Sunday Jun 30, 2024

நான்குநேரி வானமாமலை பெருமாள் திருக்கோயில், திருநெல்வேலி

முகவரி

திரு வானமாமலைப் பெருமாள் கோயில், வானமாமலை (நாங்குனேரி), திருநெல்வேலி, மாவட்டம் – 627 108.

இறைவன்

இறைவன்: வானமாமலை பெருமாள் இறைவி: வரங்கை நாச்சியார்

அறிமுகம்

நாங்குநேரி வானமாமலை பெருமாள் கோயில் தமிழ்நாட்டில் திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி என்னும் ஊரில் அமைந்துள்ள பெருமாள் கோயிலாகும்.இக்கோயில் பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.இக்கோயிலில் வானமாமலைப் பெருமாள், திருவரமங்கை தாயார் சன்னதிகள் உள்ளன. இங்குக் கோயில் கல்வெட்டு உள்ளது. இக்கோயிலில் ஏழு நிலை கொண்ட ராஜகோபுரம் உட்பட மொத்தம் ஏழு கோபுரங்கள் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. மரபு சாராத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது. இத்திருத்தலத்தை பற்றிய செய்திகள் பிரமாண்ட புராணம், கந்தபுராணம் மற்றும் நாரத புராணங்களில் இடம் பெற்றுள்ளன. லட்சுமி தாயார் இத்திருத்தலத்தில் குழந்தையாக பிறந்ததால், இத்திருத்தலம் வரமங்கை என்றும் அழைக்கப்படுகிறது. ஆதிசேஷன் இத்திருத்தலத்தில் தவமிருந்து மகாவிஷ்ணுவை சுமக்கும் பாக்கியம் பெற்றான். கருடாழ்வாரும் இங்கு தவம் இயற்றி வைகுண்ட வாசலில் நிற்கும் பேறு பெற்றார்.

புராண முக்கியத்துவம்

முன்னொரு காலத்தில் காட்டிற்கு வேட்டைக்கு சென்ற சிந்து தேசத்து மன்னன், வழி தவறி தனது நண்பர்களையும், பணியாளர்களையும் விட்டு நெடுந்தூரம் சென்று விட்டான். காட்டிற்குள் ஒரு சிறு குடிசையை கண்ட மன்னன், அந்த குடிசைக்குள் சென்றான். அப்போது அந்த குடிசைக்குள் கொஞ்சம் உணவு இருப்பதை பார்த்த மன்னன், அந்த உணவை உண்டு பசியாறிக்கொண்டான். அந்த நேரத்தில் வெளியில் சென்று விட்டு திரும்பிய ‘குஷாணனா’ என்னும் முனிவர், தனது குடிசைக்குள் வேறு ஒருவர் இருப்பதையும், விஷ்ணுவிற்கு படைப்பதற்காகத் தான் வைத்து இருந்த உணவை அவர் தின்று விட்டதையும் கண்டு கடும் சினம் கொண்டார். ஆத்திரத்தில் முனிவர், அந்த மன்னனை ‘நாயாக மாறுவாய்’ என்று சபித்து விட்டார்.சாபம் பெற்ற மன்னன், ‘எப்போது நான் சாபத்தில் இருந்து விடுதலை ஆவேன்?’ என்று முனிவரை கேட்டான். அதற்கு முனிவர், ‘உலகத்தின் மிகச் சிறந்த தீர்த்தத்தில் நீராடும்போது உன் சாபம் நீங்கப் பெறுவாய்’ என்று விமோசனம் கூறினார். நாயாக மாறிய மன்னன் காட்டில் அலைந்து திரிகையில், வேடர்களால் பிடிக்கப்பட்டு இத்திருத்தலம் அமைந்துள்ள இடத்திற்கு வந்து சேர்ந்தான். பின்னர் இத்தலத்தில் உள்ள சேற்று தாமரை தீர்த்தத்தில் வேடர்களுடன் நீராடியபோது தனது சாபம் நீங்க பெற்றான். பிறகு ஆலயத்தில் இறைவனை வழிபட்டு நாடு திரும்பியதாக தல வரலாறு தெரிவிக்கிறது. இத்திருத்தலம் ஒரு சுயம்பு தலமாகும். இத்திருத்தலத்தின் சேற்று தாமரை தீர்த்தமே திருப்பாற்கடல் என்று கூறப்படுகிறது. நம்மாழ்வார் இத்தலத்து இறைவனை பத்து பாசுரங்களில் பாடி மங்களாசாசனம் செய்துள்ளார்.

நம்பிக்கைகள்

இத்திருத்தலத்தின் இறைவனுக்கு தினமும் எண்ணெயால் அபிஷேகம் செய்யப்படுகிறது. அபிஷேகம் செய்யப்பட்ட எண்ணெய், அங்குள்ள ஒரு கிணற்றில் ஊற்றப்படுகிறது. பின்னர் அந்த கிணற்றில் இருந்து எடுத்து பக்தர்களுக்கு பிரசாதமாக தரப்படுகிறது. இந்தப் பிரசாத எண்ணெயானது சகல நோய்களையும் தீர்க்கும் அருமருந்து என்று பக்தர்களால் நம்பப்படுகிறது.

சிறப்பு அம்சங்கள்

இத்திருக்கோவிலில் அமைந்துள்ள ஒவ்வொரு தூண் களிலும் நான்கைந்து சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. அவற்றுள் சிறப்பானவை, அனுமனை அணைத்து நிற்கும் ராமபிரானின் திருக்கோலமும், பீமனை எட்டிப்பிடிக்கும் புருஷாமிருகத்தின் சிற்பமும் ஆகும். கருவறையில் தோத்தாத்திரி நாதர், பட்டாபிஷேக கோலத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். அவரது அருகில் ஸ்ரீதேவி, பூதேவி தாயார் இருமருங்கிலும் இருக்க, ஊர்வசியும், திலோத்தமையும் சாமரம் வீசிக்கொண்டு இருக்கின்றனர்.

திருவிழாக்கள்

இங்கு சித்திரை மாதம் பத்து நாட்கள் பிரம்மோற்சவம் நடைபெறும். பத்தாம் நாள் தேரோட்டம் விமரிசையாக நடைபெறும். புரட்டாசி மாதம் நவராத்திரி உற்சவமும், புரட்டாசி சனிக்கிழமை வழிபாடும் விசேஷமாக நடைபெறும்.கார்த்திகை மாதம் திருக்கார்த்திகை தீபத்தை ஒட்டி சொக்கப் பனை ஏற்றுதல் நடைபெறும்.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்துசமயஅறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

நாங்குனேரி

அருகிலுள்ள இரயில் நிலையம்

நாங்குனேரி

அருகிலுள்ள விமான நிலையம்

தூத்துக்குடி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top