Friday Jun 28, 2024

திருமாணிகுழி வாமனபுரீஸ்வரர் திருக்கோயில், கடலூர்

முகவரி

அருள்மிகு வாமனபுரீஸ்வரர் திருக்கோயில், திருமாணிக்குழி – 607 401. கடலூர் மாவட்டம். போன்: +91-4142-224 328

இறைவன்

இறைவன்: வாமனபுரீஸ்வரர், மாணிக்கவரதர், இறைவி: அம்புஜாட்சி, மாணிக்கவல்லி

அறிமுகம்

திருமாணிகுழி – திருமாணி வாமனபுரீஸ்வரர் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற தலமாகும். இது தென் ஆற்காட்டு மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது தேவாரப் பாடல் பெற்ற நடுநாட்டு தளங்களில் 17வது தளங்களில் ஒன்றாகும். இக்கோயில் திருப்பாதிரிப்புலியூர் பேருந்து நிலையத்திலிருந்து திருவந்திபுரம் வழியாக பாலூர், பண்ருட்டி செல்லும் சாலையில் திருவந்திரபுரத்திற்கு அடுத்தபடியாக சுந்தரர்பாடி என்னுமிடத்திற்கு அருகிலுள்ள சாத்தாங்குப்பம் வழிகாட்டி செல்லும் சாலையில் கெடில நதிப்பாலத்தை அடுத்து சிறிது தூரத்தில் அமைந்துள்ளது. திருமால் பிரமச்சாரியாக வந்து மாவலிபால் மூன்றடி மண்கேட்டு அவனையழித்த பழிதீர வழிபட்ட தலம் என்பது ஐதிகம்.

புராண முக்கியத்துவம்

பிரகலாதனின் பேரன் மகாபலியின் தர்மநிலையை உலகிற்கு எடுத்துக் காட்ட மகாவிஷ்ணு விரும்பினார். எனவே காசிப மகரிஷிக் கும், அதிதேவிக்கும் 12வது குழந்தையாக வாமன பிரம்மசாரியாக மகாவிஷ்ணு அவதாரம் செய்தார். மகாபலியின் தர்மசிந்தனை குறித்த கர் வத்தை அடக்க மூன்றடி மண் கேட்டார்.ஒரு அடியால் பூமியையும், ஒரு அடியால் ஆகாயத்தையும் அளந்த பெருமாள், மூன்றாவது அடி எங்கே என கேட்டார். அதற்கு மகாபலி,”” இந்த உலகை ஆளும் என் னையே அளந்து கொள்ளுங்கள்,” என விஷ்ணுவின் திருவடி முன் குனிந்தார். பக்திக்கு மெச்சிய திருமால் மகாபலியை சிரஞ்சீவிகளுள் ஒருவனாக் கினார். இப்படி மகாபலியை தர்மத்திற்காக விஷ்ணு அழித்திருந்தாலும் அதற்குரிய பழி திருமாலுக்கு ஏற்பட்டது. இந்த பழியைப்போக்க திருமால் இங்கு வழிபட்டதால் இத்தலத் திற்கு “திருமாணிக்குழி’ என பெயர் ஏற்பட்டது.

நம்பிக்கைகள்

குழந்தை வரம் வேண்டுபவர்கள் அமாவாசை தினத்தில் ஈரத்துணியுடன் அம்மனை 11முறை சுற்றி வரவேண்டும். பின் அம்மனுக்கு வெண்ணெய் நைவேத்தியம் செய்து அதை 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

சிறப்பு அம்சங்கள்

சிறப்பம்சம்: தேவர்களுக்கு ஞானத்தை புகட்டவும், அவர் களது அஞ்ஞானத்தை நீக்கவும் சதா சர்வ காலமும் பார்வதியுடன் இணைந்திருப்பதால், இங்கு இறைவனை நேரிடையாக நாம் தரிசிக்க இயலாது. கர்ப்பகிரகமே இங்கு பள்ளியறையாக இருப்பதால் தனி பள்ளியறையும் கிடையாது. சம்பந்தர் இத்தல இறைவனை பாடும் போது “உயிரனை அனைத்தையும் உய்விக்கும் உதவிநாயகன்’ என பாடுகிறான். எனவே இறைவனுக்கு “உதவிநாயகன்’, அம்மனுக்கு “உதவி நாயகி’ என்ற பெயரும் உண்டு. மகாலட்சுமி தவம் செய்த நதியாக கெடிலமும், சரஸ்வதிதேவி சுவேத நதியின் வடிவில் கெடிலத்தில் சங்கமம் ஆகும் தல தீர்த்தமாகவும் விளங்குகின்றனர். பொதுவாக அனைத்து சிவன் கோயில்களிலும் பூஜை நேரத்தின் போது சிவலிங்கத்தை நாம் பார்த்து தரிசித்து கொண்டே இருக்கலாம். ஆனால் இத்தலத்தில் இரண்டு, மூன்று விநாடிகள் மட்டுமே சிவன் தரிசனம் தந்து விட்டு திரைக்குள் மறைந்து கொள்கிறார். இறைவனும் இறைவியும் இணைந்திருப்பதால் அவர்களுக்கு காவல் புரிவதற்காக 11ருத்ரர்களில் ஒருவரான “பீமருத்ரர்’ திரைச்சீலை வடிவில் உள்ளார். எனவே அவருக்குத்தான் முதல் அர்ச்சனை, பூஜை. அதன் பின் திரை நீக்கப்பட்டு ஒரு சில வினாடிகள் உள்ளிருக்கும் சுவாமியை பார்க்க பக்தர்களுக்கு அனுமதி தரப்படுகிறது. விநாயகருக்கு மூஷிக வாகனம் எதிரில் இல்லாமல் அருகில் அமைந்துள்ளது விசேஷம். துர்க்கையின் பாதத்திற்கு கீழ் எருமை தலை கிடையாது, கையில் உள்ள கரம் திரும்பி உள்ளதுடன் கதாயுதமும் தாங்கியிருக்கிறாள். சிவனின் எதிரில் உள்ள மண்டபத்தில் நான்கு வேதங்களும் நான்கு தூண்களாக அமைந் துள்ளன. திரைக்கு பின் அம்மனும், சுவாமியும் இருப்பதால் எப்போதும் விழிப்புடன் இருக்கவேண்டி நந்தி நேர் திசையில் உள்ளது. வழக்கமான தலை சாய்த்த நிலை இல்லை. மதுரை, காஞ்சிபுரம், காசி, திருவாரூர், நாகப்பட்டினம் போன்று இங்கு அம்மனின் அம்புஜாட்சியின் ஆட்சி நடக்கிறது. அம்மனின் இரண்டு கைகளிலும் பூ. ஒன்றில் தாமரை. மற்றொன்றில் நீலோத்பவம் இருக்கிறது. பூ உள்ள அம்மன் களை தரிசிப்பதால் துன்பம் பூப்போல்ஆகி விடும் என்பது ஐதீகம். அருணகிரிநாதர் திருப்புகழில் இத்தல முருகனை புகழ்ந்து பாடியுள்ளார். கார்த்திகை மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் கோயிலுக்கு எதிரில் உள்ள மலைமீது மோட்ச தீபம் ஏற்றப்படுகிறது. பவுர்ணமி தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருகிறார்கள். விநாயகர் முதல் சண்டிகேஸ்வரர்வரை அனைவருக்கும் ஆதித்ய விமானம் உள்ளது.

திருவிழாக்கள்

மகா சிவராத்திரி, நவராத்திரி

காலம்

1000-2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

கடலூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

கடலூர்

அருகிலுள்ள விமான நிலையம்

பாண்டிச்சேரி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top