திருவெற்றியூர் பாகம்பிரியாள் உடனுறை வன்மீகநாதர் திருக்கோயில், சிவகங்கை
முகவரி
திருவெற்றியூர் பாகம்பிரியாள் உடனுறை வன்மீகநாதர் திருக்கோயில், திருவெற்றியூர், திருவாடனை வட்டம், சிவகங்கை மாவட்டம் – 623407.
இறைவன்
இறைவன்: வன்மீகநாதர் இறைவி: பாகம்பிரியாள்
அறிமுகம்
திருவெற்றியூர் பாகம்பிரியாள் உடனுறை வன்மீகநாதர் கோயில், தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள, திருவாடானை வட்டத்தில், திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில், தொண்டி கடற்கரை அருகே திருவெற்றியூர் எனும் கிராமத்தில் அமைந்த சிவத்தலமாகும். சுற்று வட்டாரப் பகுதிகளில் இக்கோயிலை பாகம்பிரியாள் கோயில் என்றே அழைக்கிறார்கள். இது ஒரு தேவார வைப்புத்தலமாகும். இது சம்பந்தர், அப்பர், சுந்தரர் திருவாக்கில் இடம்பெற்றுள்ள வைப்புத்தலமாகும். கிழக்கு நோக்கியுள்ள இவ்வாலயத்திற்கு இராஜகோபுரமில்லை. கோயிலின் முன்புறம் வாசுகி தீர்த்தம் உள்ளது. கோயில் மண்டபத்தில் உள்ள பலிபீடம், கொடிமரம் மற்றும் நந்தியைக் கடந்து சென்றால் அர்த்த மண்டபம் உள்ளது. மண்டபத்துடன் கூடிய கருவறையில் மூலவர் பழம்புற்றுநாதர் என்ற வன்மீகநாதர் சுயம்பு லிங்கமாக காட்சியளிக்கிறார். இறைவன் சந்நிதிக்கு முன்னால் வலதுபுறம் தெற்கு தோக்கி அம்பாள் பாகம்பிரியாள் சந்நிதி அமைந்துள்ளது. சுற்றுப் பிராகாரத்தில் தலவிருட்சம் வில்வ மரமும், மரத்தடியில் விநாயகர், நாகர், கன்னி மூலையில் விநாயகர், அதையடுத்து வள்ளி தெய்வானையுடன் முருகர், சண்டேஸ்வரர், பைரவர், நவக்கிரக சந்நிதிகள் உள்ளது. இத்தல விநாயகர் நினைத்தது முடிக்கும் விநாயகர் என்ற பெயருடன் விளங்குகிறார். இத்தலத்திலுள்ள கோஷ்ட தட்சிணாமூர்த்தி வித்தியாசமானவர். கல்லாலான மரத்தடியில் அமர்ந்து சனகாதி முனிவர்களுக்கு உபதேசம் செய்வதைப் போன்று அமையாமல், தானே தவநிலையில் உபதேசம் செய்வது போன்று தட்சிணாமூர்த்தி திருவுருவின் கீழ் பிரகதீஸ்வரர் என்ற சிவபெருமானே உபதேசம் கேட்பதாக அமைந்துள்ளது ஓர் அரிய காட்சியாகும்.
புராண முக்கியத்துவம்
இப்பூவுலகை மகாபலி சகரவர்த்தி என்ற மன்னன் ஆண்டு வந்தான். வீரத்திலும், கொடையிலும் சிறந்து விளங்கினான். இதனால் குடிமக்கள் மன்னனிடம் அதிக பாசம் வைத்திருந்தனர். மக்கள் அவனை தங்கள் துன்பங்களை நீக்கவல்ல கடவுள் என வழிபடலாயினர். இதனால் கர்வம் ஏற்பட்டு மற்ற தேவர்களையும், கடவுளர்களையும் மதிக்காமல் வாழத்த துவங்கினான். நாரதரும் சிவபெருமானும்: இதனை அறிந்த நாரதர் நேராக திருக்கயிலாயத்திற்கு சென்று சிவபெருமானை வணங்கி முறையிட்டார். இதற்கு பதிலளித்த எம்பெருமான், “”முற்பிறவியில் என்னுடைய சன்னதியில் அணையும் நிலையில் இருந்த தூண்டா மணிவிளக்கை எலிஉருவத்தில் வந்து தூண்டிவிட்டான். இதற்காக 56 தேசங்களை ஆளும் மன்னனாக அவனுக்கு வரம் தந்தேன். எனவே இப்பிறவியில் அவனை அழிப்பது தர்மம் அல்ல,” என்றார். நாரதரும், மகாவிஷ்ணுவும்: இதையடுத்து நாரதர் திருமாலிடம் தனது கோரிக்கையை கொண்டு சென்றார். இதனை ஏற்ற திருமால், வாமன உருவம் கொண்டு மாவலி மன்னனிடம் யாசிக்க சென்றார். அவனிடம் நான் யாகம் நடத்த 3 அடி இடம் வேண்டும் என்றார். தன் கொடைப் பெருமையால் முகமும், அகமும் மலர மூவடி தந்தேன் என்றான் மன்னன். ஆகாயத்திற்கும், பூமிக்குமாக விஸ்வரூபம் எடுத்த மகாவிஷ்ணுதன் நீண்ட கால்களால் உலகை இரண்டடியால் அளந்தார். 3ம் அடி கேட்டபோது வந்தவர் யார் என புரிந்த மன்னன் பணிவுடன் தன் தலையை காண்பித்தான். தலையில் 3ம் அடியை அளந்தார். மகாபலி பிறவிப்பயனை முடித்து அதல பாதாளத்தில் மறைந்தான். தர்மதேவதை: இதனை அறிந்த தர்மதேவதை மகனை இழந்த துன்பம் ஏற்பட்டது போல் துடித்தாள். சிவபெருமானிடம் முறையிட்டாள். மகாபலியின் தலையில் 3ம் அடி அளந்த மாதவன் காலில் புற்று ஏற்படுமாறு சபித்தார் சிவபெருமான். செருக்குற்றவனை அழித்த தனக்கு புற்றால் வேதனை ஏற்பட்டது குறித்து சிவபெருமானிடம் புலம்பினார் மகாவிஷ்ணு. சாபவிமோசனம்: இதுகேட்ட சிவபெருமான் திருமாலிடம், “”18 தீர்த்தங்களில் நீராடி, சிவ ஆலயங்களை வணங்கி, திருவாடானை என்னும் திருத்தலத்திலுள்ள ஆதிரெத்தினேஸ்வரரை தரிசிக்க வேண்டும். இரவில் துயில்கொள்ளும்போது சிவபெருமான் கனவில் தோன்றி, இந்த இடத்திற்கு தெற்கில் திருவெற்றியூர் என்னும் தலம் உள்ளது. அங்குள்ள வாசுகி தீர்த்தத் தில் நீராடி லிங்கத்தை தழுவி வழிபட்டால் உன் புற்று நீங்கும்,” என்று கூறி மறைந்தார். கங்கா தேவியை அழைத்து, “” தர்ம தேவதை திருமாலுக்கு புற்று நோய் வருமாறு செய்து வேதனை படுத்துகிறாள். தர்ம தேவதையின் கோபத்தை அடக்க நீதான் தகுதியானவள். மகாவிஷ்ணுவிற்கு நீதான் உதவி செய்ய வேண்டும்,” என்றார். திருவெற்றியூர் வந்த மகாவிஷ்ணு சிவனை வழிபாடு செய்தார். புற்று மாயமாய் மறைந்துவிட்டது. அன்றுமுதல் சிவபெருமானுக்கு “பழம்புற்றுநாதர்’ என்றும் உடன் உள்ள பார்வதிக்கு “பாகம்பிரியாள்’ என்றும் பெயர் வழங்கலாயிற்று.
நம்பிக்கைகள்
புற்றுநோய் தீர அம்பிகையை வணங்கி நம்பிக்கையுடன் தீர்த்தம் வாங்கி குடித்துச் செல்லலாம். குழந்தை பாக்கியம் னேண்டி பெண்கள் பிரார்த்தனை செய்கின்றனர், நல்ல கணவர் அமையவும், மாங்கல்ய பாக்கியம் நிலைக்கவும் பெண்கள் இவளிடம் வேண்டிக்கொள்கிறார்கள். நேர்த்திக்கடன்: பிரார்த்தனை நிறைவேறியவர்கள் உரல், உலக்கை, அம்மிக்குளவியை காணிக்கையாகச் செலுத்தியும், தங்கள் உருவம் போன்று பொம்மை செய்து வைத்தும், நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர் அம்பிகைக்கு அபிஷேகம் செய்து வஸ்திரம் சாத்தி வழிபாடு நடத்தப்படுகிறது.
சிறப்பு அம்சங்கள்
பெண்களின் பிரச்னைகளுக்கான பிரதான பிரார்த்தனை தலம் இது. திருமணம், குழந்தை பாக்கியம், ஆரோக்கியம் என எதற்காகவும் இங்கு வேண்டிக்கொள்ளலாம். இங்கு வழிபடும் பக்தைகள் “தங்கி வழிபடுதல்’ என்னும் சடங்கைச் செய்கிறார்கள். வியாழனன்று மாலையில் அம்பிகையை வணங்கி, அன்றிரவில் கோயிலிலேயே தங்கி விடுகின்றனர். மறுநாள் வாசுகி தீர்த்தத்தில் நீராடி திரும்புகின்றனர். பக்தைகள் தங்குவதற்காக கோயில் சார்பில் மண்டபமும் உள்ளது. கால் புற்றால் அவதியா? காலில் புற்று உண்டாகி அவதிப்படுபவர்கள் நிவர்த்தி பெற இங்கு வருகிறார்கள். திருமால், மகாபலியை ஆட்கொண்ட பிறகு தர்மதேவதை அவரிடம் சென்றாள். திருமாலின் காலைப் பற்றிக்கொண்டு, “”சுவாமி! பூலோகத்தில் தர்மம் செழிக்க வேண்டுமென்பதற்காக, எனது பிரதிநிதியாக மகாபலியை வைத்திருந்தேன். அவனை நான் இழக்கும்படி செய்துவிட்டீர்களே. இதற்கு நீங்களே வழி சொல்ல வேண்டும்!” என கண்ணீர்ணீ வடித்தாள். சுவாமியின் பாதத்தில் அவளது கண்ணீர்ணீத்துளிபட்ட இடத்தில் புற்று வெடித்தது. இதனால் அவதிப்பட்ட பெருமாளுக்கு, இங்கு சிவன் கால் புற்று நோயை குணப்படுத்தினார். இதனால் சுவாமிக்கு “பழம்புற்றை தீர்த்த பழம்புற்று நாதர்’ என்ற பெயர் ஏற்பட்டது. நீண்ட நாட்களாக காலில் புற்று உள்ளவர்களுக்கு இங்கு தீர்த்தம், வேப்பிலை, விபூதி பிரசாதம் தருகின்றனர். இதைச்சாப்பிட நோய் குணமாவதாக நம்பிக்கை.
திருவிழாக்கள்
பூச்சொரிதல் விழா ஆடி, தை வெள்ளிக்கிழமைகளில் அம்பிகைக்கு விசேஷ பூஜை நடக்கும். ஆடி கடைசி திங்களன்று, நள்ளிரவில் அம்பிகைக்கு “பூச்சொரிதல்’ விழா நடக்கிறது. சித்திரையில் பிரம்மோற்ஸவம் நடக்கிறது.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத் துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
தேவகோட்டை
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவெற்றியூர்
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை