திருவிஜயமங்கை விஜயநாதேஸ்வரர் திருக்கோயில், தஞ்சாவூர்
முகவரி
அருள்மிகு விஜயநாதேஸ்வரர் திருக்கோயில், திருவிஜயமங்கை-612 301. தஞ்சாவூர் மாவட்டம். போன்: +91- 435- 294 1912, 94435 86453, 93443 30834
இறைவன்
இறைவன்: விஜயநாதேஸ்வரர் ( விஜயநாதர்) இறைவி: மங்கள நாயகி – மங்கை நாயகி, மங்கலம்பிகை
அறிமுகம்
திருவிசயமங்கை – திருவிஜயமங்கை வியநாதேஸ்வரர் கோயில் சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற காவிரி வடக்கரையில் அமைந்துள்ள சிவாலயமாகும். இது தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 47வது சிவத்தலமாகும். மூலவர் கிழக்கு நோக்கியும், அம்மன் தெற்கு நோக்கியும் அருளுகின்றனர். நுழைவாயிலைக் கடந்து உள்ளே சென்றதும் பலிபீடம், நந்தி காணப்படுகின்றன. அடுத்து விநாயகர் உள்ளார். தொடர்ந்து உள்ளே செல்லும்போது மண்டபத்தில் வலப்புறம் நால்வர் சன்னதியும், இடப்புறம் நவக்கிரக சன்னதியும் உள்ளன. அடுத்து மங்கைநாயகி சன்னதி உள்ளது. மூலவர் கருவறைக்கு முன்பாக விநாயகர், முருகன் இரு புறங்களிலும் உள்ளனர். கருவறை கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி உள்ளார். திருச்சுற்றில் சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது.
புராண முக்கியத்துவம்
மகாபாரத போரின்போது பாண்டவர், கவுரவர் படையினர் ஒருவருக்கொருவர் நிகராக போரிட்டுக் கொண்டிருந்தனர். இவ்வேளையில், வேதவியாசர் அர்ஜுனரிடம், சிவனை வணங்கி பாசுபத அஸ்திரம் பெற்றால் எளிதில் துரியோதனரை வெற்றி கொள்ளலாம் என ஆலோசனை கூறினார். அதன்படி அர்ஜுனன் சிவனை வேண்டி தவமிருந்தான். இதையறிந்த, துரியோதனர் முகாசுரனை அனுப்பி தவத்தை கலைக்க முயன்றார். பன்றி வடிவில் வந்த அசுரனை, அர்ஜுனன் வீழ்த்தினான். அங்கு வந்த ஒரு வேடன், தானே பன்றியை வீழ்த்தியாகச் சொன்னார். இருவருக்கும் வாக்குவாதம் உண்டானது. அவ்வேளையில், சுயரூபம் காட்டிய சிவன், பாசுபத அஸ்திரம் கொடுத்தார். அருகிலிருந்த அம்பாள் சிவனிடம், “ஆயுதங்களில் உயர்ந்ததான பாசுபதாஸ்திரம் பெறுவதற்கு அர்ஜுனன் தகுதிபெற்றவன்தானா?’ என்றாள் சந்தேகத்துடன். சிவன் அவளிடம், “அர்ஜுனன் மஸ்யரேகை (அதிர்ஷ்ட ரேகை) பெற்றவன். எனவே, அவனுக்கு அஸ்திரம் கொடுக்கலாம்,’ என்றார். அர்ஜுனனும் அம்பாளிடம் பணிந்து நின்று தன் ரேகைகளை காட்டினாராம். அதன்பின் அம்பாள் சம்மதிக்கவே சிவன் பாசுபத அஸ்திரத்தை அவனிடம் கொடுத்தார். அர்ஜுனர் தனக்கு அருள் செய்ததைப்போல இங்கிருந்து அருளும்படி வேண்டவே சிவன் எழுந்தருளினார். அர்ஜுனனுக்கு விஜயன் என்றும் பெயருள்ளதால், சிவன் “விஜயநாதர்’ என்று பெயர் பெற்றார். தலத்திற்கும் திருவிஜயமங்கை என்ற பெயர் ஏற்பட்டது.
நம்பிக்கைகள்
ஆயுள் விருத்திக்காகவும், ஆயுள் தோஷம், நோயால் பாதிக்கப்பட்டோர் குணமடையவும் இங்கு வேண்டிக்கொள்கிறார்கள். செயல்களில் வெற்றி பெற, தேர்வில் நல்ல மதிப்பெண் பெற விஜயநாதரை வழிபட்டு வரலாம். திருமணத்தடை உள்ளவர்கள் வழிபாடு செய்து பலனடைகிறார்கள்.
சிறப்பு அம்சங்கள்
சோழர்கால முறைப்படி கட்டப்பட்ட கோயில். இங்கு மூலஸ்தான கோபுரம் பெரியதாகவும், ராஜகோபுரம் சிறியதாகவும் அமைக்கப்பட்டுள்ளது. அம்மன் மங்கள நாயகி நான்கு திருக்கரங்களுடன் அருள்பாலிக்கிறாள். முன் இரண்டு கைகளில் அபய முத்திரையும், பின் இரண்டு கைகளில் ஒரு கையில் அட்சரமாலையும், ஒரு கையில் நீலோத்பவ மலருடனும் அருளுகிறாள். அருணகிரிநாதர் இத்தல முருகனை திருப்புகழில் பாடியுள்ளார்.
திருவிழாக்கள்
திருக்கார்த்திகை, சிவராத்திரி, பங்குனியில் திருக்கல்யாணம் நடைபெறும்.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத் துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
திருவிஜயமங்கை
அருகிலுள்ள இரயில் நிலையம்
கும்பகோணம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி