பத்துமலை ஸ்ரீ சுப்ரமணியர் சுவாமி திருக்கோயில், மலேசியா
முகவரி
பத்துமலை ஸ்ரீ சுப்ரமணியர் சுவாமி திருக்கோயில், பத்துமலை, கோம்பாக் மாவட்டம், கோலாலம்பூர், மலேசியா – 68100
இறைவன்
இறைவன்: ஸ்ரீ சுப்ரமணியர் சுவாமி
அறிமுகம்
பத்துமலை என்பது மலேசியாவில் புகழ்பெற்ற ஒரு குகைக் கோயில் ஆகும். சுண்ணாம்புக் குன்றுகளில் இயற்கையாக அமைந்த குகைகளில் அமைந்துள்ள இந்தக் கோயில் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 13 கி.மீ வடக்கே, கோம்பாக் மாவட்டத்தில் உள்ளது. இந்தக் குகைக்கோயிலின் உள்ளே பல குகைகள் உள்ளன. சுண்ணாம்புக் குன்றுகளுக்கு அருகில் செல்லும் பத்து ஆற்றின் பெயரிலிருந்து பத்துமலை எனும் சொல் வந்தது. முருகப் பெருமானுக்காகத் தோற்றுவிக்கப்பட்ட இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூசத் திருவிழா மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. பத்துமலையின் சிகரத்தில் இருக்கும் முருகப் பெருமானின் சன்னிதானத்தை அடைய 272 படிகளை ஏறிச் செல்ல வேண்டும். கோலாலம்பூரில் புகழ்பெற்று விளங்கிய கே.தம்புசாமி பிள்ளை எனும் செல்வந்தரால் 1891 ஆம் ஆண்டு இந்தப் பத்துமலைக் கோயில் உருவாக்கப்பட்டது. தமிழகத்தில் முருகப்பெருமானுக்கு ஆறுபடைவீடுகள் அமைந்துள்ளதைப் போல், மலேசிய நாட்டிற்கு மூன்று படைவீடுகள் புகழ்பெற்றவையாக விளங்குகின்றன. அவைகளில் ஒன்று பத்துமலை ஒன்றாகும்.
புராண முக்கியத்துவம்
பத்துமலை கோயிலின் நுழைவு வாயில் வேல் வடிவில் இருந்தது அவரை மிகவும் கவர்ந்தது. பல முறை சென்று வந்தார். சூரபத்மனை அழிக்க தாய் பார்வதி தேவியிடம் வேல் வாங்கிச் செல்லும் முருகனும் வேலாயுதமும் அவர் மனதில் ஆழமாக பதிந்தன. அங்கு சுப்ரமணிய சுவாமியை பிரதிஷ்டை செய்யத் திட்டமிட்டார். குகைக்குள் ஒரு கோயிலை நிர்மாணித்து சுவாமியை பிரதிஷ்டைசெய்தார். அதன் பின்பு வேலாயுதத்தையும் பிரதிஷ்டை செய்தார். வெகு விமர்சையாக கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. ஆரம்ப காலத்தில் ஒற்றையடி பாதை மூலமே கோயிலை அடையமுடியும் என்ற நிலை இருந்தது. பத்து மலை அடிவாரத்தில் நிறுவப்பட்டுள்ள 141 அடி உயரமுள்ள முருகன் சிலை உலக அளவில் பெரும் புகழையும் சிறப்பையும் சேர்த்திருக்கின்றது. இதனை உருவாக்க மூன்று ஆண்டுகள் பிடித்தன. 15 சிற்பிகள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 1550 கனமீட்டர் கான்கிரீட் மற்றும் 250 டன் எடையுள்ள எஃகு கம்பிகள் ஆகியவை இக் கட்டுமானத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன. பிரத்தியேகமாக தாய்லாந்து நாட்டில் இருந்து தருவிக்கப்பட்ட 300 லிட்டர் தங்க கலவை சிலையின் மீது பூசப்பட்டுள்ளது. இச்சிலைக்கான கட்டுமான செலவு மட்டும் 25 லட்சம் மலேசிய ரிங்கிட் ஆகும். 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் நடைபெற்ற திறப்பு விழாவின் போது 15 லட்சம் ரிங்கிட் மதிப்பிலான 1 டன் எடையுள்ள சாமந்திபூ மாலை சூட்டப் பெற்றது. இம்மாலையை பளுதூக்கும் இயந்திரத்தின் மூலம் தான் அணிவிக்கப்பட்டது. உலகிலேயே மிக உயரமான முருகன் சிலை என்ற பெருமையை பெற்றுள்ளதுடன், மலேசியா என்றாலே இம்முருகன் சிலையை அடையாளப் படுத்தும் வண்ணம் புகழ் பெற்றுவிட்டது. உலகப்புகழ் பெற்ற இந்த சிலையை உருவாக்கியவர் திருவாரூரைச் சேர்ந்த சிற்பி ஆர். தியாகராஜன் என்பதில் தமிழகத்திற்கே பெருமை அல்லவா? இச்சிலையைக் கண்டு தரிசிப்பதற்கென 2012 ம் ஆண்டு நடைபெற்ற தைப்பூச திருவிழாவில் 10 லட்சம் பேர் திரண்டனர் என்பது உலக சாதனை. பக்தர்களின் வசதிக்காக மரக்கட்டைகளிலான 272 படிக்கட்டுகள் அமைக்கப்பட்டன. கோயில் 1300 அடி உயரத்தில் அமைந்துள்ளது. 272 படிகள் ஏறியபின் சில படிக்கட்டுகள் கீழே இறங்கினால் பெரிய பரப்பளவுள்ள சமதள பகுதி உள்ளது. இடது புறத்தில் இருக்கும் ஒரு சிறிய குகையில் சுப்ரமணிய சுவாமியும் அவர் முன்னே வேலாயுதமும் அருள்பாலிக்கின்றனர். இச்சந்நதியில் சுப்ரமணியசுவாமி இருந்தாலும் அபிஷேக ஆராதனைகள் பூஜைகள் அனைத்தும் வேலாயுத சுவாமிக்குத்தான். மூலவர் இருக்கும் பகுதியிலிருந்து சுமார் 40 படிக்கட்டுகள் வழியாக ஏறிச் சென்றால் வள்ளி தெய்வயானை சமேத சுப்ரமணியசுவாமி தனிச் சந்நதி விமானம் மற்றும் முன் மண்டபத்துடன் விளங்குகின்றது. இச்சந்நதியை சுற்றி பிரகாரம் வரும் அளவில் விலாசனமான இடப்பகுதி உள்ளது. 1991 ம் ஆண்டு இச்சந்நதியை எழுப்பி உள்ளனர். குகையின் மேல்பகுதி திறந்த வெளியாக இருப்பதுடன் சுற்றிலும் மரங்கள் செழித்து வளர்ந்துள்ளதை காணமுடிகின்றது. மழை காலங்களில் மழைத்துளியும் வெய்யிலின் போது சூரிய ஒளியும் உள்ளே விழுவதைக் காணலாம். வெய்யில் காலங்களில் சுட்டெரிக்கும் வெய்யிலின் தாக்கம் வெளியே இருந்தாலும் குகையின் உட்புறம் முழுதும் குளிர்ச்சியாக இருப்பதை உணரமுடியும். தைப்பூசத்தன்று மலேசியாவிலுள்ள ஆறு மாநிலங்களில் ஒன்றைத் தவிர 5 மாநிலங்களில் தேசிய விடுமுறை தினமாக அறிவித்துள்ளனர். இவ்விழாவிற்கு பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமாக பக்தர்கள் வருகின்றனர். 5 முதல் ஆறு லட்சம் வருவதாகத் தெரிகின்றது. எத்தனை பேர் வந்தாலும் எந்த வித சிரமமும் இன்றி பால் அபிஷேகம் மற்றும் தரிசனம் செய்து திரும்புகின்றனர். மலேசியாவில் நடைபெறும் தைப்பூசம் பழநியில் நடப்பதைப் போன்று நடத்தப்படுவதாகச் சொல்லப்பட்டாலும் முற்றிலும் மாறுபட்டே உள்ளது என்பது நிதர்சனம். பால்குடங்களில் பக்தர்கள் கொண்டு வருவதை பழநியில் அபிஷேகம் செய்வதில்லை. பழநியில் மயில் காவடிகள் ஒன்று கூட கிடையாது. மலேசியா பக்தர்களைக் குறிப்பிடும் போது முருக பக்தர்கள் எனச் சொல்வதை விட முருக வெறியர்கள் என்பதே பொருத்தமாக இருக்கும் இங்கு தமிழர்களுடன் மற்ற இனத்தவர்களும் எந்த வித பாகுபாடுமின்றி காவடி எடுத்து வருகின்றனர். இதன் மூலம் அனைத்து சமூகத்தினரும் ஒற்றுமையுடன் ஒருங்கிணைந்து இருக்க இவ்விழா ஒரு இணைப்பு பாலமாக திகழ்கின்றது என்பது உண்மை. 1860 ஆம் ஆண்டுகளில் இப்பகுதியில் வாழ்ந்த சீனர்கள் காய்கறி பயிரிட்டு வந்தனர். இப்பயிர்களுக்குத் தேவையான உரத்திற்காக குகைகளில் இருக்கும் வௌவால் சாணத்தைத் தோண்டி எடுத்து பயன்படுத்தி வந்தனர். அதற்கு முன் தெழுவான் எனும் மலேசிய பழங்குடியினர் வாழ்ந்துவந்ததாக வரலாற்று குறிப்புகள் உள்ளன. இம்மலையத் தங்கள் புனித தலமாக பாவித்து வந்தனர். இச் சுண்ணாம்பு குன்றுகளை ஆராய்ச்சி செய்த அமெரிக்க தாவரவியலாளர் வில்லியம் ஹோர்னடே என்பவர் 1878ல் யத்துமலை பற்றி வெளி உலகுக்கு அறிமுகப்படுத்தினார். அதன்பின் மக்கள் அம்மலைக்குச் சென்று வர தொடங்கினர். படிப்படியாக அம் மலையின் புகழும் ஓங்கியது. அவ்வாறு சென்று வந்தவர்களில் தம்புசாமி பிள்ளையும் ஒருவர். 18, 19 நூற்றாண்டுகளில் தமிழகத்திலிருந்து பிழைப்பு தேடி கடலால் சூழப்பெற்ற மலாயா (தற்போது மலேசியா) நாட்டை நோக்கி வந்தனர். வந்து குடியேறிய பின் தங்களைக் காக்க தாயைப்போல அரவணைக்கும் தெய்வமான மகா மாரியம்மன் கோயிலை 1873ல் நிறுவி வழிபட்டு வந்தனர். இக்கோயிலையை நிறுவியவர் தமிழகத்தைச்சேர்ந்த தம்புசாமி பிள்ளை ஆவார். இது மலேசியாவில் மிகப் பழமையான கோயிலாகும். தைப்பூசம் என்றாலே நமக்கு பழநி தான் நினைவுக்கு வரும். ஏனெனில் காவடி வந்த வரலாறு நடந்த இடம்.
நம்பிக்கைகள்
தங்களுடைய நேர்த்திக் கடனை காவடி சுமந்து சென்று முருகனுக்குச் செலுத்துவன் மூலம் நிறைவேற்றுகின்றனர். பழநியில் காவடி மட்டும் தான் பிரபலம். மலேசியா என்றாலே மயில் காவடிகள், சடல்கள் பிரபலம். மயில் காவடி என்பது பீடம் வட்ட வடிவில் பெரியதாகவும் அதற்கு அடுத்த பகுதி அதை விட சிறியதாகவும் வட்டமாக 4 அல்லது 5 அடுக்குகள் அமைந்த படிகளைப் போன்ற அமைப்பாகும். அதன் உச்சியில் முருகனின் சிலையை அமைத்திருப்பார்கள். சுற்றிலும் மயில் இறகு, பூக்கள், வண்ண விளக்குகள் போன்றவற்றைக் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டிருக்கும். ஒரு சிறிய கோபுரத்தைப் போன்ற தோற்றத்தை ஒத்திருக்கும். மயில் காவடிகளுக்காக மலேசியா ரூபாய் 10,000 முதல் 1,00,000 வரை செலவு செய்கின்றனர். இதுபோன்ற மயில் காவடியினை தோளில் சுமந்து கொண்டும் ஆடிக்கொண்டும் மலை ஏறிவருகின்றனர். நல்ல எடையுள்ள இக்காவடியை சுமந்து கொண்டு மலை ஏறுவது எளிதான காரியமில்லை. காவடியை சுற்றிலும் 4 பேர் கூடவே தொடர்ந்து வருவர். நிலைதடுமாறி கவிழ்ந்து விடும் நேரத்தில் தாங்கிப் பிடிப்பதற்காக பல்வேறு அமைப்புகளில் மயில் காவடிகள் அணிவகுத்து வரும் காட்சி நம் கண்களை விட்டு அகலாத ஒன்று. அடுத்து மலேசியா தைப்பூச விழாவில் புகழ் பெற்றது. பால்குடம் 2 1/2 வயது குழந்தைகள் முதல் வயது முதிர்ந்த 76 வயதுள்ளவர்கள் வரை பால்குடம் சுமந்து வந்து வேலுக்கு அபிஷேகம் செய்து நேர்த்திக் கடன் செலுத்துவது இத்தலத்தின் தலையாய சிறப்பாகும். இந்த பால்குடங்களை எப்படி எடுத்து வருகின்றனர்? எந்த வகையில் சுமந்து வருகின்றனர்? எந்த நிலையில் வருகின்றனர் என்பது காண்போரை மெய் சிலிர்க்க வைக்கும் அனுபவம் ஆகும். தங்கள் தகுதி வசதிக்கு ஏற்றாற்போல் குடத்தில் பால் நிரப்பி அதன் மீது துணி அல்லது வாழை இலையால் மூடி கழுத்துப் பகுதியில் கயிற்றால் இறுக்கமாக கட்டிவிடுவர். இந்த அமைப்பு தலையில் சுமந்து மலைஏறிவரும் போது தழும்பி வெளியே சிந்தாமல் இருப்பதற்காக இப்பால் குடத்தை தாங்கி வருபவர்கள் நாக்கு, கன்னம் அல்லது இரண்டிலும் கூர்மையான வேலைக் குத்திக் கொண்டு வருவர். பால்குடம் எடுப்பதில் பல வகைகள் உள்ளன. இதில் கரும்பு பால் காவடி என்பது ஒருவகை. நீளமான 3 முழு கரும்புகளை சோகையுடன் ஒன்றாக சேர்த்து கட்டி விடுவர். மனைவி ஒரு முனையைத் தோளில் தாங்கியும் கணவன் மறுமுனையைத் தோளில் தாங்கியும் பிடித்துக் கொள்வர். இருதோள்களிலும் கரும்புகளை வைத்த பின்பு, கணவனுக்கும் மனைவிக்கும் உள்ள இடைப்பட்ட பகுதியில் இரு கரும்பு தொகுப்பில் 6 பால் நிரப்பிய குடங்களை துணிக்கயிற்றால் கட்டி தொங்க விட்டிருந்தனர். சிறிய 108 பால் கலசங்களை கொக்கியில் ஒரு முனையில் இணைத்து மறுமுனையை முதுகில் குத்தி தொங்க விட்டிருந்தனர். இக்காவடியை சுமந்து கொண்டு நடப்பதே மிகச் சிரமமான செயல். தைப்பூச திருவிழாவில் பங்கு பெறும் பக்தர்களையும், கொண்டாட்டங்களையும் புகைப்படம் எடுக்க வெளிநாடுகளிலிருந்து ஏராளமான புகைப்பட கலைஞர்கள் வருகின்றனர். மேலும் இத்திருவிழாவை நேரடியாக ஒளிபரப்பு செய்கின்றனர் என்பது கூடுதல் சிறப்பு.
சிறப்பு அம்சங்கள்
பல்வேறு வழிகளில் கொண்டு வரப்படும் பால் அனைத்தும் வேலுக்கு அபிஷேகம் செய்யப்படுகின்றது என்பது இங்கு மட்டுமே நடைபெறும் நிகழ்வு. தமிழகத்தில் உள்ள கோயில்களில் இவ்வாறு செய்யப்படுவதில்லை. மூன்று நாட்கள் இடைவெளியே இல்லாமல் இரவு பகல் என அனைத்து நேரங்களில் தொடர்ந்து பால் அபிஷேகம் நடைபெற்றுக் கொண்டிருப்பது இத்தலத்தின் பெருமைக்குரிய சிறப்பம்சம்.
திருவிழாக்கள்
செவ்வாய், கிருத்திகை மற்றும் சஷ்டி நாட்களில் பக்தர்கள் அதிக அளவில் வர ஆரம்பித்தனர். 1892 ம் ஆண்டு முதல் தைப்பூச திருவிழா கொண்டாடப்பட்டு வருகின்றது. இத்தலத்தின் கிருத்திகை சஷ்டி ஆகிய விழாக்கள் கொண்டாடப்பட்டாலும் தைப்பூசம் வைபவம் தான் வருட முக்கிய திருவிழாவாகும். தைப்பூசத்தின் ஆரம்பமாக கோலாலம்பூர் மகா மாரியம்மன் கோயிலில் உள்ள வள்ளி தெய்வயானை சமேத சுப்ரமணியருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு மின் விளக்குகளால் அலங்கரிகப்பட்ட 21 அடி உயரம் உள்ள வெள்ளித்தேரில் எழுந்தருளச்செய்து திருவீதி உலா புறப்பாடு தொடங்கும். இத்தேர் ஊர்தி மூலமாக இழுத்துச் செல்லப்படுகிறது. தேருக்கு முன்னால் பக்தர்கள் பாடிக் கொண்டும் ஆடிக்கொண்டும் செல்வர். அதனையடுத்து நாதஸ்வரம் மத்தளம் இசைத்துக் கொண்டு முன் செல்ல தேர் தொடர்ந்து வரும். காவடி பால் குடம் சுமந்து பக்தர்கள் வருவார்கள். தேருடன் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அணிவகுத்துச் செல்லும் காட்சி மனதை விட்டு அகலாத ஒன்றாகும். வழிநெடுங்கிலும் பக்தர்கள் தமது இல்லங்களுக்கு முன் தேரை நிறுத்தி பூஜை செய்வர். தேர் அடிவாரத்தில் உள்ள சுப்ரமணிய சுவாமி கோயிலை அடைந்த பின்பு பீடத்தின் மீது சுவாமியை வைத்து ஆராதனைகளை மேற்கொள்வர். பின் முருகனிடம் உள்ள தங்கவேலை கோயில் அர்ச்சகர் மூலமாக மலைக்கோயிலுக்கு எடுத்துச் செல்லப்படும். மலைக்கோயிலில் வைத்து பூஜைகள் ஆராதனைகள் செய்தபின்பு மூன்றாம் நாள் காலை மலைக் கோயிலில் இருந்து அடிவாரத்திற்கு கொண்டு வரப்பட்டு, சுப்ரமணிய சுவாமியுடன் மாரியம்மன் கோயிலுக்கு திருவீதி உலாவாக சென்றடையவும்.
காலம்
1891 ஆம் ஆண்டு
நிர்வகிக்கப்படுகிறது
மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானம் போர்டு
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பத்துமலை
அருகிலுள்ள இரயில் நிலையம்
செந்தாலுர்
அருகிலுள்ள விமான நிலையம்
குலா லம்பூர்