Thursday Jul 04, 2024

திருவேளுக்கை அழகியசிங்கர் பெருமாள் திருக்கோயில், காஞ்சிபுரம்

முகவரி

அருள்மிகு அழகிய சிங்க பெருமாள் கோயில், காஞ்சிபுரம்-631501 காஞ்சிபுரம் மாவட்டம். போன்: +91- 44 6727 1692, 98944 15456

இறைவன்

இறைவன்: அழகியசிங்கர், இறைவி: அம்ருத வல்லி

அறிமுகம்

திருவேளுக்கை ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற (பாடப்பட்ட) 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். பேயாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் தமிழகத்தில் காஞ்சிபுரத்தில் திருத்தண்கா விளக்கொளி பெருமாள் கோவிலுக்குத் தெற்கில் அட்டபுயக்கரம் கோவிலுக்கு அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. வேள் என்ற சொல்லுக்கு ஆசை என்று பொருள். திருமாலின் அவதாரங்களில் ஓருவரான நரசிம்மர் இவ்விடத்தில் ஆசையுடன் இருக்க எண்ணியதால் வேளிருக்கை என்றாகி காலப் போக்கில் வேளுக்கை ஆகிவிட்டது. காமாட்சிகா நரசிம்ம சன்னதி என்றும் இதற்கொரு பெயருண்டு. இத்தலத்தில் இறைவன் யோக முத்திரையுடன் மேற்கு நோக்கி அமர்ந்த திருக்கோலத்தில் அழகிய சிங்கர், நரசிம்மர், ஆள் அரி, முகுந்த நாயகன் என்னும் பெயர்கள் கொண்டு விளங்குகிறார். இறைவி வேளுக்கை வல்லி, அம்ருத வல்லி, தனிக் கோவில் நாச்சியார் என்ற பெயர்கொண்டு விளங்குகிறார். இத்தலத் தீர்த்தம் கனக சரஸ், ஹேம சரஸ் ஆகியன. விமானம் கனக விமானம் எனும் அமைப்பைச் சார்ந்தது. பேயாழ்வார் 3 பாசுரங்களிலும் திருமங்கையாழ்வாரும் இத்தலத்தைப் பாடியுள்ளனர்.

புராண முக்கியத்துவம்

திருமாலின் அவதாரங்களில் மிகவும் போற்றப்படுகிற அவதாரம் நரசிம்ம அவதாரம். பெருமாளின் காக்கும் குணம் உடனே வெளிப்பட்ட அவதாரம். பக்தனின் வார்த்தையை பகவான் உடனே காப்பாற்றிய அவதாரம். “வேள்’ என்ற சொல்லுக்கு “ஆசை’ என்று பொருள். இரணியனை வதம் செய்த பின் பகவான் நரசிம்மர் அமைதியை விரும்பினார். அவர் இவ்விடத்தில் ஆசையுடன் இருக்க எண்ணியதால் “வேளிருக்கை’ என்றாகி, காலப்போக்கில் “வேளுக்கை’ என்றாகி விட்டது. ஒருமுறை பிரம்மா யாகம் செய்த போது யாகத்தை அழிக்க அரக்கர்கள் வந்தனர். பிரம்மா பெருமாளிடம் இந்த யாகம் சிறப்பாக நடக்க அருள்புரியுமாறு வேண்டினார். பிரம்மாவின் வேண்டுதலை ஏற்றார் பெருமாள். முன்பு பிரகலாதனுக்காக நரசிம்ம அவதாரம் எடுத்த அதே திருக்கோலத்துடன் “ஹஸ்திசைலம்’ என்ற குகையிலிருந்து புறப்பட்டு வேள்வியை அழிக்க வந்த அசுரர்களை விரட்டினார். அவர்கள் காஞ்சியில் இந்த இடத்தில் காணாமல் போய்விட்டார்கள். அங்கேயே மேற்கு நோக்கி அமர்ந்து யோக நரசிம்மராகி விட்டார். இவருக்கு ஆள் அரி, முகுந்த நாயகன் என்ற திருநாமங்களும் உண்டு.

நம்பிக்கைகள்

துன்பங்கள் விலக பெருமாளிடம் பிரார்த்திக்கின்றனர்.

சிறப்பு அம்சங்கள்

பெருமாளின் 108 திவ்யதேசங்களில் ஒன்று. புராண வரலாற்றின் படி பிருகு முனிவருக்கு கனக விமானத்தின் கீழ் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி கொடுத்ததாக ஐதீகம். பேயாழ்வார் இத்தலத்தினை, உப்பிலியப்பன் கோயில், கும்பகோணம், திருப்பதி போன்ற தலங்களுக்கு இணையாகப் பாடியுள்ளார். இதிலிருந்து இத்தலத்தின் சிறப்பை அறியலாம். ஆழ்வார்களைத் தவிர சுவாமி தேசிகனும் இப்பெருமாளை “காமாஸீகாஷ்டகம்’ என்ற ஸ்லோகத்தால் போற்றியுள்ளார். இதை தினமும் பாராயணம் செய்தால் நரசிம்மரின் பரிபூரண அருள் கிடைக்கும். இதனை “காமாஷிகா நரசிம்ம சன்னதி’ என்றும் அழைப்பார்கள்.

திருவிழாக்கள்

வைகுண்டா ஏகாதசி

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திருவேளுக்கை

அருகிலுள்ள இரயில் நிலையம்

காஞ்சிபுரம்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top