Thursday Dec 26, 2024

திருப்பதி ஸ்ரீ கபிலேஸ்வரர் (கபில தீர்த்தம்) திருக்கோயில், ஆந்திரப்பிரதேசம்

முகவரி

திருப்பதி ஸ்ரீ கபிலேஸ்வரர் (கபில தீர்த்தம்) திருக்கோயில், திருப்பதி, சித்தூர் மாவட்டம், ஆந்திரப்பிரதேசம் – 517504

இறைவன்

இறைவன்: ஸ்ரீ கபிலேஸ்வரர் இறைவி: காமாட்சி அம்மன்

அறிமுகம்

கபில தீர்த்தம் என்பது புகழ்பெற்ற சிவன் கோயில் மற்றும் தீர்த்தம் ஆகும். இது இந்தியாவின் ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் திருப்பதியில் அமைந்துள்ளது. திருப்பதியில் சிவபெருமானுக்கு என்று உள்ள ஒரே கோவிலாக ‘ஸ்ரீ கபிலேஸ்வரர் ஆலயம் உள்ளது. இந்த கோயிலில் உள்ள சிவன் திரு உருவச்சிலை கபிலா முனியால் நிறுவப்பட்டதாக நம்பப்படுகிறது. எனவே இங்குள்ள சிவன் கபிலேஸ்வரர் என்று குறிப்பிடப்படுகிறார். சேசாசசலம் மலையின் ஒரு பகுதியாக இருக்கும் திருமலை மலைகளின் அடிவாரத்தில் செங்குத்தான மற்றும் செங்குத்து முகங்களில் ஒன்றில் மலைக் குகை ஒன்றின் நுழைவாயிலில் இந்த கோயில் அமைந்துள்ளது. இங்கு மலை ஓடையின் நீர் நேரடியாக “கபில தீர்த்தம்” என்று அழைக்கப்படும் கோயில் தெப்பக்குளத்தில் விழுகிறது. பெரிய கல்லினால் ஆன “நந்தி” கோயிலின் நுழைவாயிலில் அமர்ந்த நிலையில் பக்தர்களுக்கும் வழிப்போக்கர்களுக்கும் அருள் பாலிக்கின்றது. தற்போது இந்த கோயில் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்தின் கீழ் உள்ளது.

புராண முக்கியத்துவம்

இந்தக் கோயில் புராணத்தின் படி, கபிலமுனி இந்த இடத்தில் சிவனை வேண்டி தவம் செய்ததாகவும், முனியின் பக்தியால் சிவனும் பார்வதியும் காட்சி தந்தனர். இந்த கோயிலில் உள்ள இலிங்கம் சுயமாகத் தோன்றிய சுயம்புலிங்கம் என்று நம்பப்படுகிறது. கபிலா முனி புஷ்கரிணியில் (தீர்த்தம்) உள்ள பிலத்திலிருந்து (குழி) பூமியில் அவதரித்ததாக நம்பப்படுகிறது. இச்சிவ லிங்கம் பாதாள லோகத்தில் கபிலமகரிஷியால் பூசிக்கப்பட்டதால் கபிலேஸ்வரர் என அழைக்கப்படுகிறார். காமதேனுவின் க்ஷீரத்தால் அபிஷேகிக்கப்பட்ட இந்த லிங்கம் பாதாளத்திலிருந்து பூமி புக வெளிவந்த பிலத்துவாரம் கபிலதீர்தமாகியது. கிரேதாயுகத்தில் கபிலர் பூஜித்ததால் கபிலேச்வரர். திரேதா யுகத்தில் அக்னி பூஜித்ததால் ஆக்னேயம் என பெயர் பெற்றது. துவாபரா யுகத்தில் சுதர்சனா ஆகவும் கலியுகத்தில் கபில பசுவால் பூசிக்கப்பட்டதால் கபிலேஸ்வரர். காமாட்சியம்மன், விநாயகர், குமாரசாமி (முருகன்), தட்சிணாமூர்த்தி ஆகியோருக்கும் இக்கோயிலில் சந்நிதிகள் உண்டு. கபிலா என்றும் பசுவிற்கு ஒரு பெயர் உண்டு. 13 ஆம் நூற்றாண்டு முதல் 16 ஆம் நூற்றாண்டு வரை விஜயநகர மன்னர்கள் கோயிலைச் சிறப்பாக நிர்வகித்து வந்துள்ளனர். இவர்களில் குறிப்பிடத்தக்கவர்களாகச் சாளுவ நரசிம்ம தேவ ராயன், கிருஷ்ணதேவராயன், மற்றும் பிற்கால ஆட்சியாளர்களான வெங்கடபதி ராயா, மற்றும் அலியா ராமராய, ஸ்ரீ கிருஷ்ணா தேவாராயாவின் மருமகன் உள்ளனர்

நம்பிக்கைகள்

பிதுர் வழிபாட்டுக்கு உகந்ததாக கபிலதீர்த்தம் கருதப்படுகிறது.

சிறப்பு அம்சங்கள்

கார்த்திகை மாத முக்கோடி அன்று உச்சிவேலையில் இந்த தீர்த்தத்தில் நீராடினால் விஷ்ணு பதம் அடையலாம் என்கிறது வாமண புராணம். பவிஷ்யோத்ர புராணமோ வெங்கடேசன் வகுலமாலிகையை பத்மாவதியை திருமணம் செய்ய தூதுவிடும் போது காரியம் சித்தியாக இக்கபில தீர்த்தத்தில் நீராடி பின் செல்ல சொன்னார் என்கிறது புராணம். கபிலதீர்த்தத்தை வராக வாமண புராணங்கள் புகழுகின்றன. இதற்கு “ஆழ்வார் தீர்த்தம் என்றும் பெயர் உண்டு. மாதவன் என்னும் அந்தணன் பெண்பித்தனாய் அலைந்து நோய்வாய்ப்பட்டான். திருமலைக்கு சென்றால் தீர்வு கிடைக்கும் என்று எண்ணி, இங்கு வந்தான். கபில தீர்த்தத்தில் நீராடி பிண்டதானம் செய்தான். நோய் தீர்ந்து சுகம் பெற்றான். திருமலைக்கு ஏறி பெருமாளைத் தரிசித்து மோட்சம் அடைந்தான். 13-16ம் நூற்றாண்டுகளில் விஜய நகர அரசர்களான சாளுவ நரசிம்ம தேவராயர் மற்றும் கிருஷ்ண தேவராயர் ஆகியோரால் பரிபாலிக்கப் பட்டு வந்த கோவிலாகும்.

திருவிழாக்கள்

இக்கோவிலில் அனைத்து சைவ சமய முக்கிய திருவிழாக்களும் கொண்டாடப்படுகிறது. இதில் முக்கியமானவை மகா சிவராத்திரி, திருக் கார்த்திகை தீபம், விநாயகர் சதுர்த்தி, ஆடிக்கிருத்திகை ஆகும். கபிலேசுவர சுவாமியின் பிரம்மோத்சவம் பிப்ரவரி மாதத்தில் கொண்டாடும் கோயிலின் முக்கியத் திருவிழாவாகும். இது ஒன்பது நாள் நடைபெறும் நிகழ்வாகும். திருவிழாவின் போது சிவன் மற்றும் பார்வதி ஊர்வலம் அம்சா வாகனத்தில் தொடங்கி திரிசூல ஸ்தானத்துடன் (சிவனின் திரிசூலம் தீர்த்தமாடல்) முடிவடையும்.

காலம்

13 ஆம் நூற்றாண்டு

நிர்வகிக்கப்படுகிறது

திருமலை திருப்பதி தேவஸ்தானம்

அருகிலுள்ள பேருந்து நிலையம்

கபிலதீர்த்தம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருப்பதி

அருகிலுள்ள விமான நிலையம்

திருப்பதி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top