திருவேகம்பத்து ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், இராமநாதபுரம்
முகவரி
திருவேகம்பத்து ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், திருவேகம்பத்து, திருவாடானை வட்டம் இராமநாதபுரம் மாவட்டம் – 630408.
இறைவன்
இறைவன்: ஏகாம்பரேஸ்வரர், ஏகாம்பரநாதர் இறைவி: சிநேகவல்லி
அறிமுகம்
திருவேகம்பத்தூர் ஏகாம்பரநாதசுவாமி கோயில் தமிழ்நாட்டில் இராமநாதபுரம் மாவட்டம், திருவேகம்பத்தூர் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும். இது ஒரு தேவார வைப்புத்தலமாகும். காளையார்கோவில் – திருவாடானை சாலையில் திருவேகம்பத்து உள்ளது. சாலையோரத்தில் கோயில் உள்ளது. சிவகங்கை, தேவகோட்டை, திருவாடானை, காளையார்கோவில் முதலிய ஊர்களிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன. நல்ல நிலையில் பராமரிக்கப்பட்டு வரும் வைப்புத் தலக் கோவில்களில் திருவேகம்பத்து ஏகாம்பரேஸ்வரர் ஆலயமும் ஒன்றாகும். காஞ்சிபுரத்திலுள்ள ஏகாம்பரநாதர் ஆலயத்தை நினைவூட்டும் வகையில், பாண்டிய நாட்டில் உள்ள தலமே இந்த திருவேகம்பம் / திருவேகம்பத்து ஆகும். இதனாலேயே இவ்வூர் தட்சிண காஞ்சி என்று அழைக்கப்படுகிறது. மூன்று நிலை கிழக்கு நோக்கிய இராஜகோபுரத்துடன் இவ்வாலயம் அமைந்துள்ளது. இத்தலத்தில் காணப்படும் இரண்டு விநாயகர் சிற்பங்கள், நாகருடன் உள்ள முருகர், கோஷ்டத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி ஆகியவை கலை நுணுக்கத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. அம்பாள் சிநேகவல்லி தெற்கு நோக்கி காட்சி தருகிறாள். இத்தலத்திலுள்ள ஒரு விநாயகர் குபேர கணபதி என்று அழைக்கப்படுகிறார். இராவணன் வழிபட்டதாகச் சொல்லப்படும் இக்கோயிலில் முதல் மாறவர்மன் சுந்தர பாண்டியன், இரண்டாம் மாறவர்மன் சுந்தர பாண்டியன், முதலாம் சடைய வர்மன் விக்கிரம பாண்டியன், முதலாம் சடையவர்மன் வீரபாண்டியன் ஆகியோர் காலத்திய கல்வெட்டுக்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. கல்வெட்டுக்களில் இறைவன் “ஏகம்பமுடைய நாயனார்”, “திருவேகம்பமுடைய தம்பிரானார்” என்று குறிக்கப்பட்டுள்ளார்.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத் துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
திருவேகம்பத்து
அருகிலுள்ள இரயில் நிலையம்
சிவகங்கை
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை