Sunday Jun 30, 2024

திருவாசி மாற்றுரைவரதீஸ்வரர் திருக்கோயில், திருச்சி

முகவரி

அருள்மிகு மாற்றுரைவரதீஸ்வரர் திருக்கோயில், திருவாசி-621 216. திருச்சி மாவட்டம். போன்: +91-431 – 6574 972, +91-94436 – 92138.

இறைவன்

இறைவன்: மாற்றுரைவரதர் (பிரம்மபுரீஸ்வரர், சமீவனேஸ்வரர்) இறைவி: பாலம்பிகை

அறிமுகம்

மாற்றுரைவரதீஸ்வரர் கோயில் என்பது திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவாசி என்ற ஊரில் அமைந்துள்ள சிவாலயமாகும். இத்தலம் தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகவும், காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 62வது சிவதலமாகவும் உள்ளது. இச்சிவாலய மூலவரை உமாதேவி, பிரம்மதேவன், இலக்குமி, அகத்திய முனிவர், கமலன் எனும் வைசியன், கொல்லிமழவன் ஆகியோர் வழிபட்டுள்ளனர். சிவாலயத்தின் எதிரே அடைக்கலம் காத்தார் கோயிலும் அதில் கருப்பண்ணசாமி சன்னதியும் உள்ளது. அக்கோயிலின் அருகே மதுரை வீரன் சன்னதியும் அமைந்துள்ளது. இச்சிவாலயம் அமைந்த திருவாசி ஊரானது புராண காலத்தில் திருப்பாச்சிலாச்சிராமம் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்துள்ளது.

புராண முக்கியத்துவம்

சிவதல யாத்திரை சென்ற சுந்தரர் தன்னுடன் வரும் சிவனடியார்களுக்காக சிவனிடம் பொன் பெற்று அதன் மூலம் அவர்களுக்கு உணவு படைப்பது வழக்கம். ஒருசமயம் அவர் திருவானைக்கா தலத்தில் சிவனை தரிசித்துவிட்டு இத்தலம் வந்தார். சிவனையே நண்பராகப் பெற்றிருந்த அவர் இங்கு அவரிடம் பொன் வேண்டி பதிகம் பாடினார். அவரைச் சோதிக்க எண்ணிய சிவன் பொன் தராமல் அமைதியாக இருந்தார். பொறுமையுடன் இருந்த சுந்தரர் சற்று நேரத்தில் கோபம் கொண்டார். சிவன் என்பவர் இருக்கிறாரா? இல்லையா? என்ற அர்த்தத்தில் அவரை இகழ்ந்து பதிகமும் பாடினார். அதற்கு மேல் சுந்தரரை சோதிக்க எண்ணாத சிவன், அவருக்கு ஒரு பொன் முடிப்பை பரிசாகத் தந்தார். சுந்தரருக்கு, சிவன் கொடுத்த பொன் தரமானதுதானா என சந்தேகம் வரவே அவர் பொன்னையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது இரண்டு பேர் அங்கு வந்தனர். அவர்கள் இருவரும் சுந்தரரிடம், பொன்னை பார்த்துக் கொண்டிருந்த காரணத்தை கேட்டனர். அவர் “பொன் சுத்தமானதுதானா!,’ என பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்றார். அவர்களில் ஒருவர் சுந்தரரிடம் இருந்த பொன்னை வாங்கி, அதனை உரைத்துக் காட்டி தரமானதுதான் என்று உறுதி கூறினார். உடனிருந்தவரும் அவர் சொன்னதை ஒப்புக்கொண்டார். பின்னர் இருவரும் மறைந்து விட்டனர். வியந்த சுந்தரர் சிவனை மறுபடியும் தான் இகழ்ந்து பாடவில்லை என்ற அர்த்தத்தில் பதிகம் பாடினார். அவருக்கு காட்சி தந்த சிவன், தங்கத்தை உரைத்துக்காட்டியது தான் எனவும், உடன் வந்தது மகாவிஷ்ணு எனவும் உணர்த்தினார். “மாற்றுரைவரதர்’ என்ற பெயரும் பெற்றார்.

நம்பிக்கைகள்

சுவாமிக்கு இலுப்பை எண்ணெய் விளக்கு போட்டு வழிபட்டால் குடும்பம் சிறக்கும், தோஷங்கள் நீங்கும், அம்பாளிடம் வேண்டிக்கொண்டால் புத்திரபாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

சிறப்பு அம்சங்கள்

சர்ப்ப நடராஜர்: முன்னொரு காலத்தில் இப்பகுதி மழநாடு என்ற பெயரில் அழைக்கப்பட்டது. இப்பகுதியை கொல்லிமழவன் எனும் மன்னன் ஆட்சி செய்து வந்தான். மன்னனின் மகள் தீராத கொடிய நோயினால் பாதிக்கப்பட்டிருந்தாள். மன்னன் எவ்வளவோ வைத்தியம் பார்த்தும் அவளைக் குணப்படுத்த முடியவில்லை. எனவே, அவளை இக்கோயிலில் கிடத்திவிட்டு, அவளது பிணியை குணப்படுத்தும் பொறுப்பை சுவாமியிடம் விட்டுவிட்டு சென்று விட்டான். அச்சமயத்தில் திருத்தலயாத்திரையாக திருஞானசம்பந்தர் இத்தலம் வந்தார். அவர் சுவாமியின் முன்பு கிடந்த பெண்ணைக் கண்டார். அந்நேரத்தில் சம்பந்தர் வந்திருப்பதை அறிந்த மன்னன் கோயிலுக்கு வந்தான். திருஞானசம்பந்தரிடம் மன்னன், தன் மகளின் நோயைக் கூறி அவள் குணமடைய வழி சொல்லும்படி கேட்டுக்கொண்டான். மன்னனின் நிலையை அறிந்த சம்பந்தர் நடராஜரைக் குறித்து பதிகம் பாடினார். அவரது பாடல் கேட்ட நடராஜர் ஆனந்த நடனம் ஆடினார். மன்னன் மகளை பிடித்திருந்த நோயை முயலக உருவாக்கி அவனை அழித்து நாகத்தின் மீது ஆடினார். மன்னன் மகள் குணமாகி எழுந்தாள். இதனை உணர்த்தும் விதமாக இங்குள்ள நடராஜர் தலையில் சேர்த்துக் கட்டிய சடைமுடியுடன், ஒரு காலை நாகத்தின் மீது ஊன்றி ஆடும் கோலத்தில் இருக்கிறார். இவரை “சர்ப்ப நடராஜர்’ என்கின்றனர். நடராஜரின் இந்த தரிசனம் அபூர்வமானதாகும். அம்பாள் சிறப்பு: அம்பாள் பாலாம்பிகை, இத்தலத்தில் கமலன் எனும் வணிகனின் மகளாக பிறந்தாள். வன்னிமரத்தின் அடியில் சுவாமியை வேண்டி தவம் இருந்து தகுந்த காலத்தில் அவரை மணந்து கொண்டாள். இவள் பிரகாரத்தில் தனிச்சன்னதியில் தாமரை மலர் மீது நின்ற கோலத்தில், மேற்கு பார்த்தபடி இருக்கிறாள். இவளது சன்னதியில் வித்தியாசமாக துவாரபாலகிகளுக்கு பெண்கள் மஞ்சள் கயிறு, தொட்டில் கட்டி வழிபடுகின்றனர். இவர்கள் மூலமாக அம்பாள் பக்தர்களின் கோரிக்கைகளை ஏற்றுக் கொள்கிறாள் என்பது நம்பிக்கை. அர்த்தஜாம பூஜையில் மட்டும் முதலில் அம்பாளுக்கு பூஜைகள் செய்யப்பட்டு அதன்பிறகு சுவாமிக்கு பூஜைகள் நடக்கிறது. குழந்தை பிறந்தவர்களும், பாலதோஷம் உள்ள குழந்தைகளின் பெற்றோர்களும் அம்பாளுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபடுகின்றனர். இவ்வாறு செய்வதால் குழந்தைகள் வாழ்வில் நோய்கள் இன்றி சிறப்பாக வாழ்வர் என்பது நம்பிக்கை.

திருவிழாக்கள்

வைகாசியில் 11 நாட்கள் பிரம்மோற்ஸவம், திருக்கார்த்திகை, ஆருத்ரா தரிசனம், தைப்பூசம்.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்துசமயஅறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திருவாசி

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருச்சி

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top