திருவாமூர் பசுபதீஸ்வரர் கோவில் (திருநாவுக்கரசர் (அப்பர்) ஸ்தலம்), கடலூர்

முகவரி :
திருவாமூர் பசுபதீஸ்வரர் கோவில் (திருநாவுக்கரசர் (அப்பர்) ஸ்தலம்), கடலூர்
திருவாமூர், திருக்கோவிலூர் வழியாக, பண்ருட்டி,
கடலூர் மாவட்டம் – 607 106
தொலைபேசி: +91 41442 247 707 / 239 6333
இறைவன்:
பசுபதீஸ்வரர்
இறைவி:
திருபுரசுந்தரி
அறிமுகம்:
பசுபதீஸ்வரர் கோயில் தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டி அருகே உள்ள திருவாமூர் கிராமத்தில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மூலவர் பசுபதீஸ்வரர் என்றும், அன்னை திருபுரசுந்தரி என்றும் அழைக்கப்படுகிறார். இக்கோயில் கெடிலம் ஆற்றின் வடக்கு கரையில் அமைந்துள்ளது. திருவாமூர் என்பது திருநாவுக்கரசரின் (அப்பர்) அவதார ஸ்தலமாகும். அருணகிரிநாதர் தனது திருப்புகழ் பாடல்களை இக்கோயிலின் முருகன் மீது பாடியுள்ளார். திருவாமூர் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 1 கிமீ தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது. பண்ருட்டியிலிருந்து திருக்கோவிலூர் வழித்தடத்தில் இக்கோயில் அமைந்துள்ளது.
புராண முக்கியத்துவம் :
திருவாமூர் என்ற இந்த தலத்தில்தான் தேவாரம் பாடிய நால்வருள் முக்கியமானவரான அப்பர் என்று அழைக்கப்பட்ட திருநாவுக்கரசர் அவதரித்தார். இவரது தந்தை புகழனார்; தாயார் மாதினியார்; சகோதரி திலகவதியார். பெற்றோர் அப்பருக்கு மருள்நீக்கியார் என பெயர் வைத்தனர். இளமையிலேயே அவரது பெற்றோர் இறந்துவிட்டனர். சகோதரியின் பாதுகாப்பில் மருள்நீக்கியார் வளர்ந்தார். உறவினர்கள் திலகவதியாருக்கு அவ்வூரில் சேனைத் தலைவராக இருந்த கலிப்பகையாரை திருமணம் செய்துவைக்க நிச்சயித்தனர். மன்னனால் போருக்கு அனுப்பப்பட்ட கலிப்பகையார் போரில் கொல்லப்பட்டார். திருமணம் நின்றுபோனதால், மனம் உடைந்த திலகவதி திருவதிகை என்ற தலத்திற்கு சென்று சிவத்தொண்டு செய்துவந்தார். திருநாவுக்கரசரோ சமண சமயத்தை சார்ந்து, தர்மசேனர் என்ற பெயரை சூட்டிக்கொண்டார்.திலகவதியார் தனது தம்பியை நம் தாய் சமயமான சைவ சமயத்திற்கு மீட்டுத் தரவேண்டும் என சிவபெருமானிடம் வேண்டிக் கொண்டார். இதையடுத்து நாவுக்கரசரை சூலைநோய் தாக்கியது. திருவதிகை சென்று இறைவனின் திருநீறை வயிற்றில் பூசியதும் வலி குணமானது. இதனால் மெய்சிலிர்த்த அவர் திருப்பதிகம் பாடி வழிபட்டார். எனவே இறைவனே அவர் முன்பு தோன்றி நாவுக்கரசு என பெயர்சூட்டினார். பல தலங்களுக்கும் சென்று தேவாரம் பாடிய அப்பர் பெருமான் திருப்புகலூரில் சித்திரை சதய நாளில் இறைவனடி சேர்ந்தார். இவரது காலம் கி.பி. 7 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியாகும்.
நம்பிக்கைகள்:
இங்குள்ள ஈசனை வழிபடுவோர்க்கு மனநிம்மதி கிடைக்கும். இது சைவ சமயத்தின்பால் அதீத பற்றும் அக்கறையும் கொண்ட அன்பர்கள் அவசியம் வந்து வழிபட வேண்டிய அருமையான சிறப்பு பெற்ற கோயில் இது. இத்தலத்து ஈசுவரனைத்தான் அப்பரின் தாய் தகப்பனார் வழிபட்டுள்ளனர். ஈசுவரன் மீது மாறாத பக்தியும் சிரத்தையும் கொண்டோர் இத்தலத்து பசுபதீசுவரனை வணங்கினால் அத்தனை பேறுகளும் கிடைக்கும்.மேலும் நின்ற நிலையில் உள்ள அப்பர் பெருமானை வணங்கினால் மனதுக்கு நிம்மதியும், வாக்கு வன்மையும், கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கும் ஆற்றலும் , ஈசனின் அருளும் கிடைக்கும்.
சிறப்பு அம்சங்கள்:
இந்த பசுபதீசுவரர் ஆலயம் மிகவும் பழமையானது. சுவாமி சன்னதிக்கு எதிரில் அப்பர் சுவாமிகள் திருவுருவம் நின்ற திருக்கோலத்துடன் மூலாதாரமாக விளங்குகிறது. அதில் உழவாரப்படை இடது தோளில் சார்த்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அருணகிரிநாதர் இத்தலத்து முருகப்பெருமான் குறித்து திருப்புகழ் பாடியுள்ளார். அப்பரின் அக்காள் திலகவதியாருக்கு தனி சன்னதி உள்ளது. அப்பரின் தாயார் மாதினியார் தகப்பனார் புகழனார் ஆகியோருக்கும் சன்னதிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. திருவாமூர் நாற்புறமும் கழனிகள் சூழ்ந்த மிக அழகிய சிறிய கிராமம்.தெற்கு பிரகாரத்திலும் அப்பர் திருவுருவம் உள்ளது.
இங்கே பசுபதீஸ்வரரும், திரிபுரசுந்தரி அம்மனும் அருள்பாலிக்கிறார்கள். சைவ சமயத்தின்மீது பற்றுக்கொண்டவர்கள் வணங்க வேண்டிய தலம் இது. இங்கே அப்பர் பெருமான் நின்ற நிலையில் காட்சி தருகிறார். அவரை வணங்கினால் மனதிற்கு நிம்மதியும், வாக்கு வன்மையும், கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கும் ஆற்றலும், ஈசனின் அருளும் கிடைக்கும். இங்கே பசுபதீஸ்வருரம் திரிபுர சுந்தரியும் அருள்பாலித்தாலும் அப்பர் பெருமானுக்கே முக்கியத்துவம் தரப்படுகிறது. திலகவதியாரை மணம் பேசிய கலிப்பகையார் போரில் இறந்துவிட்டதால் இவ்வூரில் திருமணத்துக்கு முதல் நாளிலோ அல்லது திருமணத்தன்றோ தான் நிச்சயதார்த்தம் செய்கிறார்கள்.திலகவதியாருக்கும், அப்பரின் தாய் தந்தைக்கும் இங்கு தனி சன்னதிகள் உள்ளன. ஊரைச்சுற்றிலும் கழனிகள் அதிகம். நாவுக்கரசர் பாடிய ஒரு பாடல், குழந்தைகளும் கற்றுக்கொள்ள கூடிய வகையில் மிகவும் எளிமையாக உள்ளது.
நாவுக்கரசர் அவதாரம் செய்த களரி வாகை மரத்தடியில் சுவாமிக்கு அழகிய கோயில் கட்டப்பட்டுள்ளது. இந்த மரத்தை ஒரு அதிசய மரமாக கருதி மக்கள் பூஜிக்கின்றனர். இது செடியாகவும் இல்லாமல் கொடியாகவும் இல்லாமல் மரமாகவும் இல்லாமல் ஒரு புதுவகை அம்சமாக உள்ளது. இதன் இலையை சுவைத்தால் இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கசப்பு, உவர்ப்பு, கார்ப்பு என்ற அறுசுவைகளையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. கி.பி.7ம் நூற்றாண்டிற்கு முன்பிருந்தே இந்த மரம் இங்கு உள்ளது.
3 ம் குலோத்துக்க சோழன் திருப்பணி செய்த தலம், 11 ம் நூற்றாண்டில் திருப்பணிகள் நடைபெற்றுள்ளன. அப்பர் குருபூஜை தினமான சித்திரைச் சதயத்தில் பெருவிழாவும் திருமுறை மாநாடும் நிகழ்ந்து வருகின்றன. திருநாவுக்கரசர் நினைவாக ஆண்டுதோறும் இவ்விழாவில் மூத்த திருமுறை இசைவாணர் (சிறந்த ஓதுவாமூர்த்தி) ஒருவருக்குத் திருமுறைக் கலாநிதி என்ற பட்டம் பொறித்த பொற்பதக்கமும் பொன்னாடையும் இரண்டாயிரம் பணமுடிப்பும் ஸ்ரீ லஸ்ரீ குருமகாசந்நிதானம் அவர்களால் வழங்கப்பெற்று வருகின்றன.
அப்பர் சுவாமிகள் பரம்பரையினர் பக்கத்து ஊர்களில் வாழ்ந்து வருகின்றனர். அப்பர் சுவாமிகள் பங்குனிமாதம் ரோகினியில் அவதரித்ததாகக் கொண்டு அன்றைய நாளிலும், அவர் இறைவனடி கூடிய சித்திரைச் சதயத் திருநாளிலும் அப்பருக்கு வழிபாடுகள் நிகழ்த்தி வருகின்றனர். தவிர விசேஷ நாட்களின் போது கோயிலில் பக்தர்கள் நிரம்ப அளவில் வருகின்றனர்.
திருவிழாக்கள்:
அப்பர் குருபூஜை சித்திரை சதயத்திலும், அவதார நாள் பங்குனி மாதம் ரோகிணியிலும் நடக்கிறது.














காலம்
2000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
திருவாமூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
பண்ருட்டி
அருகிலுள்ள விமான நிலையம்
புதுச்சேரி