Thursday Nov 21, 2024

திருப்பதிசாரம் திருவாழ்மார்பன் திருக்கோயில், கன்னியாகுமரி

முகவரி

அருள்மிகு திருவாழ்மார்பன் திருக்கோயில், திருப்பதி சாரம்- 629 901 நாகர் கோவில் கன்னியாகுமரி மாவட்டம்

இறைவன்

இறைவன்: திருக்குறளப்பன், திருவாழ்மார்பன் இறைவி: கமல வல்லி தாயார்

அறிமுகம்

திருவண்பரிசாரம் அல்லது திருப்பதிசாரம் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். நம்மாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் நாகர்கோவிலிலிருந்து திருநெல்வேலி செல்லும் வழியில் சுமார் 2 மைல் தூரத்தில் உள்ளது. இத்தலத்தின் இறைவன் ஏழு முனிவர்களால் சூழப்பட்டு காட்சி தருகிறார். இலக்குமிதேவி ஆனந்தமடைந்து திருமாலின் திருமார்பில் நித்திய வாசம் செய்ததால் இத்தலத்தில் திருமாள் திருவாழ்மார்பன் என்றழைக்கப்படுகிறார் என்பது ஐதீகம். திருவாகிய இலக்குமி பதியாகிய திருமாலை சார்ந்து இந்த ஊரில் தங்கியதால் இவ்வூர் ‘திருப்பதிசாரம்’ என அழைக்கப்படுகிறது.[1] இதனால் இக்கோவிலில் இறைவிக்குத் தனிக் கோயில் இல்லை. இங்கு கருவறையில் திருவாழ்மார்பன் ஏழு அடி உயரத்தில் நான்கு கரங்களுடன் சங்குசக்கர தாரியாக வலது காலை மடக்கியும் இடதுகாலை தொங்க விட்டும் அமர்ந்த கோலத்தில் கிழக்கு நோக்கி கழுத்தில் லட்சுமி உருவம் பொறிக்கப்பட்ட பதக்கத்தடன் காட்சியளிக்கிறார். இத்தலத்தின் மூலவர் கடுகு, சர்க்கரை மற்றும் மலைதேசத்து மூலிகைகளால் செய்யப்பட்டுள்ளதால் (சூடிப்புனையப் பட்டுள்ளதால்) இவருக்கு திருமஞ்சனம் (அபிஷேகம்) கிடையாது. இத்தலம் நம்மாழ்வாரின் தாய் திருவுடையநங்கை பிறந்த தலமாகும். குலசேகர ஆழ்வார் கி. பி. 8 ஆம் நூற்றாண்டில் இத்தலத்தைப் புதுப்பித்து இறைவனுக்கு வாகனம். கோயில் மதில் போன்ற திருப்பணிகள் பலவும் செய்து, கொடிக்கம்பத்தையும் நிர்மாணித்து விழா செய்துள்ளார். நம்மாழ்வார் குழந்தையாகத் தவழ்ந்துள்ளது போன்ற மிக அழகிய சிலை ஒன்று இத்தலத்தில் உள்ளது. நம்மாழ்வாரால் மட்டும் ஒரே ஒரு பாசுரத்தில் பாடல் பெற்ற தலமாகும்.

புராண முக்கியத்துவம்

ஒரு காலத்தில் சுசீந்திரம், ஞானாரண்யம் என அழைக்கப்பட் டது. சப்த ரிஷிகள் இங்கு தவமிருந்தனர். இறைவன் சிவவடிவில்அவர்களுக்கு காட்சி தந்தார். முனிவர்கள் இறைவனைத் திருமாலின் உருவிலே காண சோம தீர்த்தக் கட்டம் என்ற இடத்திற்கு சென்று தவம் செய்தனர். அவர்களது தவத்துக்கு இரங்கிய இறைவன், திருமாலின் உருவில் காட்சி தந்தார். அவ்வுருவில் அங்கு தங்கியருள வேண்டும் என்ற முனிவர்களின் வேண்டுகோளை நிறைவேற்ற, திருமால், சப்த ரிஷிகள் சூழ, பிரசன்ன மூர்த்தியாக சுமர்ந்து அருள்புரிகின்றார் என்பர். திருமாலின் அம்சமான நம்மாழ்வாரைப் பெற்றெடுத்த தாய் பிறந்த பெருமை இத்திருப்பதிக்கே உரியது. குறுநாட்டுக் காரிமாறன் என்ற சிற்றரசனுக்கும், நாஞ்சில் நாட்டுத் திருவண்பரிசாரத்திலிருந்த (திருப்பதிசாரம்) திருவாழிமார்ப பிள்ளை மகளான உதயநங்கைக்கும் மணமகள் இல்லத்தில் திருமணம் நடந்தது. பல ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாதது கண்டு வருந்திய தம்பதிகள் மகேந்திரகிரியின் அடிவாரத்திலுள்ள திருக்குறுங்குடி சென்று, அதன் வழியே ஓடும் நதியிலே நீராடி, அங்கு எழுந்தருளியிருக்கும் நம்பியிடம் குழந்தை வேண்டி நின்றனர். பெருமாளும் அவர்களது வேண்டுகோளுக்கிரங்கி, உங்கள் எண்ணம் நிறைவேறும். யாமே உமக்கு மகனாக அவதரித்துப் பதினாறு வயதிலேயே கணக்கிலடங்காக் கீர்த்திகளைப் பெற்று உங்களுக்கு புகழ் தேடித் தருவோம். பிறக்கும் குழந்தையை (ஆழ்வார்)திருநகரியிலுள்ள புளியமரத்தடிக்கு எடுத்துச் செல்ல வேண்டும்,’ என்று கூறி மறைந்தார். சில நாட்களில் உதயநங்கை கருவுற்றாள். தமிழர் முறைப்படி மகப்பேறுக்காக தாய் வீடான திருவண்பரிசாரத்துக்கு அனுப்பப்பட்டாள். வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தன்று பவுர்ணமி திதியில் நம்மாழ்வார் இவ்வுலகிலே அவதரித்தார். குறுங்குடிப் பெருமாளின் ஆணைப்படி குழந்தையை ஆழ்வார்திருநகரியிலுள்ள புளிய மரத்துக்குப் பொற்தொட்டிலில் இட்டு எடுத்து வந்தனர். குழந்தை தவழ்ந்து தவழ்ந்து புளியமரப் பொந்தினுள் ஏறித் தெற்கு நோக்கி பத்மாசனத்தில் ஞான முத்திரை ஏந்தியவராய் அங்கு எழுந்தருளி இருக்கும் ஆதிநாதரைத் தியானித்து நின்றது. இந்நிகழ்ச்சியை கண்டவர்கள் வியந்து போற்றினர். 16 ஆண்டுகள் இந்த பாலமுனி, இறை தியானத்தில் மூழ்கியிருந்தார். இவ்வாறு திருப்பதிசாரம் நம்மாழ்வாரின் அவதார தலமாகவும், ஆழ்வார் திருநகரி அவர் ஞானம் பெற்ற ஸ்தலமாகவும் சிறப்புடன் விளங்குகின்றன.

நம்பிக்கைகள்

திருமணத்தடை நீங்கவும், கல்வி, கேள்விகளில் செல்வச்செழிப்புடன் விளங்கவும் இங்குள்ள இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றனர்.

சிறப்பு அம்சங்கள்

மூலவர் ஒன்பது அடி உயரமுள்ள இவ்விக்ரகம் “கடு சர்க்கரை யோகம்’ என்ற கூட்டினால் சமைக்கப்பட்டது. கல்லும், சுண்ணாம்பும் சேர்ந்து செய்யப்பட்ட உருவத்தின் மேல், கடுகும் சர்க்கரையும் சேர்ந்த ஒருவித பசையினால் பூசப்படும் முறைக்கு கடுசர்க்கரை யோகம் என்பர்.

திருவிழாக்கள்

திருமால் குலசேகர ஆழ்வாரை வைகுண்டத்துக்கு அழைத்துச் சென்ற ஆடி சுவாதி திருநாள், சித்திரை மாதம் பத்து நாட்கள் திருவிழா. புரட்டாசி சனி, ஆவணி திருவோணம். கன்னியாகுமரி மாவட்டத்தில் இவருக்கு மட்டுமே ஊஞ்சல் சேவை நடக்கிறது.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

நாகர்கோவில்

அருகிலுள்ள இரயில் நிலையம்

நாகர்கோவில்

அருகிலுள்ள விமான நிலையம்

திருவனந்தபுரம்

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top