Monday Jan 27, 2025

திருவக்கரை சந்திரமவுலீஸ்வரர் திருக்கோயில், விழுப்புரம்

முகவரி

அருள்மிகு சந்திர மௌலீசுவரர் திருக்கோயில், திருவக்கரை போஸ்ட்-604 304, விழுப்புரம் மாவட்டம். போன்: +91 – 413 2680870 , 2688949, 94435 36652

இறைவன்

இறைவன்: சந்திரசேகரேசுவரர், சந்திரமெளலீஸ்வரர் இறைவி: அமிர்தம்பாகை

அறிமுகம்

திருவக்கரை சந்திரமவுலீஸ்வரர் கோயில் பாடல் பெற்ற தலங்களில் தொண்டை நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். சம்பந்தர் பாடல் பெற்ற இந்தச் சிவாலயம் விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள சிவலிங்கம் கிழக்கு, தெற்கு, வடக்கு ஆகிய திசைகளில் முகமுடைய மும்முகலிங்கமாகும். இங்குள்ள இறைவன் சந்திரசேகரன்; இறைவி வடிவாம்பிகை. வக்கிரன் வழிபட்ட ஸ்தலம். வலிய கரை (சுற்றி கல் பாறைகள் ) உள்ள இடம். வக்ரகாளியம்மன் சிறப்பு. பெருமாள் சந்நிதியும் உள்ளது. வராக நதி எனும் சங்கராபரணி நதியின் கரையில் இத்தலம் அமைந்துள்ளது. இங்குள்ள மரங்கள் கல்லாக மாறிய தொன்மையுடையவை.

புராண முக்கியத்துவம்

வக்ராசூரன் என்ற அசுரனை வரதராஜ பெருமாள் சம்காரம் செய்கிறார். அந்த வக்ராசூரனின் தங்கை துன்முகியை வக்ர காளி சம்காரம் செய்யும் போது அந்த ராட்சசி துன்முகி கர்ப்பமாக இருந்தாளாம். குழந்தையை வதம் கூடாது என்பது தர்ம சாஸ்திரம்.எனவே துன்முகியின் வயிற்றில் கருவிலுள்ள குழந்தையை காளி தனது வலது காதில் குண்டலமாக அணிந்து கொண்டு ராட்சசியை சம்காரம் செய்தாளாம். வக்கிராசூரனின் தங்கையை அழித்ததால் வக்ரகாளியாக அங்கேயே அமர்ந்து விட்டாள். சம்காரம் பண்ணியதால் ஓங்காரமாக இருந்திருக்கிறாள். ஆதி சங்கரர் வந்து காளியை சாந்தம் செய்து இடது பாதத்தில் ஸ்ரீ சக்ர ராஜ எந்திரத்தை பிரதிஷ்டை செய்துள்ளார். ராகு கேது கிரகங்களுக்கு அதிதேவதை காளி என்பதால் வலது புறம் 5 இடப்புறம் 4 என்ற கணக்கின் படி சுற்றிவர வேண்டும் என்பது ஐதீகம். வக்ரகாளியம்மன்: வக்கிரகாளி சந்நிதியினால்தான் இத்திருத்தலம் தற்போது பலருக்கும் தெரிந்திருக்கிறது. இத்தலம் புகழ் பெறக் காரணமே இந்த வக்ரகாளியம்மனே ஆகும். வக்ர சாந்தி திருத்தலம் என்று இத்தலத்திற்கு பெயர். பட்டீசுவரம் துர்க்கை, சிதம்பரம் பிரம்ம சாமுண்டீசுவரி, தில்லை காளி போன்ற அற்புதமான சிற்பங்களைப் போலவே வக்கிரகாளி அம்மனின் திருவுருவமும் தனிச்சிறப்புடன் விளங்குகிறது. பொதுவாக காளி கோயில் ஊரின் எல்லையில்தான் இருக்கும். ஆனால் இங்கு ஊரின் நடுவில் ராஜ கோபுரத்தின் நுழைவு வாயிலின் அருகிலேயே அமைந்து வித்தியாசமானதாக உள்ளது. வக்கிரகாளியின் திருவுருவம் பிரமிப்பாக இருக்கிறது. சுடர் விட்ட பரவும் தீக்கங்குகளைப் பின்னணியாகக் கொண்ட தலை, மண்டை ஓட்டுக் கிரீடம் வலது காதில் சிசுவின் பிரேத குண்டலம், எட்டுத்திருத்தலங்கள் வலப்புறக் கைகளில் பாசம், சக்கரம், வாள், காட்டேரி, கபாலம் , பகைவர்களின் தலைகளையே மாலையாக தொடுத்து அந்த தலை மாலையையே மார்பு கச்சாக இடத் தோளிலிருந்து இறங்கி பருத்த தனங்களூடேவந்து படிந்து கீழே தொங்கும் வலக்கையில் சென்று முடிகின்றது. முண்ட மாலையினை அவள் முப்பிரி நூலாக அணிந்திருக்கிறாள்.இக்கோயிலை வலம் வர நினைப்பவர்கள் வலப்பக்கமாக ஐந்து முறையும், இடப்பக்கமாக நான்கு முறையும் வலம் வந்து தொழ வேண்டும்.

நம்பிக்கைகள்

இங்கு மனநிம்மதி கிடைக்க, கிரக தோசங்கள் நீங்க, காரியத் தடைகள் நீங்கி சுபிட்சம் உண்டாக, பூர்வஜென்ம பாவங்கள் விலக, (வர்க்க தோசம்) புத்திர தோசங்கள் விலக, பாவ தோசங்களும் விலக, காரியத் தடைகள் நீங்க சிவனை பிரார்த்திக்கிறார்கள். வக்ர தோசங்கள் , ஜாதக கிரக தோசங்கள், வியாபாரத்தடை, உத்தியோகத் தடை நீங்கவும், திருமணம் ஆகாதவர்கள், குழந்தைபேறு இல்லாதவர்கள் இத்தலத்தின் மிக முக்கிய பிரசித்தி பெற்ற வக்ரகாளியம்மனை வணங்குகின்றனர். நீண்ட நாட்களாக கல்யாணம் ஆகாதவர்கள் காளி சன்னதி எதிரில் உள்ள தீபலட்சுமி அம்மனுக்கு திருமாங்கல்ய கயிறு கட்டி எலுமிச்சம் பழ தீபம் ஏற்றுவது வழக்கம். எந்தவிதமான பிரச்சினைகள் இருந்தாலும் கோரிக்கை சீட்டு எழுதி சூலத்தில் கட்டுவதை பக்தர்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.

சிறப்பு அம்சங்கள்

இந்தியாவில் பஞ்ச முக லிங்கம் கொண்ட சிவதலம் வடக்கில் நேபாளத்திலும், தெற்கில் ஆந்திராவில் உள்ள காளஸ்திரியிலும் உள்ளது. மும்முகத்தில் காட்சி அளிப்பது அருள் சொரியும் திருவக்கரையில் மட்டுமே. இம்முகலிங்கத்திற்கு கிழக்கில் தட்புருட முகமாகவும் வடக்கே வாதேவ முகமாகவும் தெற்கே அகோர முகமாகவும் காட்சி தருகிறார். தெற்கே உள்ள அகோர முகத்தில் வாயின் இரு ஓரத்திலும் இரு கோரை பற்கள் உள்ளன.இதை பால் அபிசேகம் செய்யும் போது மட்டுமே தெளிவாக பார்க்க முடியும். எல்லாமே வக்கிரம்: கருவறைக்கும் துவஜஸ்தம்பத்திற்கும் நேராக இல்லாமல் வடபுறமாக சற்று விலகி வக்கிரமாக உள்ளது.பொதுவாக எல்லாக் கோயில்களிலும் நாம் கோபுர வாசலில் இருந்தே சுவாமியை தரிசனம் செய்யலாம். ஆனால் இந்த திருவக்கரை கோயிலிலோ இராஜகோபுரம், கொடிக்கம்பம், நந்தி, திருவக்கரையில் இருக்கும் சுவாமி முதலியன ஒரே நேர்கோட்டில் இல்லாமல் ஒன்றைவிட்டு விலகி, வக்கிர நிலையில் இருக்கிறது.எனவே இங்கு எல்லாமே வக்கிரமாக அமைந்துள்ளதை அறிய முடிகிறது. பவுர்ணமி இரவு 12 மணிக்கு – அம்மாவாசை பகல் 12 மணிக்கு ஜோதி தரிசனம் – வக்கிரகாளியம்னுக்கு ஜோதி தரிசனம் காட்டும் போது லட்சக்கணக்கான பக்தர்கள் கோயிலில் கூடுகிறார்கள். வக்ரகாளியம்மன் சன்னதியின் கோபுர மண்டபத்திற்கு மேல் சூடம் ஏற்றுவார்கள். அந்த தீபத்தை தரிசனம் காணுவது இத்தலத்தின் முக்கிய விசேசம். வக்ர காளியின் இடது பாகத்தில் ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீ சக்கரம் உள்ளது. வரதராஜ பெருமாளுக்கு பிரயோக சக்கரம் வழக்கப்படி இருக்காமல் சக்கரத்தின் அமைப்பு மாறி இருக்கும். குண்டலினி சித்தர் இங்கு ஜீவ சமாதி அடைந்துள்ளார். இங்கு அவரின் சமாதி கோயிலுக்குள்ளேயே உள்ளது. வக்ர காளியின் வலது காதில் சிசு(குழந்தை)குண்டலம் உள்ளது. வக்ர காளி இங்கு சாந்த சொரூபமாக அருள்பாலிக்கிறாள். வக்ர சனி: பொதுவாக எல்லாக் கோயில்களிலும் சனி பகவான் வாகனமான காகம் அவருக்கு வலப்புறமாக இருப்பது வழக்கம்.ஆனால் இங்கு வழக்கத்திற்கு மாறாக சனி பகவானுடைய இடது புறத்தில் அமைந்து வக்கிரமாக காட்சி தருகிறது. அந்த வக்கிர சனியை வணங்குபவர்களுக்கு துன்பம் நீங்கும், இன்பம் பொங்கும். கி.மு.756 ல் கட்டப்பட்ட கோயில் இது. அம்பாள் சந்நிதிக்கு எதிரில் மயான பூமி உள்ளது குறிப்பிடத்தக்கது.

திருவிழாக்கள்

சித்ரா பவுர்ணமி – வக்ரகாளியம்மன் வீதியுலா உற்சவம் – 1நாள் திருவிழா சித்திரை வருடபிறப்பு – சந்திர மௌலீசுவரர் தெப்ப உற்சவம் காணும் பொங்கல்,ஆடிக் கிருத்திகை, தை கிருத்திகை, தைபூசம், விநாயகர் சதுர்த்தி, விஜயதசமி, கார்த்திகை தீபம், ஆகிய விசேச நாட்களில் கோயிலில் வக்கிர காளியம்மனுக்கு விசேச அபிசேக ஆராதனைகள் நடக்கின்றன. செவ்வாய், வெள்ளி, ஞாயிறு , அஷ்டமி நவமி நாட்களில் கோயிலில் பக்தர்கள் வருகை பெருமளவில் இருக்கும்.

காலம்

1000 -2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திருவக்கரை

அருகிலுள்ள இரயில் நிலையம்

விழுப்புரம்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top