Sunday Nov 24, 2024

நெடுங்குன்றம் ஸ்ரீ இராமச்சந்திர பெருமாள் (யோக ராமர்) திருக்கோயில், திருவண்ணாமலை

முகவரி :

நெடுங்குன்றம் ஸ்ரீ இராமச்சந்திர பெருமாள் (யோக ராமர்) திருக்கோயில்,

நெடுங்குன்றம், திருவண்ணாமலை மாவட்டம்,

தமிழ்நாடு – 606807.

இறைவன்:

இராமச்சந்திர பெருமாள்

இறைவி:

செங்கமல்வல்லி

அறிமுகம்:

 ஸ்ரீ யோக ராமர் கோயில் தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டம், நெடுங்குண்டம் கிராமத்தில் அமைந்துள்ளது. இங்கு மூலவர் இராமச்சந்திர பெருமாள் என்றும், தாயார் செங்கமல்வல்லி என்றும் அழைக்கப்படுகிறார். இக்கோயிலில் ஸ்ரீராமர் அமர்ந்த நிலையில் காட்சியளிக்கிறார். ராமருக்கு இதைவிடப் பெரிய கோயில் தமிழ்நாட்டில் இல்லை. இக்கோயிலில் அவருடைய வில்லும் அம்பும் இல்லை. லக்ஷ்மணன் இந்த ஆயுதங்களை வைத்திருக்கிறான். இந்த கோவிலில் தான் கருவறையிலேயே அனுமனுக்கு இடம் உண்டு.

தல விருட்சம்: வில்வம்

தீர்த்தம்: சிவதீர்த்தம்

புராண முக்கியத்துவம் :

       இலங்கையில் ராவணனோடு யுத்தம் நடத்தி விட்டு அயோத்தி நோக்கி ராமர் சீதை லட்சுமணரோடு செல்லும் போது இவ்விடத்திற்கு வந்துள்ளார். அப்போது இங்குள்ள மலையில் தவம் செய்து கொண்டிருந்த சுகப்பிரம்ம ரிஷியின் ஆசிரமம் சென்றார். ராமனைக்கண்ட ரிஷி மகிழ்ச்சிக் கடலில் திளைத்தார். தாம் சேமித்து வைத்திருந்த அரிய சாஸ்திரங்கள் எழுதிய ஓலைச் சுவடியை ராமனிடம் கொடுத்தார். அதை ராமர் பணிவுடன் பெற்றுக் கொண்டாராம். ஆனந்தத்தில் மிதந்தாராம். தம்பியாகிய லட்சுமணரை தம் வலப்புறம் இருக்கச் செய்தார். இடப்பாகத்தில் சீதையை அமரச் செய்தார். ரிஷியிடம் வாங்கிய ஓலைச் சுவடியைப் படிக்குமாறு அனுமனிடம் கொடுத்தார். அனுமனும் பத்மாசனத்தில் அமர்ந்து படிக்கலானார். வேதத்தின் உட்கருத்தை கேட்டு இன்புற்று, முக்திகோபணிஷத் என்ற உபநிஷத்தை அனுமனுக்கு உபதேசித்தார் என்று தலவரலாறு கூறுகிறது.

நம்பிக்கைகள்:

இங்கு ராமர் சாந்த ராமராக உள்ளார். இவரை வணங்கினால் மன அமைதி, நிம்மதியான வாழ்க்கை கிடைக்கும். சுதர்சன ஆழ்வாரை வணங்கினால் கல்யாண வரம், குழந்தை வரம் ஆகியன கைகூடுகிறது. இத்தலத்தில் வியாபார விருத்தி, உத்தியோக உயர்வு, குடும்ப ஐஸ்வர்யம் ஆகியவற்றுக்காகவும் பக்தர்கள் பெருமளவில் வந்து வழிபடுகின்றனர்.

சிறப்பு அம்சங்கள்:

ஸ்ரீராமச் சந்திர மூர்த்தி சிறப்பு : கருவறையில் ஸ்ரீ ராம சந்திர மூர்த்தி சாந்த சொரூபியாக இருக்கிறார். வலக்கையினால் திருமார்பில் முத்திரை பதித்து அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி அளிக்க சீதாபிராட்டி வலது கையில் தாமரை மலரையும் இடக்கையை திருவடிச் சரணத்தை உணர்த்தும் அபயஹஸ்தமாக அண்ணலின் இடப்புறம் அமர்ந்திருக்க, தம்பி லட்சுமணன் வலப்புறத்தில் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.எங்கும் காணமுடியாத அற்புதக் காட்சியாக வாயுபுத்ரன் அனுமன் ஸ்ரீ ராமபிரான் எதிரில் சுவடிகளைக் கையில் கொண்டு தரையில் அமர்ந்து வேத வியாக்கியானம் செய்யும் நிலையில் காட்சி தருகிறார். முக்கிய அம்சம் என்ன வென்றால் இத்தலத்தில் இருக்கும் ஸ்ரீ ராமனிடம் வில் அம்பு இருக்காது.

வாழை இலை கோடு பிறந்த கதை : யுத்தம் முடித்து ராமர் அயோத்தி செல்லும் வழியில் இங்கு தவம் செய்த சுகபிரம்ம ரிஷியை பார்க்க வருகிறார். ரிஷி தன்னோடு ஒருநாள் தங்கி உணவருந்திவிட்டுச் செல்லுமாறு ராமரை வற்புறுத்துகிறார். ஆனாலும் சீதையை அழைத்துக்கொண்டு அயோத்தி வருவதற்கு அவர் குறிப்பிட்ட 14 ஆண்டுகள் முடியப்போகும் நிலையில் பரதன் அக்னி வளர்த்து யாக குண்டத்தில் விழ வேண்டிய சூழ்நிலை இருப்பதால் ராமர் ரிஷியின் பேச்சை தவிர்க்க முடியாமல் ராமர் தனது கணையாழியை அனுமரிடம் தந்து பரதனிடம் அண்ணார் வருவார் என்று கூறி சமாதானம் செய்து வரும் படி கூறினாராம். அதுபடியே பரதனை அனுமார் சமாதானம் செய்துவிட்டு திரும்ப வந்தாராம். பின்னர் ராமரும் அனுமாரும் அமர்ந்து ஒரே வாழை இலையில் சாப்பிடுகின்றனர்.அதற்கு வசதியாக ராமர் இலையின் மையத்தில் கோடு இழுத்தாராம்.ராமர் இழுத்த இந்த கோடுதான் வாழை இலையின் மையத்தில் அமைந்துவிட்ட கோடு ஆகும். இந்த செய்தியை செவிவழிக் கதையாக இத்திருத்தலத்தைப் பற்றி கூறுகிறார்கள்.

ஸ்ரீ ராமர் இத்தலத்தில் மட்டுமே அமர்ந்த நிலையில் உள்ளார் என்பது விசேஷம். ராமருக்கு இந்தளவு பெரிய தனி ஆலயம் தமிழகத்தில் வேறு எங்கும் இல்லை. சின் முத்திரையோடு வலது கையை மார்பின் மீது வைத்து இடது கையை உட்கார்ந்த நிலையில் முட்டியின் மீது கை வைத்து அமர்ந்த திருக்கோலத்தில் அர்த்தம் சொல்வது போல் உள்ளது. கோதண்டம், வில் அம்பு இன்றி ராமர் இருப்பது இங்கு மட்டுமே. அதற்கு பதில் வில் அம்போடு லட்சுமணர் அருகில் அமரந்துள்ளார். அனுமன் கர்ப்பகிரகத்துக்குள்ளேயே இருப்பதும் சிறப்பாகும். அனுமன் சுவடி ஏந்தி வாசித்துக் கொண்டிருப்பது போல் இருக்கிறார். இங்கு தவம் செய்த சுகபிரம்ம ரிஷி வேண்டுகோளின் படி ராமர் இங்கு ஒருநாள் தங்கிச் சென்றாராம். யுத்தம் முடிந்து திரும்புவதால் இங்கு ராமர் கோதண்டம், வில் அம்பு ஏதுமின்றி இருக்கிறார் என்பது சிறப்பு. கர்ப்பகிரகம் சுற்றி வருவதற்கு குகை போன்ற உட்பிரகாரம் அமைந்துள்ளது மிகவும் சிறப்பானதாகும். பரனூர் கிருஷ்ணாபிரேமி என்ற ரிஷிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர் இந்த ராமர்.

திருவிழாக்கள்:

      பங்குனி பிரம்மோற்சவம் – ஸ்ரீ ராம நவமி – 10 நாட்கள் சிறப்பாக நடைபெறும்.ஏழாம் நாள் நடைபெறும் திருத்தேர் விழாவும், பத்தாம் நாள் நடைபெறும் இந்திர விமானத் திருவிழாவும் அனைத்து மரபினரும் பங்கேற்று நடத்தும் பெரிய விழாவாகும். இது தவிர காணும் பொங்கலன்று ஸ்ரீ ராமச் சந்திர பெருமாள் மலையை வலம் வரும் வகையில் ஜகநாதபுரம், அரசம்பட்டு, வேப்பன்பட்டு வழியாக வில்லிவனம் சேத்துபட்டு கடைவீதி வீ , பழம்பேட்டை முதலிய ஊர்களுக்குச் சேவையளித்துப் பின்னர் நெடுங்குன்றம் வந்து சேரும் விழாவும் சிறப்பானதாகும். வைகாசி விசாகம் – கருட சேவை, கிருஷ்ண ஜெயந்தி – உறியடி உற்சவம். இவை தவிர வாரத்தின் சனிக்கிழமைகளில் கோயிலில் பக்தர்கள் கூட்டம் மிகப் பெரிய அளவில் இருக்கும். வருடத்தின் விசேஷ நாட்களான தமிழ், ஆங்கில புத்தாண்டு தினங்கள், தீபாவளி, பொங்கல் தினங்களில் சுவாமிக்கும் அம்பாளுக்கும் விசேஷ பூஜைகள் நடைபெறும். அப்போது பக்தர்கள் பெருமளவில் கலந்து கொள்வார்கள்.

காலம்

1500ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

நெடுங்குன்றம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

போளூர்

அருகிலுள்ள விமான நிலையம்

பாண்டிச்சேரி

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top