்பினாள். ஆனால், சிவன் தடுத்து விட்டாராம். இதனை உணர்த்தும் விதமாக அம்பாளின் இடது கால் சற்றே முன்புறம் நகர்ந்து இருக்கிறது. பின் அம்பாள் சுந்தரரிடம், “மனிதர்கள் தவறு செய்வது இயற்கை. ஒவ்வொருவர் செய்யும் தவறுகளும் அவர்களுடைய ஊழ்வினைகளுக்கேற்பவே நிகழ்கிறது. தற்போது கண்கள் பறிக்கப்பட்டிருப்பதும் ஒரு ஊழ்வினைப்பயனே. எனவே, கலங்காது செல்லுங்கள். தகுந்த காலத்தில் அவர் அருளால் பார்வை கிடைக்கும்’ என்று தாய்மை உணர்வுடன் இனிய சொற்கள் பேசி சுந்தரரை சாந்தப்படுத்தினாள். மேலும் சுந்தரர் தடுமாறாமல் நடந்து செல்ல வழியில் மின்னல் போன்ற ஒளியை காட்டி வழிகாட்டினாளாம். இதனால் அம்பாள் “மின்னொளி அம்பாள்’ என்றும், “கனிவாய்மொழிநாயகி’ என்றும் அழைக்கப்படுகிறாள். இந்த அம்பாள் மிகவும் வரப்பிரசாதியானவள்.
நம்பிக்கைகள்
வாழ்க்கையில் பிடிப்பு இல்லாதவர்கள், மன உளைச்சலால் அவதிப்படுபவர்கள், குடும்பம், தொழிலில் விருத்தி இல்லாதவர்கள் சுவாமியிடம் வேண்டிக்கொண்டால் மன அமைதியும், வாழ்க்கையின் மீது விருப்பமும் வரும் என்கிறார்கள். பொதுவாக தங்கள் மீதே நம்பிக்கை இல்லாதவர்களுக்கு நம்பிக்கை தந்து அவர்களை வாழவைக்கும் தலமாக இக்கோயில் திகழ்கிறது. எனவே, இக்கோயிலை “நம்பிக்கை கோயில்’. திருமணத்தடை உள்ளவர்கள், கண் பார்வையில் குறைபாடு கொண்டவர்கள் சுவாமி, அம்பாளுக்கு தேன் அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர்.
சிறப்பு அம்சங்கள்
தேவார காலத்தில் இருந்த திருவெண்பாக்கம் ஆலயம் சென்னை நகரின் குடிதீர் தேவைக்காக சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு பூண்டி நீர்த்தேக்கம் அமைக்கப்பட்ட போது நீரில் மூழ்கி விட்டது. இப்போதுள்ள ஆலயம் பூண்டி நீர்த்தேக்கம் கரையில் புதிதாக அமைக்கப்பட்டு 1968-ம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது. மீண்டும் ஒருமுறை 2000-ம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. பழைய ஆலயத்தில் இருந்த சிலைகள், சிற்பங்கள், மண்டபத் தூண்கள் ஆகியவை யாவும் பெயர்த்து எடுக்கப்பட்டு புதிய ஆலயம் நிர்மாணிக்கும் போது அதில் வைக்கப்பட்டன.
திருவிழாக்கள்
நவராத்திரி, சிவராத்திரி,சித்திரை திருவிழா
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்துசமயஅறநிலையத்துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பூண்டி
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவள்ளூர்
அருகிலுள்ள விமான நிலையம்
சென்னை