திருவெள்ளக்குளம் அண்ணன் பெருமாள் திருக்கோயில், நாகப்பட்டினம்
முகவரி
அருள்மிகு அண்ணன் பெருமாள் திருக்கோயில், சீர்காழிவட்டம், நாகைமாவட்டம் – 609 125.
இறைவன்
இறைவன்: அண்ணன்பெருமாள் இறைவி: அலர்மேல் மங்கை
அறிமுகம்
திருவெள்ளக்குளம் அல்லது அண்ணன் கோயில் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் சீர்காழியிலிருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் சீர்காழி – தரங்கம்பாடிச் சாலையில் அமைந்துள்ளது. திருநாங்கூர் பதினொரு திருப்பதிகளில் இதுவும் ஒன்று. திருவெள்ளக்குளம் என்ற சொல் இத்தலத்தின் முன்புறம் அமைந்துள்ள ஸ்வேத புஷ்கரணி தீர்த்தத்தால் உண்டாயிற்று. வடமொழியில் ஸ்வேதம் என்றால் வெண்மை. எனவே ஸ்வேத புஷ்கரணி வெள்ளைக்குளமாகி, வெள்ளக்குளமாயிற்று. திருமங்கையாழ்வார் இத்தலத்து இறைவனை அண்ணா என அழைத்துப் பாடியமையால் இது அண்ணன் கோயில் என்று அழைக்கப்படுகிறது. இறைவன் – கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் அண்ணன் பெருமாள் எனப்படும் ஸ்ரீநிவாசன் இறைவி – அலர்மேல் மங்கை தீர்த்தம் – ஸ்வேத புஷ்கரணி விமானம் – தத்வத் யோதக விமானம்
புராண முக்கியத்துவம்
துந்துமாரன் என்ற அரசனுக்கு சுவேதன் என்ற மகன் இருந்தான். அவனுக்கு ஒன்பது வயதில் அகால மரணம் ஏற்படும் என வசிஷ்ட முனிவர் கூறினார். அரசன் தன் மகனை காப்பாற்ற முனிவரிடம் கேட்டார். அவர், திருநாங்கூரில் உள்ள பொய்கையில் நீராடி அங்குள் பெருமாளை வேண்டி தவம் இருந்தால் பலன் கிடைக்கும் என்றார். முனிவர் கூறியபடி சுவேதன் குளத்தில் நீராடி வசிஷ்டர் கூறிய “நரசிம்ம மிருத்யஞ்சய மந்திரத்தை’ சீனிவாசப்பெருமாளின் முன்பாக ஒரு மாத காலம் கூறிவந்தான். மனமிறங்கிய பெருமாள்,””சுவேதா! நரசிம்ம மந்திரத்தை தொடர்ந்து கூறியதால் நீ சிரஞ்சீவி ஆனாய். அத்துடன் எவனொருவன் இத்தலத்தில் 8000 தடவை இம் மந்திரத்தை கூறுகிறானோ அவனுக்கு எம பயம் கிடையது” என்று கூறினார். வைணவத்தலங்களில் எம பயம் நீக்கும் தலம் இது.
நம்பிக்கைகள்
மிகப்பெரிய பிரார்த்தனை ஸ்தலமான இங்கு அறுபது, எழுபது, எண்பதாம் கல்யாணம் செய்து கொள்கிறார்கள்.
சிறப்பு அம்சங்கள்
மணவாள மாமுனிகளுக்கு பெருமாள் காட்சி கொடுத்த தலம். 12 ஆழ்வார்களில் திருமங்கை ஆழ்வார் இரண்டு கோயில்களில் உள்ள பெருமாளைத்தான் “அண்ணா’ என அழைத்து பாடியுள்ளார். ஒன்று திருப்பதியில் உள்ள பெருமாள். மற்றொன்று இத்தல பெருமாள். இதில் திருப்பதிக்கு முன்பே இத்தலத்து பெருமாளை “அண்ணா’ என பாடியதால் இங்குள்ள பெருமாள் திருப்பதி ஏழுமலையானுக்கு “அண்ணன்’ ஆகிவிடுகிறார். எனவேதான் இங்குள்ள சீனிவாசப்பெருமாளின் திருநாமம் “அண்ணன் பெருமாள்’ என்றும் இத்தலம் “அண்ணன் கோயில்’ என்றும் வழங்கப்படுகிறது. திருப்பதியைப்போன்றே இத்தலத்திலும் பெருமாளின் திருநாமம் “சீனிவாசன்’, தாயாரின் திருநாமம் “அலர்மேல்மங்கை’. திருமங்கையாழ்வார் இத்தலத்தை பூலோக வைகுண்டம் என்று பாடியுள்ளார். ஆழ்வாராக மாற்றிய அம்மன்: இங்குள்ள குளத்தில் குமுத மலர்களை பறிக்க தேவ மாதர்கள் வருவது வழக்கம். அப்படி வந்த போது ஒரு மனிதனின் பார்வை பட்டு இவர்களில் குமுதவல்லி தேவ லோகம் செல்லும் சக்தியை இழக்கிறாள். இதனை கேள்விப்பட்ட நீலன் என்ற பெயரில் படைத்தளபதியாக விளங்கிய திருமங்கை இவளை திருமணம் செய்ய விரும்புகிறார். குமுதவல்லி தன்னை திருமணம் செய்ய பல நிபந்தனைகள் விதிக்கிறாள். இவரும் நிபந்தனைகளை எல்லாம் நிறைவேற்றினார். கடைசியில் வைணவ அடியார்களுக்கு அன்னம் பாலிக்கும் நற்செயலில் ஈடுபடச்செய்தார். இதனையறிந்த பெருமாள் மன்னனுக்கு காட்சி கொடுத்து “திரு’ மந்திரத்தை உபதேசித்து ஆழ்வாராக மாற்றினார். ஒரு மங்கையினால் ஆழ்வாராக மாறியதால் “திருமங்கை ஆழ்வார்’ என அழைக்கப்பட்டார். குமுதவல்லி நாச்சியார் தனி சன்னதியில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.
திருவிழாக்கள்
தை அமாவாசை மறுநாள் நடக்கும் 11 கருடசேவை உற்சவத்தில் இப்பெருமாளும் கலந்து கொள்வார். புரட்டாசியில் 10 நாட்கள் பிரம்மோற்சவம் வெகுவிமரிசையாக நடைபெறும்.
காலம்
1000 -2000ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத் துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
திருவெள்ளக்குளம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
நாகப்பட்டினம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி