தென்னேரி ஆபத்சகாயேஸ்வரர் கோயில், காஞ்சிபுரம்
முகவரி :
தென்னேரி ஆபத்சகாயேஸ்வரர் கோயில்,
தென்னேரி, காஞ்சிபுரம் மாவட்டம் – 631604.
இறைவன்:
ஆபத்சகாயேஸ்வரர்
இறைவி:
ஆனந்தவல்லி
அறிமுகம்:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மிகத் தொன்மையும் வரலாற்றுச் சிறப்புகள் மிக்கதுமான தென்னேரி என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்குள்ள பெரிய ஏரியின் பெயரிலேயே ஊர் அமைந்துள்ளது. மத்திய தொல்லியல் துறையின் கண்காணிப்பில் உள்ள இத்திருக்கோயில் மத்திய தொல்லியல் துறை மூலம் பாதுகாக்கப்பட்டு, 2015-ஆம் ஆண்டில் கடைசியாக குடமுழுக்கும் நடத்தப்பட்டுள்ளது..
காஞ்சிபுரம் – தாம்பரம் செல்லும் வழியில் வாலாஜாபாத்திலிருந்து 8 கி. மீ. தூரத்தில் தென்னேரி கிராமம் அமைந்துள்ளது. பெங்களூர் நெடுஞ்சாலையில் சுங்குவார் சத்திரத்திலிருந்து இடதுபக்கம் திரும்பிச்சென்றால் 10 கி. மீ. தூரத்தில் தென்னேரி கிராமம் உள்ளது.
புராண முக்கியத்துவம் :
ராஜராஜனுடைய இருபதாம் ஆட்சியாண்டுக் கல்வெட்டில் ஸ்ரீ உத்தம சோழ சதுர்வேதி மங்கலத்தின் சபை கூடி எடுத்த தீர்மானம் உள்ளது. இக்கோயில் பள்ளிப்படையாக இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. தூங்கானை மாடவடிவில் ஆபத்சகாயேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. முதல் குலோத்துங்கனின் காலத்தில் கற்றளியாகக் கட்டப்பட்டிருக்க வேண்டும்.
நம்பிக்கைகள்:
பித்ருதோஷ நிவர்த்தி, திருமணத்தடை மற்றும் மழலைப்பேறு தடைகள் நீங்கும்.
சிறப்பு அம்சங்கள்:
கருவறையில் பெரிய வட்டவடிவ ஆவடையாருடன் சுவாமி அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர், தன்னை நாடிவரும் தனது பக்தர்களின் குறை தீர்த்து அருள்புரிகிறார். அபிஷேக விபூதி பெற்று அதை நீரில் இட்டு உட்கொண்டு வந்தால் பலவிதமான நோய்கள் தீரும் என்பது சொல்வழக்கு. வருகின்ற துயர்களை துடைத்து ஆனந்தவாழ்வளிக்கிறார் ஆபத்சகாயேஸ்வரர்.
அம்பிகை ஸ்ரீ ஆனந்தவல்லி சாந்த சொரூபியாய் தெற்கு நோக்கி வீற்றிருந்து அருள்புரிகிறார். மேற் திருக்கரங்கள் இரண்டிலும் அபூர்வமாய் வேறெங்கும் காணாத வடிவோடு பாசம் தாங்கியும், கீழ்க்கைகளில் அபய வரதம் தாங்கியும் அருளுகின்றார்.
ஆலயத்தின் திருச்சுற்றில் தெற்கு நோக்கி நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தி, மேற்கு நோக்கி மஹா விஷ்ணுவும், வடக்கு நோக்கி பிரம்மா மற்றும் ஸ்ரீ விஷ்ணு துர்க்கையும் வீற்றிருந்து அருளுகின்றார். தென்முகச் சுவற்றில் ராஜா, ராணி அவர்களது மகன் சிவலிங்கத்தை வணங்குவது போன்று அற்புத வடிவமைப்பு உள்ளது. கீழே பலகனியில் துவாரபாலகர்கள் உள்ளனர். அம்பிகை சந்நிதிக்கு அருகில் பைரவர் சந்நிதியும் அமைந்திருந்து அருளுகிறார்.
காலம்
1090 ஆம் நூற்றாண்டு
அருகிலுள்ள பேருந்து நிலையம்
தென்னேரி
அருகிலுள்ள இரயில் நிலையம்
வாலாஜாபாத்
அருகிலுள்ள விமான நிலையம்
சென்னை