நரிமணம் ஶ்ரீநிவாசப் பெருமாள் திருக்கோயில், நாகப்பட்டினம்
முகவரி :
நரிமணம் ஶ்ரீநிவாசப் பெருமாள் திருக்கோயில்,
நரிமணம்,
நாகப்பட்டினம் மாவட்டம் – 611002.
இறைவன்:
ஶ்ரீநிவாசப் பெருமாள்
இறைவி:
ஶ்ரீதேவி-பூதேவி
அறிமுகம்:
ஶ்ரீராமர் தமது வனவாசத்தின்போதும் சீதையைத் தேடி இலங்கைக்குப் பயணப்பட்ட போதும் வழியில் பல திருத்தலங்களுக்கு எழுந்தருளினார். அவற்றில் ஒரு தலம்தான் நரிமணம். நரிமணம் காவிரி டெல்டா பகுதியில் இருக்கும் கிராமம். சிறிய ஊர் என்றாலும் மிகவும் புராதனமானது. இங்குள்ள இரண்டு ஆலயங்கள் இவ்வூரின் பழைமைக்குச் சான்றாகத் திகழ்கின்றன. ஒன்று ஶ்ரீஅகஸ்தீஸ்வரர் கோயில். மற்றொன்று ஶ்ரீநிவாஸ பெருமாள் கோயில். இவ்வூரின் புராதனப் பெயர் ‘ஹரிவனம்’ என்கிறார்கள் ஊர்க்காரர்கள்.
புராண முக்கியத்துவம் :
ஶ்ரீராமர் தன் வனவாசக் காலத்தில் யாத்திரை மேற்கொண்டிருந்த போது, இந்தத் தலத்துக்கு வந்து தங்கினார். அப்போது இந்தத் தலம் வனமாயிருந்தது. ஶ்ரீஹரியாகிய ராமச் சந்திரர் வந்து தங்கிய காரணத்தால் அந்த வனமும் இடமும் ஹரிவனம் என்றாயின. அதன்பின் ரிஷிகளும் முனிகளும் அங்கே பெருமாளுக்கு ஒரு கோயில் எழுப்பி வழிபட வேண்டும் என்று விரும்பி அவ்வண்ணமே செய்தனர் என்கிறது இந்த ஊரின் தலபுராணம். இந்த ஊர் குறித்த பல்வேறு செய்திகள் அகஸ்தீஸ்வரர் கோயில் கல்வெட்டுகளில் காணப்படுகின்றன என்கிறார்கள்.
ஒருகாலத்தில் இந்த ஊரில் கோயிலை ஒட்டியே நான்கு வேதங்களும் ஓதும் பண்டிதர்கள் வாழ்ந்தனர். அவர்கள் தினமும் சிவன் மற்றும் விஷ்ணு ஆலயங்களில் முறையாக வேத பாராயணங்கள் செய்துவந்தனர் என்றும், அக்காலத்தில் அந்தப் பகுதியே செழித்து விளங்கியது என்றும் சொல்கிறார்கள்.
“காலப்போக்கில். ஊரில் பல குடும்பங்கள் வேலை, தொழில் நிமித்தம் வேறு ஊர்களுக்கு இடம்பெயர்ந்தனர். பராமரிப்பவர்கள் இன்றிக் கோயில்களும் ஊரும் நலிவுற்றன. பிறகு, அமரர் எஸ்.எஸ்.வாசன் காலத்தில் இந்தக்கோயில் சீர்செய்யப்பட்டு வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன. அன்று முதல் இன்று வரையிலும் அவரின் குடும்பத்தாரே இந்தத் திருப்பணியைச் செய்து வருகிறார்கள்’’ என்று நெகிழ்ச்சியுடன் சொல்கிறார்கள் உள்ளூர் பக்தர்கள் சிலர். 2006-ம் ஆண்டும் இந்தக் கோயிலின் கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதன்பிறகு ஜூலை 6-ம் தேதி 2022-l கும்பாபிஷேகம் – மகா சம்ப்ரோக்ஷணம் நடைபெற்றது.
சிறப்பு அம்சங்கள்:
ஊரின் நடுவே அமைந்திருக்கிறது ஶ்ரீதேவி-பூதேவி சமேத ஶ்ரீநிவாசப் பெருமாள் திருக்கோயில். இந்தக் கோயிலின் தற்போதைய கட்டுமானம் 300 ஆண்டுகள் பழைமையானது என்கிறார்கள். எளிமையான இந்த ஆலயத்தின் வாசலிலேயே அமைந்திருக்கும் கதவுக்கு மேல் இது ஹரிவனமே என்பதை நினைவூட்டும் விதமாக ஶ்ரீராமச்சந்திரமூர்த்தி திருக்காட்சி அருள்கிறார்.
அவரை வணங்கி உள்ளே நுழைந்தால் பலி பீடம். அதற்குப் பின்புறம் கருடாழ்வார் பெருமாளை தரிசித்தநிலையில் எழுந்தருளியிருக்கிறார். மண்டபம் போன்ற அந்தச் சிறிய பகுதியை அடைந்தாலே ஶ்ரீநிவாஸ பெருமாளை தரிசனம் செய்ய முடியும். கருவறையில் பெருமாள் சங்கு சக்ர கதாதாரியாக, அபய ஹஸ்தத்தோடும், திருப்பதி பெருமாள் போல ஒரு கையை இடையில் வைத்துக் கொண்டும், ஶ்ரீதேவி-பூதேவி தாயாரோடு எழுந்தருளியிருக்கிறார்.
திருவிழாக்கள்:
ஆண்டுதோறும் புரட்டாசி சனிக்கிழமைகளை விசேஷமாகக் கொண்டாடுவார்கள். சுற்றியிருக்கும் கிராமங்களிலிருந்தும் பக்தர்கள் வந்து வழிபடுவார்கள். அதேபோன்று மார்கழி முப்பதுநாளும் அதிகாலை திருப்பள்ளியெழுச்சியோடு ஆராதனங்கள் நடைபெறும். இப்போது வைகுண்ட ஏகாதசியும் கோலாகலமாக நடைபெறுகிறது.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத்துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
நரிமணம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
நாகப்பட்டினம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி