Friday Jun 28, 2024

திருப்புட்குழி விஜயராகவப் பெருமாள் கோயில், காஞ்சிபுரம்

முகவரி

அருள்மிகு விஜயராகவப் பெருமாள் கோயில், திருப்புட்குழி- 631 502 காஞ்சிபுரம் மாவட்டம் போன் +91- 44-2724 6501.

இறைவன்

இறைவன்: விஜயராகவப்பெருமாள் இறைவி: மரகதவல்லி

அறிமுகம்

திருப்புட்குழி என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் தமிழகத்தில் காஞ்சிபுரத்தில் பாலு செட்டி சத்திரம் என்ற ஊரிலிருந்து தெற்கே செல்லும் சென்னை – வேலூர் சாலையில் அமைந்துள்ளது. இராமாயணத்தில் ஜடாயு என்ற பறவைக்கு மோட்சமளித்து அதன் இறுதிச் சடங்குகளை இங்கு செய்ததால் திருப்புட்குழி (புள் (பறவை)+குழி) ஆனது என இதன் தலவரலாறு தெரிவிக்கின்றது. இதே தலவரலாறே புள்ளபூதங்குடி வல்வில் ராமர் கோயில்க்கும் கூறப்பட்டுள்ளது.நான்கு தோள்களுடன் கிழக்குநோக்கி வீற்றிருக்கும் திருக்கோலத்தில் இறைவன் விஜயராகவப் பெருமாள் என அழைக்கப்படுகிறார். இறைவி மரகதவல்லி. இவருக்குத் தனிக்கோவில் அமைக்கப்பட்டுள்ளது. இத்தலத் தீர்த்தம் ஜடாயு தீர்த்தம். விமானம் விஜயகோடி விமானம் என்ற அமைப்பைச் சேர்ந்தது.

புராண முக்கியத்துவம்

ராவணன் சீதையை சிறை எடுத்து செல்லும் வழியில் பறவைகளின் அரசனாகிய ஜடாயு சீதையை மீட்க ராவணனுடன் போரிட்டது. அவனால் வெட்டப்பட்டு மரணத்தருவாயில் இருந்தது. சீதையை தேடி அவ்வழியே வந்த ராமலட்சுமணரிடம் சீதையை ராவணன் கடத்தி சென்ற விஷயத்தை தெரிவித்தது. மரணத்தை எதிர் நோக்கி இருக்கும் தனக்கு ராமனே ஈமக்கிரியைகள் செய்ய வேண்டும் எனவும், ஸ்ரீதேவி பூதேவி சமேதராக காட்சி தந்து அருள வேண்டும் எனவும் வேண்டியபடி உயிர்விட்டது. அதன்படி ஜடாயுவை தன் வலதுபக்கம் வைத்து தீ மூட்டி ஈமக்கிரியைகளை செய்தார். இதனால் ஏற்பட்ட வெப்பம் தாளாமல் வலப்புறம் இருந்த ஸ்ரீதேவி தாயார் இடப்புறமும், இடப்புறம் இருந்த பூதேவித்தாயார் வலப்புறமும் மாறி அருள்பாலிப்பதாக புராணங்கள் கூறுகிறது. எனவே தான் இங்கு மட்டும் தாயார் சன்னதி பெருமாளுக்கு இடது புறமும், ஆண்டாள் சன்னதி பெருமாளுக்கு வலதுபுறமும் அமைந்துள்ளது குறிப்படத்தக்கது. ஜடாயுவின் வேண்டுகோளின் படி ராமர், தன் அம்பினால் உண்டாக்கப்பட்ட தீர்த்தத்தில் ஜடாயுவுக்கு ஈமக்கிரியை செய்தார். எனவே இங்கு தீர்த்தம் ஜடாயு புஷ்கரிணி என அழைக்கப்படுகிறது. பெயர்க்காரணம்: திரு என்றால் மரியாதை. புள் என்றால் ஜடாயு. குழி என்றால் ஈமக்கிரியை செய்தல். ராமர் ஜடாயுவிற்கு இத்தலத்தில் ஈமக்கிரியை செய்ததால் இத்தலம் திருப்புட்குழி ஆனது.இங்குள்ள தாயார் வறுத்தபயிறை முளைக்க வைக்கும் மரகதவல்லித்தாயார் என அழைக்கப்படுகிறார். குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் இங்குள்ள ஜடாயு தீர்த்தத்தில் நீராடி மடப்பள்ளியில் வறுத்து, நனைத்த பயிறை பெண்கள் தங்களது மடியில் கட்டிக்கொண்டு இரவில் உறங்க வேண்டும். விடிந்தவுடன் அந்த பயிறு முளைத்திருந்தால் குழந்தை பாக்கியம் கட்டாயம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. ராமானுஜரின் குருவான யாதவப்பரகாசர் இங்கு தான் வசித்தார். இத்தலத்தில் அசையும் உறுப்புகளைக் கொண்ட கல்குதிரை வாகனம் இருக்கிறது. சிற்பக்கலையில் இது ஒரு அதிசயமாகும். உண்மையான குதிரை போலவே அசையும் உறுப்புக்களைக் கொண்டது இந்த கல்குதிரை. இதை செய்த சிற்பி இதுமாதிரி இனி யாருக்கும் செய்து கொடுப்பதில்லை என்று உறுதியோடு இருந்து உயிர் விட்டாராம். இவரது உறுதிக்கும் பக்திக்கும் பாராட்டு தெரிவித்து பெருமாள், திருவிழாவின் 8ம் நாளன்று அவனது பெயர் கொண்ட வீதிக்கு எழுந்தருளுகிறார்.

நம்பிக்கைகள்

ராமபிரானே இங்கு ஈமக்கிரியைகள் செய்துள்ளதால், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்பவர்கள் அமாவாசையன்று இத்தலத்தில் செய்தால் இரட்டிப்பு பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை. குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் பிரார்த்தனை செய்யும் தலம். முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் சிறந்த தலங்களில் இதுவும் ஒன்று.

சிறப்பு அம்சங்கள்

மூலவர் தன் தொடையின் மீது ஜடாயுவை வைத்துக்கொண்டு அருள்பாலிக்கிறார். பெருமாள் திருவீதி புறப்படும் போதெல்லாம் ஜடாயுவுக்கும் சகல மரியாதை உண்டு. ஜடாயுவுக்கு ஈமக்கிரியை செய்த தலமாதலால் அதற்கு மரியாதை செய்யும் விதத்தில் கொடிமரமும், பலி பீடமும் கோயிலுக்கு வெளியில் உள்ளது.பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 58 வது திவ்ய தேசம்.

திருவிழாக்கள்

தை அமாவாசையில் தெப்ப உற்சவம், மாசியில் பிரம்மோற்ஸவம், ஆவணியில் பவித்ர உற்சவம், நவராத்திரி. திருக்கார்த்திகை.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

காஞ்சிபுரம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

காஞ்சிபுரம்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top