Friday Dec 27, 2024

திருமணிமாடக்கோயில் நாராயணப்பெருமாள் திருக்கோயில், நாகப்பட்டினம்

முகவரி

அருள்மிகு நாராயணப்பெருமாள் திருக்கோயில், திருமணிமாடக்கோயில், திருநாங்கூர் – 609 106. நாகப்பட்டினம் மாவட்டம். போன்: +91- 4364 – 256 424, 275 689, 94439 85843

இறைவன்

இறைவன்: நாராயணன் இறைவி: புண்ட்ரி காவலி தயார்

அறிமுகம்

திருமணிமாடக் கோயில் அல்லது மணிமாடக் கோயில் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் திருநாங்கூரில் அமைந்துள்ளது. அழகிய உப்பரிகைகளுடன் கூடிய மாடங்களைக் கொண்ட வீடுகள் நிறைந்து இங்கு இறைவன் எழுந்தருளியிருக்கின்ற காரணத்தால் திருமணிமாடக் கோயில் எனப்பெயர் வந்ததாகக் கூறுவர். பத்ரிகாசிரமத்தில் இருக்கும் நாராயணனே அதேபோன்ற அமர்ந்த கோலத்தில் இருப்பதாக நம்பிக்கையாகும். திருநாங்கூர் பதினொரு திருப்பதிகளின் இறைவர்களும் இங்கு எழுந்தருளும் திருநாங்கூர் கருடசேவைத் திருவிழா இந்தக் கோயிலின் முன்புதான் நடைபெறுகிறது. இராமானுஜருக்கு நாராயண மந்திரத்தை உபதேசித்த திருக்கோட்டியூர் நம்பி இங்கு வந்து சென்றுள்ளார். இக்கோவில் மாடக்கோவில் என்பதற்கேற்ப மிகச்சிறந்த வடிவமைப்புடன் பெரிய அளவில் கட்டப்பட்டுள்ளது. திருமங்கையாழ்வாரால் மட்டும் 12 பாசுரங்களில் இத்தலம் பாடல் பெற்றுள்ளது.

புராண முக்கியத்துவம்

பார்வதியின் தந்தையாகிய தட்சன், சிவனை அழைக்காமல் யாகம் செய்தான். அந்த யாகத்திற்கு செல்ல வேண்டாம் என பார்வதியை தடுத்தார் சிவன். ஆனாலும் நியாயம் கேட்பதற்காக யாகத்திற்கு சென்றுவிட்டாள் பார்வதி. கோபம் கொண்ட சிவன் ருத்ர தாண்டவம் ஆடினார். அப்போது சிவனது திருச்சடை முடி தரையில் பட்ட இடங்களில் எல்லாம் சிவ வடிவங்கள் தோன்றின. இவ்வாறு 11 சிவ வடிவங்கள் தோன்றி அனைவரும் தாண்டவம் ஆடினர். இதனால் உலக உயிர்கள் கலக்கமடைந்தன. அச்சம் கொண்ட மகரிஷிகள், தேவர்கள் சிவனை சாந்தப்படுத்தும்படி மகாவிஷ்ணுவிடம் வேண்டினர். அவர் பத்ரி நாராயணராக 11 வடிவங்கள் எடுத்து சிவன் முன்பு வந்தார். நாராயணரைக் கண்ட சிவன் தாண்டவத்தை நிறுத்தினார். பின் அவர் 11 சிவ வடிவங்களையும் ஒன்றாக ஐக்கியப்படுத்தினார். இந்நிகழ்ச்சி இத்தலத்தில் நடந்தது என தலவரலாறு கூறுகிறது. இதன் அடிப்படையில் இங்கு 11 பெருமாள் கோயில்களும், 11 சிவாலயங்களும் இருக்கிறது. 11 பெருமாள்களுக்கும் பத்ரி நாராயணரே பிரதானமானவராக இருக்கிறார். இவர் ஒருவரை தரிசனம் செய்தாலே அனைவரையும் தரிசனம் செய்த பலன்கள் கிடைக்கும் என்கிறார்கள்.

நம்பிக்கைகள்

இங்கு வேண்டிக்கொண்டால் கோபம் குறையும், தோஷங்கள் விலகும், ராஜயோக பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

சிறப்பு அம்சங்கள்

பத்ரிநாராயணர் கருவறையில் அமர்ந்த கோலத்தில் தாமரை மலர் மீது கால் வைத்தபடி காட்சி தருகிறார். வருடத்தின் அனைத்து நாட்களிலும் காலை வேளையில் இவர் மீது சூரிய ஒளி விழுகிறது. இது மிகவும் அபூர்வமானதாகும். இதனால் சுவாமி எப்போதும் நந்தா (அணையாத) விளக்கு போல பிரகாசமாக இருந்து மக்களின் அறியாமை எனும் இருளைப் போக்கி ஒளியைக் கொடுக்கிறார். எனவே சுவாமியை, திருமங்கையாழ்வார் “நந்தா விளக்கு’ என்று மங்களாசாசனம் செய்துள்ளார். காலை நேரத்தில் இவரை வழிபட்டால் சிறப்பான பலன்கள் கிடைக்கும் என்கிறார்கள். இந்தக் கோயிலில் கோபுரத்தில் மூன்று துளைகள் இருக்கின்றன. பிரணவ விமானம்: சிவனை சாந்தப்படுத்த பத்ரியில் இருக்கும் நாராயணரே நான்கு வேதங்களை குதிரையாக்கி, பிரம்மாவை தேரோட்டியாக கொண்டு இங்கு வந்தார். இதை உணர்த்தும் விதமாக இக்கோயில் தேர் அமைப்பிலேயே இருக்கிறது. கருவறை மேலுள்ள பிரணவ விமானம் “ஓம்’ எனும் வடிவத்தில், தேரின் மேல் பகுதி போலவே அமைக்கப்பட்டிருக்கிறது. அதில் உள்ள கலசகும்பங்கள் ராஜகோபுரத்தை நோக்கி இருக்கின்றன. சுவாமியின் பீடத்திற்கு கீழே பிரம்மா இருக்கிறார்.சுவாமிக்கு அபிஷேகம் கிடையாது, தைலக்காப்பு மட்டுமே சாத்தப்படுகிறது. அருகில் பிரயோக சக்கரத்துடன் நின்ற கோலத்தில் இருக்கும் உற்சவரை “நரநாராயணர்’ எனவும், அமர்ந்த கோலத்தில் உள்ள உற்சவர் “அளத்தற்கரியான்’ எனவும் அழைக்கின்றனர். ஒரே கருவறையில் மூன்று கோலங்களில் பெருமாள்கள் இருப்பது விசேஷம். கருடசேவை: நாராயணர் இத்தலத்திற்கு தன் வாகனமான கருடன் மீது வராமல் தேரில் ஏறி வந்தார். எனவே, கருடன் சுவாமியை சுமக்க வாய்ப்பு தரும்படி அவரது பாதம் பணிந்து வேண்டினார். இதனை உணர்த்தும் விதமாக சுவாமியின் திருப்பாதத்திற்கு நேராக இருக்க வேண்டிய கருடன் இங்கு கொடிமரத்திற்கு அருகில் அமர்ந்த கோலத்தில் சுவாமியின் பாதத்திற்கும் கீழே இருக்கிறார். இங்கு தை அமாவாசைக்கு மறுநாளில் கருடசேவை சிறப்பாக நடக்கிறது. இவ்விழாவில் 11 திவ்ய தேசங்களில் இருக்கும் அனைத்து சுவாமிகளும் இங்கு 11 கருடன்கள் மீது எழுந்தருளுகின்றனர். கருடனின் வேண்டுதலுக்காக பெருமாள் 11 மூர்த்திகளாக இருந்து கருடசேவை சாதிப்பதாக சொல்கிறார்கள். சிறப்பம்சம்: வடக்கே பத்ரிகாசிரமத்தில் “ஓம் நமோ நாராயணாய’ எனும் திருமந்திரத்திற்கு விளக்கம் தந்த நாராயணனே இங்கு அருளுகிறார். இக்கோயில் மாடம் போன்ற அமைப்பில் இருப்பதால் “திருமணிமாடக்கோயில்’ என்றே அழைக்கப்படுகிறது. தாயார் புண்டரீக வல்லி பிரகாரத்தில் தனிச்சன்னதியில் இருக்கிறார். திருமங்கையாழ்வார் இவரையும் சேர்த்து மங்களாசாசனம் செய்துள்ளார். நாராயணர் சாந்தப்படுத்திய சிவன், “மதங்கீஸ்வரர் என்ற பெயரில் எதிரே தனிக்கோயிலில் சுவாமியை பார்த்தபடியும் இருக்கிறார்.

திருவிழாக்கள்

ஒவ்வொரு வருடமும் தைமாதம் அமாவாசை மற்றும் மறுநாள் சித்திரையில் 10 நாட்கள் பிரம்மோற்ஸவம், தை மாதத்தில் கருடசேவை உற்சவம்.

காலம்

1000 -2000ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திருமணிமாடக்கோயில்

அருகிலுள்ள இரயில் நிலையம்

சீர்காழி

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top