Monday Jul 01, 2024

திருவாய்மூர் வாய்மூர்நாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்

முகவரி

அருள்மிகு வாய்மூர்நாதர் திருக்கோயில், திருவாய்மூர் அஞ்சல், வழி திருக்குவளை – 610 204 . திருவாரூர் வட்டம், நாகப்பட்டினம் மாவட்டம். போன்: +91-97862 44876

இறைவன்

இறைவன்: வாய்மூர்நாதர் இறைவி: ஷிரோப வசனி

அறிமுகம்

திருவாய்மூர் வாய்மூர்நாதர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 124ஆவது சிவத்தலமாகும். சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற இத்தலம் நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை வட்டத்தில் அமைந்துள்ளது. அப்பருக்கு இறைவன் “வாய்மூரில் இருப்போம் வா” என்று உணர்த்திய திருத்தலம்.இத்தல இறைவனார் சுயம்பு மூர்த்தி. ஏழு விடங்கத் தலங்களில் ஒன்றான திருத்தலம்.இக்கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோயிலின் முன்பாக குளம் உள்ளது. திருச்சுற்றில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் கூடிய சுப்பிரமணியர், மகாலட்சுமி ஆகியோருக்கான சன்னதிகள் உள்ளன. கிழக்குச்சுற்றில் எட்டு பைரவர் சன்னதிகள் உள்ளன. கருவறையின் தென்புறம் தியாகராஜர் சன்னதி உள்ளது. வடபுறம் திருமறைக்காடு இறைவன் சன்னதியும் அம்மாள் சன்னதியும் காணப்படுகின்றன.

புராண முக்கியத்துவம்

சிவபெருமான் சொர்க்கத்தில் வீற்றிருக்கும் வடிவமே விடங்க வடிவமாகும். இந்த வடிவம் பூலோகத்திலும் இருக்க வேண்டுமென அவர் விரும்பினார். இந்திரன் ஒருமுறை சிவனின் விடங்க வடிவத்தை யாசித்தான். விடங்கம் என்றால் சிறிய சிவலிங்க வடிவமாகும். இந்த லிங்கத்தை போக வாழ்வு நிறைந்த இந்திரலோகத்தில் வைத்து பூஜை செய்வது கஷ்டம் என சிவன் கூறினார். இருப்பினும் இந்திரன் வற்புறுத்தியதால், சிவன் விடங்க வடிவத்தை அவனிடம் கொடுத்து விட்டார். அதன் சிறப்பை உணர்ந்த இந்திரன், பூஜையை நல்ல முறையில் நடத்தி வந்தான். சிவபெருமான் அந்த லிங்கம் பூலோகத்தில் இருக்க வேண்டும் என விரும்பினார். முசுகுந்த ரவர்த்தி என்பவர் பூவுலகை ஆண்டு வந்த போது, மக்கள் மிருகங்களால் துன்பப்பட்டனர். எனவே அவர் வேட்டைக்குச் சென்றார். வடபகுதியில் வேட்டையை முடித்து விட்டு, காவிரிக்கரைக்கு அவர் வந்தார். ஒரு சிவராத்திரி இரவில், முசுகுந்தன் வேட்டையாடிக் கொண்டிருந்த போது, சில முனிவர்கள் அவ்வழியே சென்றனர். அவர்கள் சிவராத்திரி பூஜைக்காக வில்வாரண்யம் எனப்படும் பகுதிக்கு சென்று சிவலிங்க பூஜை செய் யப்போவதாகக் கூறினர். சிவராத்திரியன்று மிருகங்களை வேட்டையாடுவதை சாஸ்திரம் அனுமதிப்பதில்லை. இதனால், வருந்திய அரசன், தன் ராஜ கோலத்தை கலைத்து விட்டு, ராஜரிஷி போல் வேடம் தரித்து, முனிவர்களுடன் சென்றான். தவறை உணர்ந்த அவனுக்கு சிவன் காட்சி கொடுத்தார். இந்திரனிடம் இருக்கும் சிவலிங் கத்தை எப்படியேனும் வாங்கி, பூலோகத்தில் வழிபாட்டுக்கு பயன்படுத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார். அச்சமயத்தில் இந்திரன் வாலாசுரன் என்பவனைக் கொல்பவர்களுக்கு தன்னிடமுள்ள ஐராவத யானை, வெண்குடை நீங்கலாக எதைக் கேட்டாலும் தருவதாக சொல்லியிருந்தான். வாலாசுரனைக் கொன்று அதை வாங்கி வரும்படி யோசனையும் சொன்னார். சமயோசிதமுள்ளவன் கடவுளையும் வெல்வான். முசுகுந்தன் சிவனிடம், “”அப்படியே செய்கிறேன். ஆனால், அவன் விடங்கரைப் போலவே உள்ள வேறு லிங்கத்தைக் கொடுத்து என்னை ஏமாற்றி விடலாம். எனவே, விடங்க வடிவம் என்றால் எப்படியிருக்கும் என்பதைத் தனக்கு காட்ட வேண்டும்,’ என்றான். சிவனும் அவ்வாறே செய்ய, அங்கு பெரும் ஒளிவெள்ளம் எழும்பியது. முசுகுந்தனுடன் வந்த முனிவர்கள் மட்டுமின்றி, தேவலோகமே அங்கு திரண்டு வந்து விட்டது. உணர்ச்சிவசப்பட்ட முசுகுந்தன், “”ஐயனே! தாங்கள் இந்திர லோகத்திலும் இருங்கள். இங்கேயும் அப்படியே இருங்கள். இங்கு நான் உனக்கு கோயில் எழுப்புகிறேன்,’ என்றான். மற்றவர்களும் வற்புறுத்தவே, பக்தர்களின் கோரிக்கையை ஏற்று அத்தலத்தில் தங்கியுள்ளார்.

நம்பிக்கைகள்

திருமணத்தடை நீங்க, கல்வியில் சிறந்து விளங்க, செல்வ வளம் பெருக இத்தலத்து இறைவனிடம் பிரார்த்தனை செய்துகொள்கிறார்கள்

சிறப்பு அம்சங்கள்

சூரியன் வழிபட்ட தலம். பங்குனி மாதத்தில் 12, 13 ஆகிய இரு நாட்களில் சூரியக் கதிர்கள் சுவாமி, அம்மன் மேல் படுவதைக் காணலாம். விடங்கலிங்கம் என்பது கடைகளில் விற்கப்படும் லிங்கம் போல மிகச்சிறிதாக இருக்கும். இதை ஒரு பாத்திரத்திற்குள் வைத்திருப் பார்கள். அர்ச்சகரிடம் சொன் னால் அதை எடுத்துக் காட்டுவார். இதை தரிசித்தால், சொர்க் கம் உறுதி. அகால மரணம் ஏற்படாது என்பது நம்பிக்கை. நவக்கிரகங்கள் இங்கு நேர் வரிசையில் உள்ளன.அஷ்ட பைரவர்: காசியில் எட்டு பைரவர்கள் உள்ளனர். அதுபோல், இக்கோயிலிலும் எட்டு பைரவர்கள் உள்ளனர். இவர்களை தரிசித்தால் பயம் விலகும். திரியம்பகாஷ்டமி நாளில் சிவன் முப்புரம் எரித்ததாக கருதப்படுகிறது. நான்கு பைரவர் சிலைகளுடன், நான்கு தண்டங்கள் பைரவ அம்சமாக உள்ளன. இத்தலத்தில் இறைவன் சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 188 வது தேவாரத்தலம் ஆகும். கோஷ்டத்தில் உள்ள தஷிணாமூர்த்தி ரிஷபத்தின் மேலுள்ளார். வாய்மூர் என்பது வாய்மையர் ஊர் என்பதன் மருஉ மொழியாகக் கொள்ளலாம். சப்தவிடங்கத் தலங்களில் இத்தலமும் ஒன்றாகும். தியாகராசர் – நீலவிடங்கர், நடனம் கமல நடனம், சிம்மாசனம் ரத்தினசிம்மாசன மாகும். பிரமன் முதலிய தேவர்கள் தாரகாசுரனுக்குப் பயந்து பறவை உருவ மெடுத்து சஞ்சரிக்கையில் இத்தலத்திற்கு வந்து பாபமேக பிரசண்டமாருத தீர்த்தத்தில் நீராடிப் பெருமானை வழிப்பட்டுப் பாவம் நீங்கப்பெற்றனர்.

திருவிழாக்கள்

சிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், மார்கழி திருவாதிரை வைகாசி விசாகம் பிரமோற்சவமாக நடத்தப்படுகிறது. வழக்கமான விழாக்கள் உண்டு. பைரவருக்கு அஷ்டமியில் பூஜை உண்டு. ஐப்பசி மாதப்பிறப்பன்று தியாகராஜருக்கு விசேஷ அபிஷேகம் நடைபெறுகின்றது.

காலம்

1000-2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திருவாரூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருவாரூர்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top