Sunday Jul 07, 2024

திருவைகாவூர் வில்வனேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி

அருள்மிகு வில்வவனநாதர் திருக்கோயில் திருவைகாவூர் திருவைகாவூர் அஞ்சல் கும்பகோணம் வட்டம் தஞ்சாவூர் மாவட்டம் PIN – 612301

இறைவன்

இறைவன்: வில்வனேஸ்வரர் இறைவி: வளைக்கைநாயகி, சர்வஜனரக்ஷகி

அறிமுகம்

திருவைக்காவூர் வில்வனேஸ்வரர் கோயில் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் மாவட்டம், திருவைக்காவூர் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும். இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். மகா சிவராத்திரி என்ற சிறப்பு வாய்ந்த சிவதல விழாவுக்கு காரணமான தலம். இத்தலத்தில்தான் வேறுஎங்கும் காணமுடியாத வகையில் கையில் கோலேந்திய தட்சிணாமூர்த்தி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். நந்திகேசுவரர் எதிர்புறமாக திரும்பி இருக்கிறது. நவகிரகங்கள் இத்தலத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அர்த்தமண்டபத்தில் வாயிற்படியின் இருபுறங்களிலும் விஷ்ணுவும், பிரம்மனும் எங்குமே காணப்படாத நிலையில் துவாரபாலகர்களாக நிற்கிறார்கள்.இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டது. சிவனின் தேவாரப்பாடல் பெற்ற சிவாலயங்களில் இது 48 வது தேவாரத்தலம் ஆகும்.

புராண முக்கியத்துவம்

தவநிதி என்ற முனிவர் தவம் செய்து கொண்டிருக்கையில் மான் ஒன்றை துரத்திக்கொண்டு வேடன் வந்தான். மானுக்கு முனிவர் அபயமளித்ததால் கோபம் கொண்ட வேடன் முனிவரை தாக்க ஆரம்பித்தான். உடனே சிவபெருமான் புலிவடிவமெடுத்து வேடனைத் துரத்தினார். வேடன் பயந்தோடி அருகிலிருந்த ஒரு வில்வ மரத்தில் ஏறிக்கொண்டான். புலியும் மரத்தடியிலேயே நின்றது. வேடன் வேறுவழியின்றி மரத்திலேயே இரவு முழுதும் தங்கியிருந்தான். இரவில் தூக்கம் வந்து கீழே விழுந்துவிடுவமோ என்று நினைத்த வேடன் ஒவ்வொரு இலையாக பறித்து கீழே போட்டுக் கொண்டிருக்க அவை புலி வடிவிலிருந்த சிவபெருமான் மீது விழுந்து கொண்டிருந்தன. அன்று மகா சிவராத்திரி நாள்.ஊன் உறக்கம் இன்றி சிவபெருமானை வழிபட்ட புண்ணியம் வேடனுக்கு அவனையறியாமல் கிட்டியதால் இறைவன் காட்சி தந்து மோட்சம் தந்தார்.அன்று அதிகாலையில் அவனது ஆயுள் முடிவதாக இருந்ததால் யமன் அங்கு வந்தான்.நந்தி தேவன் இதை பொருட்படுத்தவில்லை. சிவபெருமான் தட்சிணாமூர்த்தி வடிவில் கையில் கோல் ஏந்தி விரட்டினார். யமனை உள்ளே விட்ட குற்றத்திற்காக நந்தி மீது கோபம் கொண்டார். அவருக்கு பயந்து நந்தி யமனை தன் சுவாசத்தால் கட்டுப்படுத்தி நிறுத்தி விட்டார்.பின் யமன் சிவனை வணங்க அவன் விடுவிக்கப்பட்டான். பின்பு ஆலய எதிரில் குளம் அமைத்து சிவனை வழிபட்டுச் சென்றதாக தல வரலாறு கூறுகிறது.

நம்பிக்கைகள்

வில்வவனேசுவரரை வழிபட்டால் மனத்துயரம் நீங்கும். கல்யாண வரம், குழந்தை வரம் வேண்டுவோர் இங்கு வந்து வழிபடலாம். இத்தலத்து ஈசனை வணங்குவோர்களுக்கு மனஅமைதி கிடைக்கும். மேலும் வேலை வாய்ப்பு , தொழில் விருத்தி ,உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்தால் சுவாமி பக்தர்களது வேண்டுதல்களை நிச்சயம் நிறைவேற்றி கொடுப்பார்.

சிறப்பு அம்சங்கள்

சிவராத்திரி திருவிழா: சிவனுக்கு விசேஷ பூஜைகளுடன் சிவராத்திரி விழா இங்கு விமரிசையாக நடக்கும். மறுநாள் அமாவாசையன்று கோபுரத்தின் கீழே வேடனை நிறுத்தி, மூலஸ்தானத்தில் சிவனுக்கும், அதன்பின் வேடனுக்கும் தீபாராதனை காட்டுவர். வேடன், மோட்சம் பெற்றதை நினைவுபடுத்தும் வகையில் இவ்வாறு செய்கின்றனர். பின், பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளுடன், வேடன், வேடுவச்சியும் புறப்பாடாவர். மதியம் எம தீர்த்தத்திற்கு பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளி தீர்த்தவாரி காண்பர். இரவில் சுவாமி, அம்பாள் இருவரும் ஒரு ஓலைச்சப்பரத்தில் எழுந்தருளுவர். இந்த சப்பர பவனியும் விசேஷமானது. இதற்காக மூங்கில் கீற்றில், தென்னை ஓலைகளைக் கட்டி பிரத்யேகமாக தயாரிக்கப்படும் சப்பரம் இது. வீணா தெட்சிணாமூர்த்தி: இங்கு துவாரபாலகர்கள் கிடையாது. பெருமாள், பிரம்மா இருவரும், துவாரபாலகர்கள் இடத்தில் உள்ளனர். அருகில் கையில் வீணை ஏந்திய தெட்சிணாமூர்த்தி இருக்கிறார். உத்தால முனிவரிடம் சாபம் பெற்ற சப்தகன்னிகளும், இங்கு சிவனை வேண்டி நிவர்த்தி பெற்றனர். இங்குள்ள சுப்பிரமணியர் சிலை கலையம்சத்துடன் வடிக்கப்பட்டுள்ளது. சிக்கல், எண்கண், எட்டுக்குடி, பட்டுகுடி ஆகிய தலங்களிலுள்ள கலையம்சமான முருகன் சிலை வடித்த சிற்பியால் செய்யப்பட்ட சிலை இது. முருகன் கையிலுள்ள ரேகைககள், மயிலின் தோகைகள், மயிலின் அலகில் உள்ள நாகத்தின் நளினமான உடல் அனைத்தும் தத்ரூபமாக வடிக்கப்பட்டுள்ளன. அருணகிரிநாதர் இவரைப் போற்றி திருப்புகழ் பாடியுள்ளார். கோயில் முகப்பில் வேடனை, புலி விரட்டிய சம்பவம் சுதை சிற்பமாக உள்ளது. அம்பாள் உத்திரவு: இந்த கோயிலில் உள்ள அம்பாள் வளைக்கை நாயகி (சர்வஜன ரட்சகி) மிகவும் அருள் வாய்ந்தவர். வெள்ளிக் கிழமை செவ்வாய் கிழமைகளில் மாலை 6 லிருந்து 7:30 க்குள் அம்பாளுக்கு அர்ச்சனை செய்தல் விசேசம். குறைகள் எதுவென்றாலும் கூறலாம். அவ்வாறு கூறும்போது அம்பாளுக்கு எதிரில் உள்ள ஸ்ரீ சக்கரம் அருகில் நின்று பிரார்த்தனை செய்ய வேண்டும். அம்பாளே பேசுவது நம்மால் உணர முடியும். இங்கு நின்று வழிபட்டுக்கொண்டிருக்கும் போதே சுவாமி சந்நிதியில் தீபாராதனை காட்டி முடித்து விட்டு அம்பாள் சந்நிதிக்கு வந்து நம் பிரார்த்தனை இன்னது என்றும் அது இத்தனை நாளில் கை கூடும் என்று கூறிவிடுவார். இவர் கூறியதுபோலவே எல்லா விசயங்கள் நிகழ்ந்திருப்பதாக இத்தலத்து பக்தர்கள் கூறுகின்றனர். வில்வ வடிவில் வேதங்கள்: வேதங்கள் வில்வ வடிவில் நின்று இத்தலத்தில் தவம் புரிவதாகத் புராணம் கூறுகிறது. ஊழிக் காலத்தில் அனைத்து மழியக்கூடும் என்பதை உணர்ந்த வேதங்கள், சிவபெருமானை வணங்கி தாம் அழியாமலிருக்க உபாயம் கேட்டதாகவும் அப்பெருமானின் ஆலோசனையின்படி இத்தலத்தில் வில்வ மரமாக நின்று தவம் புரிந்து வழிபடுவதாகவும் இதனால் இத்தலத்துக்கு வில்வ ஆரண்யம் என்றும் சுவாமிக்கு வில்வவனேசுவரர் என்றும் பெயர் வந்தது. பிரம்மாவும் விஷ்ணுவும் இத்தலத்தில் இருப்பதால் மும்மூர்த்திகள் தலம் என்று போற்றப்படும் தலம் இது. மணக்கோலத்தில் மணமக்கள் எவ்வாறு ஒரே நேர்கோட்டில் உட்கார்ந்திருப்பரோ அது போல் சுவாமி ,அம்பாள் சந்நிதிகள் உள்ளன. தீர்த்தங்களில் குளித்தாலோ அல்லது தெளித்து கொண்டாலோ பிணிகள் நீங்கும். தோசங்கள் விலகும். மற்ற இடங்களில் சப்த மாதாக்கள்தான் வழிப்பட்டதாக இருக்கும். இத்தலத்திலோ சப்த கன்னிகள் வழிபட்டுள்ளனர். ஒரே கல்லில் மயில், திருவாட்சி ஆகியன ஒன்றாக அமைந்த ஆறுமுகம் கொண்ட சண்முகர் இங்கு உள்ளார்.கை ரேகை, நகம் எல்லாமே அந்த சிற்பத்தில் தெளிவாக தெரியும்.இதில் மயில் இடப்புறமாக திரும்பியிருப்பது மற்றோர் சிறப்பு. அருணகிரிநாதரால் பாடல் பெற்ற தலம்: மூவராலும் தேவாரப்பாடல் பெற்ற சிறப்பு வாய்ந்த தலம் குலோத்துங்க சோழனால் கட்டப்பட்ட கோயில் இது. சிவன் பார்வதி இருவரும் மனம் மகிழ்ந்து தங்கிய இடம் திருவைகாவூர். யமபயம் தீர்த்த தலமாக – திருவைகாவூர் விளங்குகிறது. இந்த ஊரில்தான் சிவராத்திரி பிறந்தது என்பது ஐதீகம்.

திருவிழாக்கள்

மாசி மாதம் மகா சிவராத்திரி 2 நாட்கள் திருவிழா அம்மாவாசை அன்று தீர்த்தவாரி பஞ்சமுக மூர்த்திகள் வீதியுலா இரவு ஓலை சப்பரத்தில் வீதியுலா(ஓலையாலேயே ரிஷபம், சுவாமி, அம்பாள், அனைத்துமே ஓலையால் கட்டி வீதியுலா நடைபெறுவது மிகவும் சிறப்பான ஒன்றாகும். ஆருத்ரா புறப்பாடு திருவாதிரை, விஜயதசமி, திருக்கார்த்திகை ஆகியவை இத்தலத்தில் மிகவும் விஷேசம்.

காலம்

1000-2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திருவைகாவூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

கும்பகோணம்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top