Tuesday Jul 02, 2024

திருமருகல் இரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில், நாகப்பட்டினம்

முகவரி

முகவரி:அருள்மிகு இரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில், திருமருகல்- 609 702, நாகப்பட்டினம் மாவட்டம். போன் +91 4366 270 823

இறைவன்

இறைவன்: இரத்தினகிரீஸ்வரர் இறைவி: வண்டுவர் குழலி

அறிமுகம்

திருமருகல் இரத்தினகிரீஸ்வரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 80ஆவது சிவத்தலமாகும். கோயிலின் முன்பாக குளம் உள்ளது. ராஜ கோபுரத்தை அடுத்து கொடி மர விநாயகரைக் கொண்ட கொடி மரம் உள்ளது. மூலவர் ரத்னகிரீஸ்வரர் சன்னதியின் வலது புறம் சோமாஸ்கந்தர் சன்னதி உள்ளது. மூலவர் சன்னதியின் நுழைவாயிலின் வலப்புறம் சனீஸ்வரர், உற்சவ விநாயகர், இடது புறம் செட்டிப்பெண், செட்டிப்பிள்ளை ஆகியோர் உள்ளனர். திருச்சுற்றில் செட்டிப்பெண், செட்டிப்பிள்ளை திருமண மண்டபம், பைரவர், சந்திரன், சூரியன், நவக்கிரகம், நாகர், செட்டிப்பெண், செட்டிப்பிள்ளை, சம்பந்தர், சண்டிகேஸ்வரர் சன்னதிகளும், அடுத்து நடராஜர் சன்னதியும், வண்டுவார்குழலி (ஆமோதளநாயகி) சன்னதியும் உள்ளன. அம்மன் சன்னதியின் திருச்சுற்றில் யமுனா சண்டிகேஸ்வரி சன்னதி உள்ளது. மூலவர் கோஷ்டத்தில் கணபதி, தட்சிணாமூர்த்தி, அண்ணாமலையார், பிரம்மா, துர்க்கை உள்ளனர். வெளிச்சுற்றில் சாஸ்தா, பிராம்ஹி, மாஹேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வாராகி, மாஹேந்திரி, சாமுண்டி, சுரம் துர்த்த விநாயகர், சந்தான விநாயகர் ஆகியோர் உள்ளனர். மருதவுடையார்-சவுந்தரநாயகி சன்னதியும் இச்சுற்றில் உள்ளது. அதற்கு முன் நந்தி பலிபீடத்துடன், யாகசாலை, பராசரர் பூசித்த லிங்கம், காசி விசுவநாதர் உள்ளிட்டோர் உள்ளனர். 11 செப்டம்பர் 1974இல் குடமுழுக்கு ஆனதற்கான கல்வெட்டு உள்ளது. தேவார பாடல் காவிரி தென்கரையில் இது 80 வது தலம்.

புராண முக்கியத்துவம்

இறைவன் திருநாமம் மாணிக்க வண்ணர் என்பது.சுவாமி சுயம்பு மூர்த்தி. சுயம்பு மூர்த்தி என்பது உளி பாயாது ஆகிய உரு என்பதாம். மாணிக்கவண்ணரது பாணத்தை நோக்கின் உண்மை புலப்படும்.சிவலிங்கத்தின் பீடங்கள் துரமானவை.அதிலும் சிறப்பாக சுவாமி தோள்பக்கத்தில் பாணத்தின் அடிப்பாகத்தில் ஒரு வெட்டு காணப்பெறும். அது குசசேது மகாராஜா என்பர் இங்கு வந்தபோது இத்தலம் காடாக இருந்ததாம். காடு வெட்டி விற்கும் போது மண்வெட்டி திருவுருவில் தாக்கியதாகவும் ரத்தம் பெருகியதாகவும் அரசனறிந்து சுற்றிலும் வெட்டிப்பார்த்து இறையுருவைக் கண்டு ஏங்கித் தெளிந்து ஆலயம் எடுப்பித்தான் என்றும் வரலாறு கேட்கப் பெறுகின்றது. இறைவன் திருநாமம் வடமொழியில் ரத்தினகிரீசுவரர் என்றுவழங்குகிறது. சிவலிங்கத்திரு வுருவில் கவர்ச்சியானவைகளில் இதுவும் ஒன்று.

நம்பிக்கைகள்

இத்தலத்தில் வழிபடுவோரை பாம்பு தீண்டுவதில்லை என்பதால் பூச்சி, விஷ ஜந்துக்களால் பாதிக்கப்பட்டோர் அல்லது பயம் உள்ளவர்கள் இத்தலத்தில் வழிபட்டு பயம் விலகி நன்மை கிடைக்கப் பெறுகிறார்கள். மேலும் இங்குள்ள ஜூரம் தீர்த்த விநாயகரை வழிபட்டு தீராத காய்ச்சல் மற்றும் உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டவர்கள் வழிபட்டு பிரச்சினைகள் நீங்கப்பெறுகிறார்கள். லட்சுமி தீர்த்தத்தில் வரலட்சுமி நோன்பு நாளில் மூழ்கி நோன்பு இருந்து மறுநாளும் மூழ்கி மாணிக்கவண்ணரைத் தரிசித்துப் பாரனை செய்தால் கடன் தொல்லை நீங்கும். செல்வம் பெருகும் என்று இத்தலத்து பக்தர்கள் கூறுகின்றனர். லட்சுமி தீர்த்தத்தில் நீராடி வழிபட்டால் பிரிந்திருந்த தம்பதியர் மீண்டும் சேர்கின்றனர். இத்தலத்து மூலவர் மாணிக்கவண்ணரை வணங்குவோர்களுக்கு துயரம் நீங்கி மனஅமைதி கிடைக்கும். மேலும் திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் ஆகியவற்றுக்காகவும் இத்தலத்தில் பிரார்த்தனை செய்கின்றனர். வேலை வாய்ப்பு,தொழில் விருத்தி ,உத்தியோக உயர்வு, ஆகியவற்றுக்காகவும் இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.

சிறப்பு அம்சங்கள்

இங்கு தலவிருட்சம் வாழை. கோயிலின் உட்பிரகாரத்தில் வடக்கு மதில் ஓரமாக தல விருட்சம் இருக்கிறது. வடமொழியில் இத்தலம் கதலிவனஷேத்திரம் என்று கூறப்படுகிறது.சுந்தரர் வாழை காய்க்கும் மருகல் நாட்டு மருகலே என்று கூறியுள்ளார். இவ்வாழை எவ்வித செய்நேர்த்தியும் இன்றித் தானாகவே பயிராகிறது.இதன் பழம் தனித்தொரு இன்சுவை உடையது. இதனை கோயிலுக்கு வெளியில் பெயர்த்து நட்டால் பயிராவதில்லை. வெளிப்பிரகாரத்தில் வன்னிமரம் ஒன்று இருக்கிறது. அது இத்தல விசேசத்திற்குச் சிறந்த சான்றாக இருக்கிறது. லட்சுமி தீர்த்தம் : மும்மூர்த்திகளில் யார் சிறந்தவர் என்று முனிவர்கள் கூட்டத்தில் விவாதம் வர பிருகுமுனிவர் விபரம் தெரிந்து வருவதற்கு பிரம்மா சிவபெருமான் ஆகியோரைக் காணச் சென்றபோது முனிவருக்கு தகுந்த மரியாதை இல்லை என வருந்தி வைகுந்தம் சென்றார். திருமால் திருமகளோடு இருந்தார். பிருகு முனிவர் இரண்டு முகூர்த்த நேரம் நின்று கொண்டிருந்ததினால் சினமுற்று திருமால் மார்பில் உதைத்தார்.திருமகள் உறைவிடமாதலால் திருமகள் திருமாலிடம் கோபம் கொண்டு உம்மை விட்டு பிரிந்து செல்கிறேன் நான் இருக்கும் இடத்தில் உம்மை வலிய வரச்செய்வேன் என்று கூறி பல தலங்களைக் கண்டு அதனை கடந்து காவிரிக்கு தென்கரை யோரமாக இத்தலத்தில் சிறுகுளம் வெட்டி தவம் செய்து மாணிக்கவண்ணரை வழிபட்டு மௌனவிரதம் இருக்கிறாள். இதன் பலனாக திருமால், திருமகள் முன் மருகலில் தோன்றினார்.திருமகள் மனம் மகிழ்ந்து இது ஒரு சித்தி தரும் தலமாகட்டும் என திருமாலிடம் . அதுபடியே சாபவிமோசனம் பெற்றதினாலும் லட்சுமி தீர்த்தம் என்ற பெயருடன் இன்றும் விளங்குகிறது. திருமணத்திற்கு சாட்சியாக வந்த இறைவன் : வணிகன் ஒருவனும் வணிகப்பெண் ஒருத்தியும் கல்யாணம் செய்ய மதுரைக்கு போகும்போது இந்த ஊருக்கு வருகிறார்கள். இரவாகி விடுகிறது.உடனே தர்ப்பையை போட்டு இத்தலத்தருகே உறங்குகின்றனர். அப்போது வணிகனை பாம்பு தீண்டி விடுவதால் இறந்து விடுகிறது.உடன் வந்தவள் சத்தம் போட்டு அழும் குரல் கேட்டு அவ்வழியே வந்த சம்பந்தர் என்ன என்று வினவ இவள் விபரம் கூறுகிறாள்.சம்பந்தர் பதிகம் பாடி விஷத்தை போக்குகிறார். சுவாமியே வன்னிமரமாகவும், கிணறாகவும் வாழைமரமாகவும் இருந்து திருமணத்திற்காக சாட்சியாக செய்து வைக்கிறார்.ஆனால் மதுரையில் இருந்த அந்த வணிகனின் தாய் தந்தையார் இதை நம்ப மறுக்கவே அந்த வணிகன் சுவாமியை நினைத்து தியானிக்க சுவாமியும் மதுரையில் வன்னி, கிணறு வடிவில் காட்சி தந்தார்.மதுரையில் நடந்த சிவபெருமானின் இந்த திருவிளையாடலுக்கு காரணமாக அமைந்த தலம் இது. விஷம் தீண்டி உயிர் நீத்த வணிகனை திருஞானசம்பந்தர் விஷம் தீர்த்து பதிகம் பாடி அவனை உயிர்பெறச் செய்தது இத்தலத்தில்தான். பார்வதி சமேத சிவபெருமான் காட்சி கொடுத்து வணிகனுக்கு திருமணம் செய்விக்கப் பெற்ற திருத்தலம். மகாலட்சுமிக்கு பிருகு முனிவர் சாபமிட்டதால் மகாலட்சுமி இத்திருத்தலத்தில் புஷ்கரணியில் நீராடி வரலட்சுமி நோன்பிருந்து சிவபெருமான் காட்சி கொடுத்து விமோசனம் பெற்ற தலம். இத்தலத்தை லட்சுமி தலம் என்று அழைக்கப்படுமளவுக்கு சிறப்பு வாய்ந்த தலம். தமிழ்நாட்டிலே ஒரு சிவதலத்தில் இந்த அளவு மகாலட்சுமிக்கு சிறப்பு வழிபாடு அமைந்த கோயில் வேறு எதுவும் இல்லை. அருணகிரிநாதரால் பாடல் பெற்ற தலம். சீராளன் கல்வி பயின்ற இடம் திருமருகல் சனீசுவர பகவானுக்கு தனி சன்னதி. சுவாமி சன்னதிக்கு போகும் வாயிற்படியில் வடபுறம் தனி சன்னதியாக உள்ளார். இதுபோல வேறு எந்த தலத்திலும் சனிபகவானை காண முடியாது. அம்பர் முதல் ஆனைக்கா ஈறாக எழுபது கோச்செங்கட் சோழனால் எழுப்பிய கோயில். அப்பர், ஞானசம்பந்தர் ஆகியோரால் தேவராப்பாடல் பெற்ற சிவதலம். கி.பி. ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சிவ தலம்.

திருவிழாக்கள்

சித்திரை மாதம் – சித்திரைப் பருவ உற்சவம் – 10 நாட்கள் – பிரம்மோற்சவம் – தினமும் காலை மாலை இரண்டு வேளைகளில் சுவாமி வீதியுலா -திருவிழாவின் ஏழாம் நாள் செட்டிப்பெண் கல்யாணம் என்ற விழா, அன்று வசந்தன் மாலை செட்டிப் பிள்ளைக்கும் செட்டிப் பெண்ணுக்கும் திருமணம் நடைபெறும். -பத்தாம் நாள் தீர்த்தவாரி – இத்தலத்தில் நடைபெறும் சிறப்பான விழா இது ஆகும். தவிர ஆவணி மாதத்தில் வரலட்சுமி நோன்பன்று கமல வாகனத்தில் இலட்சுமியும் வரதராஜ பெருமாளும் எழுந்தருளி இலக்குமி தீர்த்தத்தில் தீர்த்தம் கொடுத்தருள்வர். இவ்விழாவும் இங்கு சிறப்பாக கொண்டாடப் படுகிறது. கந்த சஷ்டி, விசாகம், ஆனித்திருமஞ்சனம் ஆகியவை இத்தலத்தில் விசேசம். ஒவ்வொரு தமிழ் மாதப்பிறப்பும் இத்தலம் மிகவும் விசேசமாக இருக்கும். மாதாந்திர பிரதோச நாட்களின் போது பக்தர்கள் கூட்டம் கோயிலில் பெருமளவில் இருக்கும். வருடத்தின் சிறப்பு நாட்களான தீபாவளி பொங்கல்,தமிழ் ஆங்கில புத்தாண்டு தினங்களின்போதும் கோயிலில் சிறப்பு அபிசேக ஆராதனைகளும் நடக்கும்.

காலம்

1000-2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திருமருகல்

அருகிலுள்ள இரயில் நிலையம்

நாகப்பட்டினம்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top