Friday Jun 28, 2024

திருவேங்கைவாசல் வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில், புதுக்கோட்டை

முகவரி :

அருள்மிகு வியாக்ரபுரீஸ்வரர் திருக்கோயில்,

திருவேங்கைவாசல்,

புதுக்கோட்டை மாவட்டம் – 622005.

போன்: +91-4322-221084, 9486185259  

இறைவன்:

வியாக்ரபுரீஸ்வரர்

இறைவி:

பார்வதி தேவி

அறிமுகம்:

இக்கோயில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அன்னவாசல் வட்டத்தில் திருவேங்கைவாசல் என்னுமிடத்தில் அமைந்துள்ளது. திருவேங்கைபதி என்றும் இவ்வூர் அழைக்கப்படுகிறது. இக்கோயிலின் மூலவராக வியாக்ரபுரீசுவரர் உள்ளார். வியாக்ரம் என்றால் புலி என்று பொருளாகும். இறைவி பார்வதி தேவி ஆவார். கோயிலின் மரம் வன்னி ஆகும். மூலவர் திருவேங்கைநாதர் என்றும் அழைக்கப்படுகிறார்.

புராண முக்கியத்துவம் :

 ஒருமுறை காமதேனு இந்திர சபைக்கு தாமதமாக சென்றது. கோபமடைந்த இந்திரன், பூலோகத்தில் சாதாரணப்பசுவாக பிறந்து திரிவாய் என சாபமிட்டான். வருத்தமடைந்த காமதேனு பூலோகத்தில் தவம் செய்து கொண்டிருந்த கபில முனிவரிடம் சாப விமோசனத்திற்கு ஆலோசனை கேட்டது. அதற்கு அவர், இங்கு சுயம்புமூர்த்தியாக உள்ள சிவபெருமானுக்கு உனது இரு காதுகளில் கங்கை நீரை நிரப்பிக்கொண்டு வந்து அபிஷேகம் செய்து வழிபட்டால் உன் சாபம் நீங்கும், என்றார். பசுவும் முனிவரின் உபதேசப்படி தினமும் அபிஷேகம் செய்து வழிபட்டது.

ஒருநாள் சிவன் பசுவின் பக்தியை சோதிக்க விரும்பினார். பசு அபிஷேகத்திற்கு வரும் போது புலி வடிவெடுத்த சிவன், உன்னை கொன்று பசியாறப் போகிறேன், என்றார். அதற்கு பசு, நான் சிவ பூஜைக்காக சென்று கொண்டிருக்கிறேன். பூஜையை முடித்துத் விட்டு நானே உன்னை தேடி வருகிறேன். அதன் பின் நீ என்னை கொன்று உன் பசியாறலாம், என்றது. இதைக்கேட்ட புலி வழிவிட்டது. பசுவும் சிவபூஜையை முடித்துத் விட்டு நேராக புலியிடம் வந்து, இப்போது நீ என்னை சாப்பிடலாம், என்றது. புலி வடிவிலிருந்த சிவன், பசு மீது பாய்வது போல் சென்று, ரிஷப வாகனத்தின் மீது உமா தேவியருடன் காட்சி கொடுத்து, சாப விமோசனமும் தந்தார். அத்துடன் வேண்டும் வரம் கேள் என்றார். அதற்கு பசு, இறைவா! நீங்கள் எனக்கு அருள்பாலித்தது போல் இங்கு வந்து தங்களை வழிபாடு செய்பவர்களின் குறையை போக்க வேண்டும். அத்துடன் புலி வடிவில் வந்ததால் வியாக்ரபுரீஸ்வரர் என்ற திருநாமத்துடன் விளங்க வேண்டும் என வேண்டியது. “வியாக்ரம்’ என்றால் “புலி’ எனப் பொருள்.

நம்பிக்கைகள்:

திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிராத்திக்கலாம்.

சிறப்பு அம்சங்கள்:

தவக்கோல முருகன்: கோயில் சுற்றுப்பிரகாரத்தில் எண்கோணவடிவில் தவக்கோல சன்னதி உள்ளது. முருகப்பெருமான் தாமரை மீது, ஒரு காலை மடித்துத் மறு காலை நீட்டி அமர்ந்து, தவம் புரியும் கோலத்தை தரிசிக்கலாம். இவரிடம் வேலும் இல்லை. மயிலும் இல்லை. ஆண்டி கோலத்திலும், ராஜ அலங்காரத்திலும் முருகனை வழிபட்டு வந்த நமக்கு, இப்படி தவக்கோலத்தில் முருகனை தரிசிப்பது வித்தியாசமான அனுபவமாகும்.

சுவாமி எதிரே கணபதி: எங்குமில்லாத சிறப்பாக சிவனின் மூலஸ்தானத்திற்கு எதிரில் அவர் பார்வைபடும்படியாக கணபதி வீற்றிருக்கிறார். இங்குள்ள தெட்சிணாமூர்த்தி ஒரு பாதி ஆண்தன்மையும், மறுபாதி பெண்தன்மையும் கொண்டு, அர்த்தநாரீஸ்வர தட்சிணாமூர்த்தியாக விளங்குகிறார். இங்கு நவக்கிரக சன்னதியில் நவக்கிரகங்கள் அமையவில்லை. அதற்கு பதிலாக 9 விநாயகர்கள் அமர்ந்துள்ளனர். எல்லா கோயில்களிலும் மூலஸ்தானத்தின் முன்னால் இருபுறமும் துவாரபாலகர்கள் இருப்பார்கள். ஆனால், இங்கு ஒரு பக்கம் துவாரபாலகரும், மறுபக்கம் விநாயகரும் இருக்கிறார்கள். மேற்கு பார்த்த மூலவரின் மீது மாலை வேளையில் சூரியனின் கதிர்கள் பட்டு சூரியபூஜை நடப்பதை காணகண்கோடி வேண்டும். இது தவிர கோயிலினுள் உள்ள 800 ஆண்டு பழமையான வன்னி மரம் நம்மை மேலும் வியப்பில் ஆழ்த்தும்.

எதிரெதிர்சன்னதி: இங்கு எந்த ஒரு சன்னதி இருந்தாலும், அங்கிருந்து மற்றொரு சன்னதியை பார்க்கும் விதத்தில் அமைந்துள்ளது. உதாரணமாக சிவன் சன்னதியிலிருந்து பார்த்தால் தேரடி விநாயகர் சன்னதியும், முருகன் சன்னதியிலிருந்து பார்த்தால் காலபைரவர் சன்னதியும், மகாவிஷ்ணுவின் சன்னதியிலிருந்து பார்த்தால் மகாலட்சுமி சன்னதியும் தெரியுமாறு அமைந்துள்ளன.

திருவிழாக்கள்:

மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை, திருக்கார்த்திகை, பங்குனி உத்திரம் போன்றவை இக்கோயிலில் நடைபெறும் திருவிழாக்களாகும். வைகாசி விசாகம் பத்து நாள்கள் மற்றும் தைப்பூசம் போன்ற விழாக்களும் கொண்டாடப்படுகின்றன.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திருவேங்கைவாசல்

அருகிலுள்ள இரயில் நிலையம்

புதுக்கோட்டை

அருகிலுள்ள விமான நிலையம்

மதுரை

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top