நாராயணவனம் கல்யாண வீரபத்திரர் திருக்கோயில், ஆந்திரப்பிரதேசம்

முகவரி :
அருள்மிகு கல்யாண வீரபத்திரர் திருக்கோயில்,
நாராயணவனம் – 517 581.
சித்தூர் மாவட்டம்,
ஆந்திர மாநிலம்.
இறைவன்:
கல்யாண வீரபத்திரர்
இறைவி:
பத்ரகாளி
அறிமுகம்:
நாராயணவனம் ஸ்ரீ கல்யாண வீரபத்திரர் ஸ்வாமி கோயில், ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம், நாராயணவனம் கிராமத்தில் அமைந்துள்ள சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இங்கு மூலவர் ஸ்ரீ கல்யாண வீரபத்திரர் சுவாமி என்றும் அன்னை பத்ரகாளி என்றும் அழைக்கப்படுகிறார். இக்கோயில் 1500 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது என்று கூறப்படுகிறது.
புராண முக்கியத்துவம் :
நாராயணபுரத்தை ஆகாசராஜன் ஆண்டு வந்தார். பெருமாள் பக்தரான அவருக்கு புத்திரபாக்கியம் இல்லை. புத்திரகாமேஷ்டி யாகம் நடத்த ஆயத்தமானார். யாகசாலை அமைப்பதற்காக நிலத்தைச் சீர்படுத்தியபோது, பூமிக்கு கீழே ஏர் கலப்பையில் பட்டு ஒரு பெட்டி வெளிப்பட்டது. அப்பெட்டியிலிருந்த தாமரையின் மத்தில், பெண் குழந்தையைக் கண்டான் மன்னன். பூமாதேவியின் அம்சமான அக்குழந்தை, அலர் (தாமரை) மேல் இருந்ததால், “அலர்மேல்மங்கை’ என்று பெயர் சூட்டினான் மன்னன். தாமரைக்கு “பத்மம்’ என்ற பெயரும் உள்ளதால் இவள், “பத்மாவதி’ எனவும் அழைக்கப்பட்டாள்.
இதனிடையே பிருகு மகரிஷி, மகாவிஷ்ணுவின் மார்பில் உதைக்கச் சென்றதால் கோபம் கொண்ட மகாலட்சுமி பூலோகம் வந்தாள். அவளைத்தேடி சீனிவாசனாக வந்த பெருமாள், தனது பக்தையான வகுளாதேவியின் மகனாக வளர்ந்தார். ஒருசமயம் அவர் வேட்டைக்குச் சென்றபோது, ஆகாசராஜன் அரண்மனையில் பத்மாவதியைச் சந்தித்து திருமணம் செய்ய முடிவெடுத்தார். அவர்களது திருமணம், நாராயணவனத்தில் நடந்தது.
தன் மகளின் திருமணம் சிறப்பாக நடந்தேற பாதுகாப்பு அருளும்படி, சிவனிடமும், அம்பாளிடமும் ஆகாசராஜன் வேண்டினான். சிவன் தனது அம்சமான வீரபத்திரரையும், அம்பிகை தனது அம்சமான பத்ரகாளியையும் அனுப்பி வைத்தனர். திருமணம் இனிதே நடந்தேறியது. பின்பு, ஆகாசராஜன் இங்கு வீரபத்திரர் மற்றும் பத்ரகாளிக்கு கல்யாண கோலத்தில் சிலை வடித்து கோயில் எழுப்பினான். இக்கோயில் திருப்பதி திருமலை தேவஸ்தான கட்டுப்பாட்டில் உள்ளது.
நம்பிக்கைகள்:
திருமணத்தடை நீங்க, தம்பதியர் ஒற்றுமையாக இருக்க இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.
சிறப்பு அம்சங்கள்:
ஆடியில் “தட்ச சம்ஹார’ விழா நடக்கிறது. இவ்விழாவின் 5ம் நாளில் பூக்குழி இறங்கும் வைபவம் நடக்கும். அதன் பின்னர், வீரபவீ த்திரர் சன்னதி முன்பு ஒரு வாழை மரத்தைக் கட்டி, அதையே தட்சனாக கருதிவெட்டுவர். தட்ச சம்ஹாரத்திற்கு மறுநாள் வீரபத்திரரின் உக்கிரம் தணிக்க, அவரது திருவாசியில் வெற்றிலையை செருகி பூஜை செய்கின்றனர். அடுத்த நாள் திருக்கல்யாணம் நடக்கும். விழாவின், கடைசி நாளில் மூன்று வகை நைவேத்யம், பழங்கள் படைத்து பூஜை செய்வர்.
திருவிழாக்கள்:
ஆடியில் தட்ச சம்ஹார விழா









காலம்
1500 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
திருப்பதி திருமலை தேவஸ்தானம்
அருகிலுள்ள பேருந்து நிலையம்
நாராயணவனம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
புதூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருப்பதி