திருமோகூர் காளமேகப் பெருமாள் திருக்கோயில், மதுரை
முகவரி
அருள்மிகு காளமேகப் பெருமாள் திருக்கோயில், திருமோகூர், ஒத்தக்கடைஅஞ்சல், மதுரை – 625 107., நிர்வாகஅதிகாரி : 0452-2423227.
இறைவன்
இறைவன்: காளமேகப்பெருமாள் இறைவி: மோஹனவல்லித் தாயார்
அறிமுகம்
திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில் 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். மதுரைக்கு வடக்கே 12 கிமீ தொலைவில் யா.ஒத்தக்கடை அருகே, திருமோகூர் ஊராட்சியில் அமைந்துள்ளதுஇக்கோயிலிலுள்ள பல மண்டபங்கள் சிவகங்கையை ஆட்சிபுரிந்த மருது பாண்டியர் திருப்பணியாகும். மூலவர் காளமேகப் பெருமாளின் சந்நிதி உயரமான அதிட்டானத்தின்மீது அமைக்கப்பட்டுள்ள கட்டுமான கற்கோவிலாகும். தாயார் மோகனவல்லி எனப்படுகிறார். இக்கோவிலின் கம்பத்தடி இம்மண்டபத்திலுள்ள இராமர், சீதை, லக்ஷ்மணர், ஆஞ்சநேயர், மன்மதன், ரதி ஆகியோரின் உருவங்களைக் கொண்ட ஒற்றைக் கல்லினாலான சிற்பங்கள் சிறந்த கலைச் செல்வங்களாகும். யாளிகளின் உருவங்களைத் தாங்கிய தூண்கள் அரிய சிற்ப வேலைப்பாடுகள் மிக்கது. இம்மண்டபத்தில், சந்நிதியை நோக்கியவாறு, மருது பாண்டியர் ஆளுயரக் கற்றூண் உருவங்கள் காணப்படுகிறது.
புராண முக்கியத்துவம்
சங்ககாலத்தில் மோகூர் அரசன் பழையன். இவன் தம்பி இளம் பழையன் மாறன். செங்குட்டுவன் இவனைப் போரில் வீழ்த்தி, இவனது காவல்மரம் வேம்பை வெட்டித் தன் தலைநகர் வஞ்சிக்குக் கொண்டுசென்று, தனக்கு முரசு செய்துகொண்டான். நான்மொழிக் கோசர் இவ்வூரில் வரி தண்டினர். மோகூர் வரி தர மறுத்ததால், கோசருக்கு உதவும் பொருட்டு மோரியர் படையெடுத்து வந்தனர். பாற்கடலைக் கடைந்து எடுத்த அமுதத்தைப் பங்கிட்டுக் கொள்வதில் தேவர்கள், அசுரர்களுக்கிடையே சர்ச்சை உண்டானது. தங்களுக்கு உதவும்படி தேவர்கள் மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனர். அவர்களின் வேண்டுதலை ஏற்ற சுவாமி, மோகினி வேடத்தில் வந்தார். அசுரர்கள் அவரது அழகில் மயங்கியிருந்த வேளையில், தேவர்களுக்கு அமுதத்தைப் பரிமாறினார். இதனால் பலம் பெற்ற தேவர்கள், அசுரர்களை ஒடுக்கி வைத்தனர். பிற்காலத்தில் புலஸ்தியர் என்னும் முனிவர், மகாவிஷ்ணுவின் மோகினி வடிவத்தை தரிசிக்க வேண்டுமென விரும்பினார். சுவாமி, அவருக்கு அதே வடிவில் காட்சி தந்தார். அவரது வேண்டுகோள்படி பக்தர்களின் இதயத்தைக் கவரும் வகையில் மோகன வடிவத்துடன் இங்கே எழுந்தருளினார்.
நம்பிக்கைகள்
கண்ணன், ஆஞ்சநேயர், ஆண்டாள் முதலானவர்களுக்கும் தனித்தனி சந்நிதிகள். மூலவர் சயனித்திருக்கும் ஆதிசேஷனுக்கும் தங்ககவசம் சாத்தப்பட்டிருப்பது இங்கு விசேஷம். இந்த காளமேகப் பெருமாள் தானாம் நம்மாழ்வாருக்கு வைகுண்டம் போக வழித்துணையாய் இருந்தவர். ஆகவே இவரை மனமாற வேண்டிக் கொண்டால் நமது ஆன்மாவிற்கு கடைசி பயணத்தின் போது துணையாக வருவார் என்பது மக்களின் அசையா நம்பிக்கை.
சிறப்பு அம்சங்கள்
சக்கரத்தாழ்வார் சுதர்சனர் அம்சம் அனைத்து பெருமாள் கோவில்களிலும் சக்கரத்தாழ்வார் இருந்தாலும் இவர் இங்கு பதினாறு கைகளிலும் பதினாறு ஆயுதங்களோடு காட்சி தருகிறார். மந்திர எழுத்துக்களும் சுழலும் திருவடிகளும் காணப்படுகிறது இங்கு மட்டுமே. சக்கரத்தாழ்வார் பின்புறம் யோக நரசிம்மரோடு காட்சி தருகிறார். இந்த அமைப்பு நரசிம்ம சுதர்சனம் என்று அழைக்கப்படுகிறது. மந்திர எழுத்துக்களுடன் உள்ள சக்கரத்தாழ்வரின் பூஜிக்கப்பட்ட யந்திரம் தொழில் விருத்தியையும் எதிரிகளை வெல்லும் திறனையும் கண் திருஷ்டியை நீக்கும் வல்லமையுடையது என்பதும் ஐதீகம்.
திருவிழாக்கள்
வைகாசியில் பிரம்மோற்ஸவம், ஆனியில் சக்கரத்தாழ்வார் திருநட்சத்திரம், வைகுண்ட ஏகாதசி, பங்குனி உத்திரத்தில் திருக்கல்யாணம்.
காலம்
1000 -2000ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத் துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மதுரை
அருகிலுள்ள இரயில் நிலையம்
மதுரை
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை