நல்லவிநாயகபுரம் சிவன் கோயில்
முகவரி
நல்லவிநாயகபுரம் சிவன் கோயில், சீர்காழி வட்டம், மயிலாடுதுறை மாவட்டம் – 609 102.
இறைவன்
இறைவன்: சிவன்
அறிமுகம்
சிதம்பரத்தில் இருந்து சீர்காழி செல்லும் சாலையில் கொள்ளிடம் பாலம் கடந்து சென்றால் கொள்ளிடம் ஊர் வரும். அங்கிருந்து மகேந்திரப்பள்ளி செல்லும் சாலையில் சுமார் 5 கி. மி. சென்றால் ஆச்சாள்புரம் உள்ளது. அதற்கு ஒரு கிமி முன்னதாக இருப்பது நல்லவிநாயகபுரம் பேருந்து நிறுத்தம், இந்த பேருந்து நிறுத்தத்தில் இருந்து ஒருகிமி தெற்கில் சென்றால் நல்லவிநாயகபுரம் அடையலாம். இவ்வூருக்கு பேருந்துகள் இல்லை. நல்லூரில் உள்ள நம்பியாண்டார் நம்பியின் மகள் மங்கை நல்லாளை ஞானசம்பந்தருக்கு மணம் முடிக்க அவரது தந்தை சிவபாத இருதயர். எண்ணினார். ஆச்சாள்புரம் கோயிலில் திருமணம் நடக்க இருந்தது. திருநீலக்க நாயனார் மணவிழா சடங்குகளை செய்தார். சம்பந்தர் அக்னியை வலம் வரும் போது “இருவினைக்கு வித்தாகிய இல்வாழ்க்கை நம்மை சூழ்ந்ததே, இனி இவளோடும் அந்தமில் சிவன் தாள் சேர்வேன்” என்று கூறி, “கல்லூர்ப் பெருமணம்’ என தொடங்கும் பதிகம் பாடி சிவனின் திருவடியில் சேரும் நினைவோடு இறைவனை வழிபட்டார். அப்போது எல்லாம் வல்ல ஈசன் ஜோதிப்பிழம்பாக தோன்றி,””நீயும் உனது மனைவியும் திருமணம் காண வந்தோர் அனைவரும் இந்த ஜோதியில் கலந்து விடுக”என்று அருள்புரிந்தார். இந்த திருமணத்திற்கு முன்னர் விநாயகருக்கு பூஜை செய்த இடம் தான் இந்த நல்ல-விநாயகர்-புரம். தற்போது நல்லவிநாயகபுரம், நல்லநாயகபுரம், நல்லநாயகிபுரம் என மருவி வழங்குகிறது. இவ்வூரின் முகப்பிலேயே உள்ளது சிவாலயம். வெளியில் இருந்து பார்க்கும்போதே தெரிகிறது கோயில் பராமரிப்பின்றி உள்ளது என. கோயில் கிழக்கு நோக்கியுள்ளது, எதிரில் அழகிய பெரிய குளம் ஒன்று சதுரவடிவில் உள்ளது.கோயிலின் எதிரில் குளத்தில் இறங்க படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. சுற்றிவரும் உயர்ந்த மதில் சுவரின் நடுவில் சன்னதிகள் அமைந்துள்ளன. மதில் சுவருடன் கூடிய உயர்ந்த தேக்குமரகதவுகள் அழகாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. கிழக்கு நோக்கிய இறைவன் சன்னதி, தெற்கு நோக்கிய இறைவி சன்னதி இரு கருவறைகளையும் ஒரு முகப்பு மண்டபம் இணைக்கிறது. தரையில் இருந்து பிரஸ்தரம் எனப்படும் மேல்மட்டம் வரை கருங்கல் பணியாக உள்ளது. அதன் வாயில் எதிரில் சிறிய நந்தியும் பலிபீடமும் உள்ளன. வாயில் இருபுறம் சிறுமாடங்களில் விநாயகர் மற்றும் தண்டபாணி கோல முருகன் உள்ளார்கள். இறைவன் சிறிய நடுத்தர அளவுடைய லிங்கமூர்த்தி. அவருக்கு ஏற்றாற்போல் அம்பிகையும் உள்ளார். கொடிமரமில்லை அதற்க்கான பீடம் உள்ளது. பிரகார வலம் வரும்போது மடைப்பள்ளியை எட்டிப்பார்க்க, அது உட்புறம் இடிந்து கிடக்கிறது. பிரகாரத்தின் பின்புறம் விநாயகர் சிறிய சன்னதி கொண்டுள்ளார். அருகில் மதில் சுவற்றில் ஒட்டப்பட்ட சன்னதியாக லட்சுமி நாராயணர் சன்னதி உள்ளது. அதனை ஒட்டினாற்போல் கிழக்கு நோக்கிய லிங்கமூர்த்தி பெயர் தெரியவில்லை. வடமேற்கில் முருகன் தன் இரு துணைவியாருடன் இருக்கும் சிற்றாலயம், அதன் மேல் அழகிய சுதை வடிவங்கள் மிக அற்புதமான முகபாவம் கொண்டுள்ளன. சண்டேசர் இறைவனை நோக்கியபடி தியானத்தில் அமர்ந்துள்ளார் அதனால் தானோ என்னவோ அவருக்கு எண்ணை சார்த்துதல் கூட இடையூறு என்றெண்ணி அதை செய்யாமல் போயுள்ளனர். கோயிலின் விமானங்கள் சுதைகள் அனைத்தும் பாசி முளைத்து பச்சையாய் உள்ளது, சில இடங்களில் செடிகள் முளைத்துள்ளன.மதில் சுவர் வெற்றிலை காவி படிந்த பற்கள் போல ஈயென்று செங்கற்கள் காட்டி நிற்கின்றன. கருவறை கோட்டங்களில் விநாயகர், தென்முகன் லிங்கோத்பவர், பிரம்மன் துர்க்கை என பஞ்ச கோஷ்டத்து மூர்த்திகள் உள்ளனர். வடகிழக்கில் காலியாக இரு அறைகள், தெற்கு நோக்கிய நடராஜர் சன்னதி அருகில் பள்ளியறை என நினைக்கிறேன். மேற்கு நோக்கிய ஒரு மண்டபத்தில் ஒரு லிங்கமூர்த்தி சிவலோகநாதர் எனும் பெயர் கொண்டுள்ளார். அடுத்து பைரவர் அருகில் சிவசூரியன் எனும் பெயரில் சூரியபகவான் தனது இரு துணைவியாருடன் உள்ள காட்சி ஒரே கல்லில் செதுக்கப்பட்டுள்ளமை அழகுடையது. அருகில் ஒரு நாகர் சிலை. நவகிரகங்கள் சிறிய மண்டபத்தில் அழகிய வடிவம் கொண்டுள்ளனர்.. ஒருகால பூஜைக்கு குருக்கள் அருகாமை ஊரில் இருந்து வருகின்றார் என்பது மட்டும் ஆறுதலான செய்தி. இறைவியின் கருவறை ஒட்டி பச்சைபேசெலேன தழைத்தோங்கிய வில்வமரம் ஒன்றுள்ளது, ஆனால் மாலையாக்கி வரம் வேண்டிடத்தான் யாருமில்லை!! # ”உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 to 2000
நிர்வகிக்கப்படுகிறது
.
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கொள்ளிடம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
கொள்ளிடம்
அருகிலுள்ள விமான நிலையம்
பாண்டிச்சேரி