திருவாலி அழகியசிங்கர் திருக்கோயில், நாகப்பட்டினம்
முகவரி
அருள்மிகு அழகியசிங்கர் கோயில், திருவாலி திருநகரி-609 106 நாகப்பட்டினம் மாவட்டம் போன்: +91-4364-256 927, 94433 72567
இறைவன்
இறைவன்: அழகியசிங்கர், இறைவி: அமிர்தா கட வள்ளி
அறிமுகம்
திருவாழி அழகியசிங்கர் கோயில், தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருவாழி எனும் கிராமத்தில் திராவிடக் கட்டிடக்கலை நயத்தில் கட்டப்பட்டு, அழகிய நரசிம்மருக்கு அர்பணிக்கப்பட்டது. தாயார் பெயர் பூர்ணவல்லி. திருமங்கை ஆழ்வார் மற்றும் குலசேகர ஆழ்வார்களால் மங்கள்சாசனம் செய்யப்பட்டது. இக்கோயிலையும், திருநகரி வேதராஜன் கோயிலையும் ஒரே திவ்ய தேசமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. சோழர்களால் கட்டப்பட்டதாக கருதப்படும் இக்கோயிலை கி பி 16ஆம் நூற்றாண்டில் தஞ்சாவூர் நாயக்கர்களால் புதுப்பிக்கப்பட்டது. இத்தலத்தில் நரசிம்மர், திருமங்கை ஆழ்வாருக்கு காட்சியளித்ததாக நம்பப்படுகிறது. இதனருகில் காணப்படும் வேதராஜன் கோயிலுக்கும், இக்கோயிலுக்கும் மிகவும் தொடர்புள்ளது. திருநகரி வேதராஜன் கோயிலில் நடைபெறும் திருமங்கை ஆழ்வார் உற்சவம் போன்று இக்கோயிலும் ஆண்டு தோறும் தை மாதத்தில் கொண்டாடப்படுகிறது.
புராண முக்கியத்துவம்
திருமால் நரசிம்ம அவதாரம் எடுத்த போது இரண்யனை வதம் செய்த சீற்றம் அடங்காமல் இருந்தார். இதனால் பயந்து போன தேவர்களும், ரிஷிகளும் பூலோகம் மேலும் அழியாது காக்கப்பட வேண்டும் என லட்சுமி தேவியை வேண்டினர். இவர்களது வேண்டுகோளை ஏற்ற தாயார் பெருமாளின் வலது தொடையில் வந்து அமர்ந்தாள். தேவியை பெருமாள் ஆலிங்கனம் (அணைத்தல்) செய்து கொண்டார். எனவே இவ்வூர் திருஆலிங்கனம் என்ற பெயர் பெற்று திருவாலி (திருவாகிய லட்சுமியை ஆலிங்கனம் செய்தல்) ஆயிற்று. குலசேகர ஆழ்வார் இத்தல பெருமாளை மங்களாசாசனம் செய்துள்ளார். இப்பகுதியில் (ஆலிநாடு) திருமங்கை ஆழ்வார் குறுநில மன்னனாக திகழ்ந்தார். எனவே அவருக்கு “ஆலிநாடன்’ என்ற பெயர் உண்டாயிற்று.
நம்பிக்கைகள்
ஞானம், செல்வம் வேண்டுவோர் இத்தலத்து இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கின்றனர்.
சிறப்பு அம்சங்கள்
பத்ரிகாசிரமத்திற்கு அடுத்ததாக பெருமாள் திருமந்திரத்தை தானே உபதேசம் செய்த இடமாதலால் இத்தலம் பத்ரிக்கு இணையானது. லட்சுமியுடன் பெருமாள் நரசிம்ம கோலத்தில் வீற்றிருப்பதால் இத்தலத்திற்கு “லட்சுமி நரசிம்ம க்ஷேத்திரம்’ என்ற பெயரும் உண்டு. திருவாலியையும் தரிசிப்பதால் இங்கே பஞ்ச நரசிம்ம தலங்களைத் தரிசித்த புண்ணியம் கிடைக்கும். திருமங்கையாழ்வாருக்கு விரைவில் அருள்பாலிக்க வேண்டும் என லட்சுமி தேவி பெருமாளை இடைவிடாது வேண்டினாள். பெருமாள் கூறியபடி லட்சுமி திருவாலியில் தவம் செய்யும் பூர்ண மகரிஷியின் மகளாக பிறந்தாள். பெருமாளை திருமணம் செய்து கொண்டு திருவாலி அருகே தேவராஜபுரம் என்ற இடத்திற்கு வரும் போது திருமங்கை மன்னன் வழிமறித்து வழிப்பறி நடத்த, பெருமாள் திருமங்கையின் காதில் அஷ்டாட்சர மந்திரத்தை உபதேசம் செய்து ஆட்கொண்டார். திருமங்கை வழிப்பறி செய்த இடத்தில் இருந்த மண்டபத்தை இன்றும் காணலாம். இதை முன்னிட்டு ஆண்டுதோறும் தேவராஜபுரத்தில் திருமங்கை மன்னன் பெருமாளை வழிப்பறி நடத்தி, திருமந்திர உபதேசம் பெறும் விழா சிறப்பாக நடக்கிறது.
திருவிழாக்கள்
வைகாசி சுவாதி 10 நாள் திருவிழா, ஆவணி பவித்ர உற்சவம், தை 12 கருட சேவை, பங்குனி உத்திரம், மாத சுவாதி, பிரதோஷம்.
காலம்
1000 -2000ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத் துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
திருவாலியும்திருநகரியும்
அருகிலுள்ள இரயில் நிலையம்
சீர்காழி
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி