நந்தனார் குடில்
முகவரி
நந்தனார் குடில், சிதம்பரம் நகரம், கடலூர் மாவட்டம்
இறைவன்
இறைவன்: நந்தனார்
அறிமுகம்
உடலால் உள்ளத்தால் இறைவனை எப்போதும் துதித்தவர் திருநாளைப்போவார் எனும் நந்தனார். இவருக்காக ஈசனே நந்தியே சற்று விலகு நந்தன் தரிசிக்கட்டும் என்று சொன்னார் என்றால் இவரின் பக்தி எப்பேற்பட்டது. வைத்தீஸ்வரன் கோவில் அருகே உள்ள மேல ஆதனூர் இவர் பிறந்த ஊர். இப்பிறவியை கடந்தேற சிவனது பாதம் பணிவதே ஓரே வழி என கருதி ஈசனை பற்றியே சிந்தித்தார். சிதம்பரம் சென்று நடராஜபெருமானை தரிசிக்க வேண்டும் என்பது அவரின் நீண்டகால விருப்பம் பல கட்ட போராட்டங்களின் பின்னர் தில்லை வந்த அவருக்கு ஆலய தரிசனம் மறுக்கப்பட்டது. ஆதலால் தில்லையின் எல்லையை பிரகாரமாக எண்ணி சுற்றி சுற்றி வந்தார். நடராஜப்பெருமானின் நேர் எதிரில் உள்ள ஓரிடத்தில் குடில் அமைத்து தங்கி ஆலய மணி எழுப்பும் ஓசையை கொண்டு அங்கு நடைபெறும் ஆறு கால பூஜையை மானசீக தரிசனமாக கண்டார். தில்லை நடராஜசபையின் அருகில் உள்ளது சிகண்டி பூர்ணம் மணிகள். சிதம்பரத்தில் ஓசை எழுப்பும் சிகண்டி பூர்ணம் மணி பெரும்பாலான பக்தர்களுக்கு இரண்டு மணியாகத் தோற்றமளிக்கும். என்று இந்த இரண்டு மணிகளும் ஒரே மணி ஓசையாக கேட்கிறதோ அன்று ஆன்மீகத்தில் முதல் பாடம் பயில தகுதி பெற்றதாகக் கணக்கில் கொள்ளலாம். சிகண்டி பூர்ணம் மணியை ஒவ்வொரு கோணத்தில் நோக்கினால் ஒவ்வொரு விதமான தத்துவத்தை வெளிப்படுத்தும் தன்மை உடையது. இந்த சிகண்டி பூர்ணம் எழுந்தருளி இருக்கும் திசை தென்கிழக்கு. அது அக்னி பகவானுக்கு உரியது. வெப்பம், ஒளி என்ற இரண்டு இணை பிரியா அம்சங்களுடன் விளங்குவதே அக்னி. இம்மணியை அக்னி பகவானுக்கு உரிய இரு நாக்குகளாக பெரியோர்கள் வர்ணிக்கிறார்கள். வாலாட்டி, சாலாட்டி என்ற அக்னி பகவானின் இரு நாக்குகள் இந்த ஒளி, உஷ்ண தத்துவத்தை வெளிப்படுத்துகின்றன. இவ்வாறு இறை மார்கத்தில் முன்னேற நினைக்கும் அடியார்கள் தங்கள் வாக்கில் தீயையும் தெளிவையும் பெற்றிருக்க வேண்டும் என்ற எண்ணத்தை தொடர்ந்து அளிப்பதே சிகண்டி பூர்ணமாகும். எந்த அளவிற்கு சிதம்பர திருத்தலத்தில் எழுந்தருளி இருக்கும் சிகண்டி பூர்ண மணி ஓசையை ஒரு மனிதன் தன் வாழ்நாளில் கேட்டு உணர்ந்து பக்தி கொள்கிறானோ அந்த அளவிற்கு அவன் என்றும் மாறா இளமையுடன் திகழ்வான் என்பது உறுதி.
புராண முக்கியத்துவம்
சிகண்டி பூர்ண மணியின் ஓசையை நந்தனார் அமர்ந்து கேட்ட இடம் தான் இந்த செங்காட்டான் தெரு எனப்படும் சென்று கேட்டான் தெரு. தெற்கு கோபுரத்தின் எதிரில் செல்வது தான் சீர்காழி சாலை, இதில் பச்சையப்பன் பள்ளிக்கு அடுத்த தெரு தான் மன்னார்குடி தெரு. இந்த தெருவில் திரும்பி சரியாக 200மீட்டர் சென்றவுடன் இடது புறம் திரும்பும் செங்காட்டான் தெருவில் 100மீட்டர் சென்றவுடன் வலது புறம் கிழக்கு நோக்கிய விநாயகர் கோயில் உள்ளது, அதன் எதிரில் ஐந்தடி அகல சந்து ஒன்று உள்ளது அதில் உள்ளே சென்றால் வடக்கு நோக்கிய நந்தனார் கோயில் உள்ளது. இந்த இடம் ஏறக்குறைய தில்லை நடராஜரின் நேர் தெற்கில் உள்ளது அதனால் தான் நந்தனார் இந்த இடத்தில் குடிலமைத்து தங்கியுள்ளார் என ஊகிக்கலாம். முற்றிலும் அழகாக செங்கல்லால் கட்டப்பட்ட கோயில், முகப்பு கோபுரம் இல்லை, மையத்தில் நந்தனார் கருவறையும் சுற்றிவர மூடப்பட்ட பிரகாரமும் உள்ளன. அதில் பக்கத்திற்கு மூன்று சன்னல்கள் உள்ளன, நான்கு புறமும் ஆக்கிரமிப்புகள் எனினும் நல்ல மக்கள், இக்கோயிலை எந்த விதத்திலும் சேதப்படுத்தாமல் வைத்துள்ளனர். தற்போது பூஜைக்கு என ஒரு அர்ச்சகர் வந்து செல்கிறார் என சொல்கின்றனர். கருவறையில் நந்தனார் நடராஜரை இங்கிருந்தே கரம் குவித்து வணங்கி நிற்கின்றார். அருகில் ஒரு முனிவர் யாரென தெரியவில்லை. இரு சிலைகள் மட்டுமே உள்ளன. உள்ளே பிரகாரத்தில் விநாயகர், முருகன் உள்ளனர். நாயன்மார்கள் எத்தகைய சூழலிலும் தங்களது நிலைகுலையாகத பக்தியினை வெளிப்படுத்தியவர்கள். இன்றைய சூழலில் பணம், பகட்டு வேண்டி மதம் மாறும் சில பிரபலங்களை பின் பற்றாமல் நாயன்மார்களை பின்பற்றி உலகின் உன்னத மதமான இந்து மதத்தில் பிறப்பெடுத்ததை எண்ணி பெருமை கொள்வோம். # ”உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 – 2000
நிர்வகிக்கப்படுகிறது
–
அருகிலுள்ள பேருந்து நிலையம்
சிதம்பரம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
சிதம்பரம்
அருகிலுள்ள விமான நிலையம்
புதுச்சேரி