புலவநல்லூர் கங்காதீஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
முகவரி :
புலவநல்லூர் கங்காதீஸ்வரர் திருக்கோயில்,
புலவநல்லூர், குடவாசல் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 610104.
இறைவன்:
கங்காதீஸ்வரர்
அறிமுகம்:
திருவாரூரிலிருந்து 10 கி.மீ. நன்னிலத்திலிருந்தும் 10 கி.மீ. குடவாசலிலிருந்து 10 கி.மீ தூரத்தில் உள்ளது. முன்னர் பெருவேளூர் எனவும், பின்னர் காட்டூர் அய்யம்பேட்டை எனவும், தற்போது மணக்கால் அய்யம்பேட்டை எனவும் அழைக்கப்படுகிறது. இப்பகுதி புலவநல்லூர் என அழைக்கப்படுகிறது. இவ்வூரில் முற்காலத்தில் 18 சிவாலயங்கள், 18 தீர்த்தங்கள், 18 திருவீதிகள் இருந்தன. தற்போது கங்காதீஸ்வரர் கோயிலை சேர்த்து நான்கு மட்டுமே எஞ்சியுள்ளன. உ.வே.சா 1930களில் இப்பகுதி வந்தபோது இங்கு பதினோரு கோயில்கள் இருந்தன என கூறுகிறார்.
தற்போது கங்காதீஸ்வரர் கோயிலை பார்ப்போம்.
இக்கோயில் ஊரின் வடகிழக்கில் உள்ளது, புலவநல்லூர் எனப்படுகிறது. பழமையான கோயில் முற்றிலும் சிதைவடைந்து போனதால் அடிப்படை கட்டுமானத்தில் இருந்து பணிகள் துவங்கி உள்ளன. எனினும் சிறிய ஊர் என்பதால் உதவிக்கரம் நீட்டுவோரின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.சில ஆண்டுகளாக பணிகள் நின்று நடந்து வருகிறது. முக்கால் வாசி பணிகள் நிறைவடைந்துவிட்டன, முகப்பு மண்டபம் பணிகளும் வண்ண பூச்சு போன்ற பணிகள் மட்டுமே எஞ்சியுள்ளன. சிவலிங்கம் மட்டும் தனது அதிட்டானத்திலேயே உள்ளது. பிற தெய்வங்கள் அனைத்தும் சிறிய கொட்டகை ஒன்றில் வைத்து நித்திய பூஜைகள் செய்யப்படுகின்றன.
இக்கோயிலை இதே தெருவில் வசிக்கும் பிரகதீஸ்வரன் (98435 77654) எனும் இளைஞரும் அவரது தகப்பனாரும் காலை மாலை என இரு வேலையும் பூஜை செய்கின்றனர். திருப்பணிகளையும் இவர்களே முன்னின்று செய்கின்றனர். இவரது கைபேசியை தொடர்புகொண்டு உதவ முன்வருமாறு கேட்டுக்கொள்கிறேன். பணிகளை குறைத்துக்கொண்டு விரைவில் முடிக்க நினைக்காமல் மதில்சுவர், வண்ணபூச்சு என அனைத்தையும் முடித்தே குடமுழுக்கு என இருப்பதாலும் கால தாமதம் ஆகிறது.
கோயிலின் தென்புறம் கருவங்குளம் எனும் தீர்த்தம் உள்ளது. கங்கையால் பூசிக்கப்பட்ட இறைவனாதலால் இவருக்கு கங்காதீஸ்வரர் என பெயர். இவ்வூரின் வடக்கு வீதியில் வாழ்ந்த ரங்கசாமி வாத்தியார் என்பவர் இத்தலத்துக்கு தலபுராணம் எழுதியுள்ளார் என தெரிகிறது, இது 636பாடல்கள் கொண்டது. சருக்கம் 25உள்ளது. கந்தபுரிவேளுர் விளங்கு தலபுராணம் என்பது அதன் பெயராகும். எழுதப்பட்ட ஆண்டு குறித்த தகவல் விளங்கிக்கொள்ள இயலவில்லை.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
புலவநல்லூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி