Friday Jul 05, 2024

தில்லைவிளாகம் வீரகோதண்டராமர் திருக்கோயில், திருவாரூர்

முகவரி

அருள்மிகு வீரகோதண்டராமர் திருக்கோயில், தில்லைவிளாகம், திருத்துறைப்பூண்டி அருகே, திருவாரூர் மாவட்டம். போன்: +91 80568-56894

இறைவன்

இறைவன்: வீரகோதண்டராமர் இறைவி: சீதை

அறிமுகம்

தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி தாலுகாவில் உள்ள தில்லைவிளாகம் கிராமத்தில் அமைந்துள்ள கோதண்டராமர் கோயில் ராமருக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும். இது ராமர் மற்றும் சிவன் (நடராஜா) கோவில். இங்கு தில்லை நடராஜர் கோவில் இருப்பதால், இத்தலம் தில்லை விளாகம் என்று அழைக்கப்படுகிறது. திருவாரூர் மாவட்டத்தில் தில்லைவிளாகம், பருத்தியூர், வடுவூர், முடிகொண்டான், அடம்பர் ஆகிய ஐந்து அருள்மிகு தலங்கள் பஞ்ச ராம க்ஷேத்திரங்களாக விளங்குகின்றன. ராமரின் வாழ்வியல் தத்துவத்தை வெளிக்கொணரும் ‘ராம சாரம்’ என்ற கல்வெட்டு அம்பு ஏந்தியபடி மூலவர் காட்சியளிக்கும் ஒரே ராமர் கோயில்.

புராண முக்கியத்துவம்

கி.பி. 1862-ஆம் ஆண்டில் வேலுத்தேவர் என்பவர் ஸ்ரீராமர் மடம் ஒன்று கட்டவேண்டுமென்று கனவில் தோன்றியதைச் செயல்படுத்தும் நோக்கத்துடன் குளம் வெட்டும்போது சில அடிகள் தோண்டியவுடன் செங்கற்கள் பல தெரிந்தன. இன்னும் ஆழமாக தோண்டியதும் செங்கல் கட்டடம் ஒன்று அங்கே புதைந்து இருக்கிறது என்பது தெரியவந்தது. அதே ஆண்டு கார்த்திகை மாதம் 12-ஆம் நாள் புதன்கிழமை அன்று பதினான்கு அழகான பஞ்சலோக விக்கிரகங்கள் அவ்விடத்தில் கிடைத்தன. அப்படிக் கிடைத்தவை சுமார் ஐந்தடி, நாலரை அடி, நாலடி உயரமுள்ள ஸ்ரீராமர், இலக்குவனார், சீதாபிராட்டியார், அனுமான் மற்றும் (அதே போல் இரண்டரை அடி, இரண்டேகால் அடி உயரமுள்ள ஸ்ரீராமர், இளையபெருமாள், சீதாபிராட்டியார், அனுமான் 1913-ல் புதிதாக உற்சவத்துக்காகச் செய்து வைக்கப்பட்டது) செல்வர், சக்கரத்தாழ்வார், ருக்மணி – சத்யபாமாவுடன் கூடிய கண்ணன், சந்தானகிருஷ்ணன் ஆகியவை ஆகும். `உடனே வேலுத்தேவர் அங்கு ஒரு குடிசை போட்டு உயரமான ஸ்ரீராமர், லட்சுமணன், சீதை, அனுமான் ஆகியோரை மூல விக்கிரகங்களாகவும், உயரம் குறைந்த இவர்களது திருமேனிகளுடன் இதர உலோகத் திருமேனிகளை உத்ஸவ மூர்த்திகளாகவும் வைத்து வழிபட தொடங்கினார். 14 ஆண்டுகள் வனவாசம் பூர்த்தியாகி அயோத்திக்குத் திரும்பும்போது பரத்வாஜ முனிவர் ஆசிரமத்தில் ஸ்ரீராமர் தங்கியிருந்ததாக வால்மீகி ராமாயணத்திலும் கம்பராமாயணத்திலும் கூறப்பட்டுள்ளது. ஆக இந்த தில்லைவிளாகம் பரத்வாஜ முனிவர் வாழ்ந்த இடமாக நாம் அறியமுடிகிறது. இங்கிருந்து பரதனுக்கு என்ன செய்தி தெரிவிக்க வேண்டுமென்று ஆஞ்சநேயர் கைகட்டி வாய் பொத்தி குருவிடம் சிஷ்யன் இருப்பதைப் போல பவ்யமாக நின்று அனுமன் காட்சி அளிப்பது இந்த தில்லைவிளாகத்தில் மட்டுமே காண முடியும்.

நம்பிக்கைகள்

திருமணம் பாக்கியம் கிடைக்க, மன சஞ்சலம் நீங்க, கோர்ட் விவகாரம் தீர, புத்திர பாக்கியம் கிடைக்க, நவகிரக தோஷ பீடைகள் தீரவும் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.

சிறப்பு அம்சங்கள்

தில்லைவிளாகத்தில் உள்ள இந்தக் கோயிலின் சன்னதி கிழக்குப் பார்த்துள்ளது. உள்ளே நுழைந்ததும் கொடிமரம், பெரிய திருவடி எனப்படும் கருடாழ்வார் சன்னதி கிழக்குப் பார்த்துள்ளது. கொடிமரம், கருடாழ்வார் சன்னதியைச் சுற்றிலும் ஒரு பரந்த வெளிச்சுற்று அல்லது பிராகாரம் தென்படும். முன்னால் ஒரு மண்டபம் உள்ளது. அதில் சன்னதிக்குச் செல்லும் வாயிலுக்கு இருபுறமும் அபூர்வமான சிலைகள் பிறைகளில் வைக்கப்பட்டுள்ளன. இடப்புறம் சங்க நிதியும் வலப்புறம் பதும நிதியும் காணப்படுகின்றனர். சங்கநிதி கையில் சங்கும் அதேபோன்று பதும நிதியின் கையில் தாமரையும் காட்சியளிக்கின்றன. கருவறையில் கற்சிலைகளே கிடையாது. இடமிருந்து வலமாக சீதை, ஸ்ரீராமர், லக்குவணன் ஆகியோர் விக்கிரகங்கள் பஞ்சலோகத்தால் ஆனவை. சீதைக்கு முன் சற்று இடப்புறமாக ஆஞ்சநேயர் சிலையும் அதற்கு முன்னால் ஆஞ்சநேயருடைய உற்சவர் சிலையும் உள்ளன. லக்குவணனுக்கு சற்று முன்னால் சீதை, ஸ்ரீராமர், லக்குவனார் ஆகியோர்களுக்கான உற்சவர் சிலைகள் இருக்கின்றன. மற்றும் ஒரு மேடையில் செல்வர், சக்கரத்தாழ்வார், கண்ணன், சந்தான கிருஷ்ணன் ஆகியோரது திருமேனிகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த ராமர் சிலை சுமார் 4 அடி உயரம் இருக்கும். இவ்வளவு பெரிய பஞ்சலோக சிலையைக் காண்பதரிது. வலக் கையில் அம்பும் இடக்கையில் வில்லுமாக வெகு கம்பீரபீ மாகக் காட்சியளிக்கிறார் ஸ்ரீராமபிரான். ஆகவே வீரவீகோதண்டராம சுவாமி என்ற திருப்பெயரைப் பெற்றிருக்கிறார். ராவணனை வென்று சீதையை மீட்ட பின் அயோத்திக்குத் திரும்பும்போது இங்கே ஸ்ரீராமபிரான் சற்று அமர்ந்ததாகப் புராண வழிச்செய்தி உண்டு. சீதாபிராட்டியின் வலப்பக்கம் தாசஸ்த்வ ஆஞ்சநேயர் ஒருகை பொத்தி, ஒரு கையை கீழே வைத்து கட்டளையி டுங்கள் என செய்தி கேட்பது போன்று உள்ளார். கால்சிறப்பு: வலது காலில் பச்சை நரம்பும், இடது காலில் தேமல் மச்சம் மற்றும் வடுக்களும், தாயார் கட்டிய ரக்ஷாபந்தனமும் உள்ளது.

திருவிழாக்கள்

இராம நவமி, சித்திரை அட்சய திருதியை, ஆடி அமாவாசை, தை அமாவாசை, அனுமன் ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி, நவராத்திரி உள்ளிட்ட திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

தில்லைவிளாகம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருத்துறைப்பூண்டி

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top