பட்டவர்த்தி தான்தோன்றீஸ்வரர் சிவன் கோயில்
முகவரி
பட்டவர்த்தி தான்தோன்றீஸ்வரர் சிவன் கோயில், பாபநாசம் வட்டம், தஞ்சை மாவட்டம் – 614 207.
இறைவன்
இறைவன்: தான்தோன்றீஸ்வரர் இறைவி: தையல் நாயகி
அறிமுகம்
கும்பகோணத்தின் மேற்கில் சுவாமிமலையை தாண்டியதும் அண்டகுடி உள்ளது அங்கிருந்து வடக்கு நோக்கி செல்லும் சாலையில் நான்கு கிமி தூரத்தில் உள்ளது இந்த பட்டவர்த்தி. பட்டர்களுக்கு மானியமாக மன்னர்களால் கொடுக்கப்பட்ட கிராமம் தான் இந்த பட்டர் விருத்தி இவர்கள் அருகாமையில் உள்ள ஆதனூர் எனும் ஊரில் உள்ள திவ்ய தேச கோயிலில் பணிபுரிந்த பட்டர்களாக இருக்கலாம். இவ்வூரின் ஒரு பகுதி மாரப்பநல்லூர் என அழைக்கப்படுகிறது. மாறவர்மன் நல்லூர் என இருந்து பின்னர் மருவி இருக்கலாம். இவ்வூரில் பெரிய சிவாலயம் ஒன்றுள்ளது. கிழக்கு நோக்கிய திருக்கோயில் கோயில் எதிரில் பெரிய குளம் ஒன்றும் உள்ளது. முகப்பில் கோபுரம் போன்ற ஒரு கட்டமைப்பில் நுழைவாயில் உள்ளது. அதன் இடது புறம் சிறிய மாடத்தில் விநாயகர், நுழைவாயில் கடந்தவுடன் நீண்ட தகர கொட்டகை இறைவனது முகப்பு மண்டபம் வரை நீள்கிறது. கொடிமர விநாயகர் நந்தி மண்டபங்கள் முன்னுள்ளன. இறைவன் பெரிய லிங்க வடிவில் கிழக்கு நோக்கியுள்ளார், இறைவி கோபுர வாயில் அருகிலேயே தனி கோயில் கொண்டு தெற்கு நோக்கியுள்ளார். இறைவன் தான்தோன்றீஸ்வரர். இறைவி தையல் நாயகி கருவறை கோட்டத்தில் விநாயகர் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மன் துர்க்கை ஆகியோர் உள்ளனர். முன்னொரு காலத்தில் பெருங்கோயிலாகவும், பெரும் திருவிழாக்கள் கொண்டு விளங்கிய இக்கோயில் பல பின்னடைவுகளை கண்டு தற்போதுள்ள நிலையை எட்டியுள்ளனது. பிரகாரத்தில் , நால்வர், சப்தமாதர் சன்னதிகள் வடக்கு நோக்கியபடி மதி சுவரை ஒட்டி உள்ளன. சிற்றாலயங்கள் விநாயகர், முருகன்,இருவருக்கும் உள்ளன. வழமைபோல் சண்டிகேஸ்வரர் நவக்கிரக சன்னதிகள் உள்ளன. , இறைவன் கோபுர விமானம் நன்கு உயர்ந்து பல அழகிய சுதை வடிவங்கள் கொண்டு கதை சொல்கின்றன. அம்பிகை சன்னதியை ஒட்டி கிழக்கு நோக்கிய சனைச்சரன் சன்னதி உள்ளது, வடகிழக்கில் நான்கு லிங்க பாணங்களும் பைரவர் சூரியனும் மேற்கு நோக்கியுள்ளனர்.. இக்கோயில் தொகுப்புக் கோயில் என்ற வகைப்பாட்டில் இந்துஅறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. கோயில் ஒருகால பூஜையில் உள்ளது கோயிலை காண விரும்புவோர் அருகாமை இல்லத்தில் உள்ளவர்களை அணுகினால் திறந்து தரிசனம் செய்து வைப்பார். # ”உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 – 2000
நிர்வகிக்கப்படுகிறது
இந்துஅறநிலையத்துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
அண்டகுடி
அருகிலுள்ள இரயில் நிலையம்
பாபநாசம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி