Sunday Jun 30, 2024

திருநின்றவூர் இருதயாலீஸ்வரர் திருக்கோயில், திருவள்ளூர்

முகவரி

அருள்மிகு இருதயாலீஸ்வரர் திருக்கோயில், திருநின்றவூர், ஆவடி வட்டம், திருவள்ளூர் மாவட்டம் – 602 024 போன்: +91-94441 64108

இறைவன்

இறைவன்: இருதயாலீஸ்வரர் (மன ஆலய ஈஸ்வரர்) இறைவி: மரகதாம்பிகை, மரகதவல்லி

அறிமுகம்

திருநின்றவூர் இருதயாலீஸ்வரர் கோவில் தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டம், ஆவடி வட்டத்தில் உள்ள திருநின்றவூர் எனும் ஊரில் அமைந்துள்ள சிவாயலமாகும். இத்தலத்தின் மூலவர் இருதயாலீஸ்வரர், தாயார் மரகதாம்பிகை. சுவாமி கிழக்கு நோக்கி உள்ளார். அம்மன் தெற்கு நோக்கி உள்ளார். இருவருக்கும் தனிதனி சன்னதிகள் உள்ளது. சுவாமியின் விமானம் கஜபிஷ்டம் அமைப்பில் தூங்கானை மாடவடிவில் அமைந்துள்ளது. சுற்றுப் பிரகாரத்தில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமி, நடராஜர், நந்தி தேவர், சண்டிகேசவர் சன்னதிகள் உள்ளன.

புராண முக்கியத்துவம்

நாயன்மார்களில் ஒருவரான பூசலார் திருநின்றவூரில் தலத்தில் பிறந்தவர். இவர் தினமும் அவ்வூரிலுள்ள சிவலிங்கம் ஒன்றை தரிசித்து வந்தார். மேற்கூரை இல்லாத அந்த லிங்கம் வெயிலிலும், மழையிலும் நனைந்தது. இதைப்பார்த்த பூசலாருக்கு சிவனுக்கு கோயில் கட்ட ஆசை எழுந்தது. இவரோ பரம ஏழை. எனவே சிவனை தன் மனதில் இருத்தி, தன்னிடம் ஏராளமான பணம் இருப்பது போல் கற்பனை செய்து கொண்டார். மனதுக்குள்ளேயே கோயில் கட்ட ஆரம்பித்தார். அந்தக் கோயிலில் இல்லாத பொருளே இல்லை. செய்யாத வசதியே இல்லை. மனம் காற்றை விட வேகமானது என்பர். மனம் நினைத்தால் ஒரே நாளில் கோயிலைக் கட்டி விடலாம். ஆனால், நாயனார் அவசரப்படவில்லை. உண்மையிலேயே ஒரு கோயில் கட்ட எத்தனை ஆண்டுகள் ஆகுமோ, அத்தனை ஆண்டுகள் இந்த கோயிலை கட்டினார். இந்த நேரத்தில் காஞ்சிபுரத்தில் ஒரு மன்னன் சிவனுக்கு உண்மையான கோயிலை கட்டி கொண்டிருந்தான். அவன் கட்டி முடித்த நேரமும், பூசலார் தன் மனக்கோயிலை கட்டி முடித்த நேரமும் ஒன்றாக அமைந்தது. இருவரும் ஒரே நாளில் கும்பாபிஷேகம் நடத்த நாள் குறித்தனர். மன்னன் கட்டிய கோயில் கும்பாபிஷேகத்திற்காக காஞ்சி மாநகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. அன்றிரவு மன்னனின் கனவில் தோன்றிய சிவபெருமான், “”நீ எனக்கு கோயில் கட்டியிருப்பது குறித்து மகிழ்ச்சி தான். ஆனால், இதே நாளில் திருநின்றவூரில் பூசலார் என்ற அடியார் கும்பாபிஷேகம் செய்ய நாள் குறித்து விட்டார். நான் அந்த கோயிலுக்கு செல்ல வேண்டியுள்ளது. எனவே நீ வேறொரு தேதியில் கும்பாபிஷேகத்தை வைத்து கொள்,”என்று கூறி மறைந்தார். திடுக்கிட்டு விழித்தான் பல்லவ மன்னன். கும்பாபிஷேகத்தை நிறுத்திவிட்டு இறைவன் குறிப்பிட்ட திருநின்றவூருக்கு புறப்பட்டான். அங்கு சென்றதும் பூசலார் என்பவர் இவ்வூரில் கட்டியிருக்கும் கோயில் எங்கே என விசாரித்தான். யாருக்கும் அது பற்றி தெரியவில்லை. பின் பூசலாரின் இருப்பிடத்தை கண்டுபிடித்து அவரை வணங்கி, “”நீங்கள் கட்டியுள்ள கோயில் எங்கே உள்ளது? நேற்றிரவு சிவன் எனது கனவில் கூறினார். அதை தரிசிப்பதற்காக வந்துள்ளேன்,”என்றான். மன்னன் சொன்னதை கேட்டு பூசலாருக்கு மிகுந்த ஆச்சரியம் ஏற்பட்டது. “”அரசே! சிவபெருமான் உங்கள் கனவில் கூறியதை கேட்டு மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். கோயில் கட்டுமளவு என்னிடம் வசதி இல்லை. எனவே எனது உள்ளத்திற்குள் ஒரு சிவாலயம் கட்டி, இன்று கும்பாபிஷேகம் நடத்துவதாக கற்பனை செய்து கொண்டேன். இதைத்தான் சிவன் உங்களிடம் கூறியுள்ளார்,”என்றார். இதை கேட்டதும் மன்னன் அதிர்ச்சி அடைந்தான். அன்பினால் மனதில் கட்டும் கோயிலுக்கும், பல லட்சம் செலவு செய்து கட்டும் கோயிலுக்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்து கொண்டான். குறிப்பிட்ட நாளில் பூசலார் எழுப்பிய மனக்கோயிலில் சிவபெருமான் எழுந்தருளினார். அவரது இதயத்தில் நடந்த கும்பாபிஷேகத்தை பக்தர்கள் அனைவரும் கண்டுகளித்தனர். அன்றே ஈசனின் திருவடியையும் அடைந்தார் அவர். சிவபெருமான் அவரை நாயன்மார்களில் ஒருவராக்கினார். பூசலாரின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில் மன்னன் இத்தலத்தில் நிஜக்கோயில் கட்டி சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து அதற்கு இருதயாலீஸ்வரர் என்று திருநாமம் சூட்டினான்.

நம்பிக்கைகள்

இதயநோய் குணமாக திங்கட்கிழமைகளில் இங்கு வந்து பிரார்த்தனை செய்கிறார்கள். பிரார்த்தனை நிறைவேறியதும் சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றலாம்.

சிறப்பு அம்சங்கள்

சிவனின் மூலஸ்தானத்திலேயே பூசலார் நாயனாரின் சிலை இருப்பது தனி சிறப்பு. பூசலார் நாயனார் இறைவனை தன் இதயத்தில் வைத்து பூஜித்து கோயில் கட்டியதால், இதயம் தொடர்பான நோய்களுக்கு இங்கு வழிபட்டால் சிறந்த பலன் கிடைக்குமென்ற நம்பிக்கை இருக்கிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலுள்ள பக்தி மிக்க இதயநோய் டாக்டர்கள் தங்களது நோயாளிகள் விரைவில் குணமாக வேண்டும் என திங்கட்கிழமைகளில் இங்கு வந்து பிரார்த்தனை செய்கிறார்கள்.

திருவிழாக்கள்

மகாசிவராத்திரி, தைப்பூசம், மகா சங்கராந்தி, பங்குனி உத்திரம், ஆருத்ரா தரிசனம், வைகாசி விசாகம், விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, தீபாவளி, பிரதோஷம், கார்த்திகை,சித்திரை வருடப்பிறப்பு, அமாவாசை, பவுர்ணமி, திங்கள், வெள்ளிக்கிழமைகள்.

காலம்

7 ஆம் நூற்றாண்டு

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திருநின்றவூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருநின்றவூர்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top