திருவிளையாட்டம் அண்ணாமலையார் சிவன்கோயில், மயிலாடுதுறை
முகவரி
திருவிளையாட்டம் அண்ணாமலையார் சிவன்கோயில், தரங்கம்பாடி வட்டம், மயிலாடுதுறை மாவட்டம் – 609302.
இறைவன்
இறைவன்: சிவன்
அறிமுகம்
மயிலாடுதுறை அடுத்த செம்பனார்கோயிலின் தெற்கில் எட்டுகிமி தூரத்தில் உள்ளது திருவிளையாட்டம். திருவிடையாட்டம் என இருந்தது திரிந்து திருவிளையாட்டம் ஆகிப்போனது; திருவிடையாட்டம் என்பது பெருமாள் கோயிலுக்கு தானமாக அளிக்கப்பட்ட நிலம் என்பதாகும். இவ்வூரில் உள்ள பெருமாள் கோயிலுக்கு வழங்கப்பட்ட ஊராகலாம். இவ்வூரில் பெரிய மாடக்கோயில் ஒன்றும் உள்ளது. ஆனால் இன்று நாம் காணவிருப்பது அக்கோயில் அல்ல; இக்கோயிலின் மேற்கில் செல்லும் சிறிய சாலையில் ஒரு கிமீ. சென்றால் ஒரு குடியிருப்பு பகுதி உள்ளது அதனை கோயில்தோப்பு எனவும் திருவிளையாட்டம் எனவும் அழைத்து வருகின்றனர். இந்த குடியிருப்பின் மத்தியில் உள்ளது ஒரு சோழர் கால புராதன சிவன்கோயில். அதன் இன்றையநிலையை கண்டோர் மூச்சும் அடைத்துப் போகும், விழியின் இமைகள் இமைக்க மறந்து அப்படியே நிலைகுத்திப்போகும். அப்படியொரு நிலையில் சோழநாட்டு பெருமிதம் சரிந்துபோய் கிடக்கிறது.
புராண முக்கியத்துவம்
“எல்லாம் சிலகாலம்” இது ஈசனின் ஆலயத்திற்கும் பொருந்துகிறது. கம்பீரமாக கிழக்கு நோக்கி கட்டப்பட்டிருக்கும் திருக்கோயில் இறைவனின் கருவறை பிரஸ்தரம் வரை கருங்கல்லாலும் அதற்க்கு மேல் விமான பாகம் செங்கற்தளியாகவும் கட்டப்பட்டுள்ளது. அம்பிகையின் கருவறை அதிட்டானம் வரை கருங்கல் பணியாகவும், அதற்கு மேல் செங்கல் கொண்டும் கட்டப்பட்டுள்ளது. யாளி வரிசை, குமுதவரி, பட்டிகை என அதிட்டான அங்கங்கள் அருமையாக அடுக்கப்பட்டுள்ளன. இறைவனின் கருவறை சுற்றி பஞ்சகோஷ்டங்கள், இருபுறமும் பத்மங்கள் கொண்ட தூண்கள், ஆனால் அதில் உடைமையாளர்கள் இல்லை. துர்க்கையினை காணவில்லை, ஆனால் மகிஷனின் எருமைத்தலை மட்டும் உள்ளது. கருவறையில் இருந்து இறைவன் எடுக்கப்பட்டு இடைநாழி பகுதியில் வைக்கப்பட்டுள்ளார். அற்புதமான லிங்க மூர்த்தி. சில மூர்த்திகளை பார்க்க பார்க்க தான் பிடிக்கும் இவரை பார்த்தவுடனேயே பிடிக்கும். கோயிலின் இன்றைய நிலைகண்டு வருந்திய நிலையில் விநாயகர் வெளியில் கூரையின்றி அமர்ந்துள்ளார். இறைவியின் கருவறை வெறுமையாக இருக்கிறது. எங்கே எப்படி இருக்கிறாரோ?? விநாயகர் முருகன் சண்டேசர், பைரவர் சிற்றாலயங்கள் உள்ளடக்கி பெரிய பிரகாரத்துடன் சுற்றாலை மண்டபங்கள் கொண்டு விளங்கியது இக்கோயில். # ” உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
திருக்கடையூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
மயிலாடுதுறை
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி