Thursday Nov 21, 2024

திருநாங்கூர் வைகுண்ட நாதர் திருக்கோயில், நாகப்பட்டினம்

முகவரி

அருள்மிகு வைகுண்ட நாதர் திருக்கோயில், திருநாங்கூர் – 609 106., நாகப்பட்டினம் மாவட்டம். போன்: +91- 4364 – 275 478.

இறைவன்

இறைவன் : வைகுண்ட நாதர் இறைவி: வைகுந்த வள்ளி

அறிமுகம்

திருவைகுந்த விண்ணகரம் அல்லது வைகுந்த விண்ணகரம் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் திருநாங்கூரில் அமைந்துள்ளது. இக்கோயில் திருநாங்கூர் பதினொரு திருப்பதிகளுள் ஒன்று. வைகுண்டமான பரமபதத்தில் சங்கு சக்கரங்களுடன் எழுந்தருளியுள்ள வைகுண்டநாதனே இந்த வைகுந்த விண்ணகரத்தில் உள்ளான் என்பதும் சிவனின் ருத்ர தாண்டவத்தை நிறுத்த பரமபத நாதன் புறப்பட்டு வர அவரைப் பின்பற்றி 10 பெருமாள்களும் இவ்விடம் (திருநாங்கூர்) வந்தனர் என்பதும் தொன்நம்பிக்கை. பரமபதத்தில் இருந்து வந்ததால் அதே தோற்றத்தில் இங்கும் காணப்படுகிறார். திருநாங்கூர் பதினொரு திருப்பதிகளின் இறைவர்களும் எழுந்தருளும் தை அமாவாசைக்கு மறுநாளான திருநாங்கூர் கருடசேவைத் திருவிழாவுக்கு இவ்விறைவனும் எழுந்தருளுவார். தீர்த்தம் – லட்சுமி புஷ்கரணி, உத்தங்கபுஷ்கரணி, விரஜா விமானம் – அனந்த சத்ய வர்த்தக விமானம்

புராண முக்கியத்துவம்

ராமபிரான் அவதரித்த இக்ஷ்வாகு குலத்தில் பிறந்தவன் ஸ்வேதகேது. நீதி நெறி தவறாதவன். எல்லா உயிர்களிடத்தும் அன்பு கொண்டவன். தெய்வ பக்தி கொண்டவன். இவனது மனைவிக்கும் இவனுக்கும் மகா விஷ்ணுவை அவர் வசிக்கும் இடமான வைகுண்டத்திற்கு சென்று தரிசிக்க வேண்டுமென்ற ஆசை நீண்ட நாளாக இருந்து வந்தது. ஸ்வேதகேது அரசனானதால் தனது ஆட்சி கடமைகளை முடித்து விட்டு மனைவி தமயந்தியுடன் தவம் செய்ய புறப்பட்டான். சுற்றிலும் தீ வளர்த்து, சூரியனைப் பார்த்தபடி தீயின் நடுவில் நின்று இருவரும் மகா விஷ்ணுவை நோக்கி கடும் தவம் இருந்தார்கள். நீண்ட நாள் இப்படி தவம் இருந்து தங்களது பூதவுடலை துறந்து வைகுண்டம் சென்றார்கள். ஆனால் அங்கு யாரை தரிசிக்க தவம் இருந்தார்களோ அந்த வைகுண்ட வாசனை காணவில்லை. இவர்கள் வருத்தத்துடன் இருந்தபோது அங்கு வந்த நாரதரின் பாதங்களில் விழுந்து இருவரும் வணங்கினார்கள். வைகுண்டத்தில் விஷ்ணுவை தரிசிக்க இயலாமல் போனதற்கான காரணத்தை கேட்டனர். அதற்கு நாரதர்,””நீங்கள் இருவரும் கடுமையாக தவம் இருந்தாலும், பூமியில் தான தர்மங்கள் செய்யவில்லை. அத்துடன் இறைவனுக்காக சாதாரண ஹோமம் கூட செய்யவில்லை. எனவே தான் வைகுண்டத்தில் விஷ்ணுவின் தரிசனம் உங்களுக்கு கிடைக்கவில்லை. இதற்கு பிராயச்சித்தமாக பூமியில் காவிரியாற்றின் கரையில் அமைந்துள்ள ஐராவதேஸ்வரரை வணங்கி, முறையிட்டால் அவர் அனுக்கிரகத்துடன் வைகுண்ட பெருமாளின் தரிசனம் கிடைக்கும்,’ என்றார். ஸ்வேதகேதுவும் தமயந்தியும் ஐராவதேஸ்வரரை வழிபட்டு பெருமாளின் தரிசனம் கிடைக்க வேண்டினர். இவர்களது பக்திக்கு மகிழ்ந்த இறைவன் “”நானும் பெருமாளின் தரிசனத்திற்கு காத்திருக்கிறேன். மூவரும் மகாவிஷ்ணுவின் தரிசனத்திற்கு தவம் இருப்போம்,’ என்றார். இவர்களுடன் உதங்க முனிவரும் சேர்ந்து தவம் இருந்தார். நீண்ட காலத்திற்கு பின் மகாவிஷ்ணு, ஸ்ரீதேவி,பூதேவி சமேதராக நால்வருக்கும் காட்சி தந்தார். அப்போது ஐராவதேஸ்வரர், பெருமாளிடம், “” “”பெருமாளே! நீங்கள் காட்சி கொடுத்த இந்த இடம் இன்று முதல் வைகுண்ட விண்ணகரம் எனவும், உங்கள் திருநாமம் வைகுண்டநாதர் எனவும் அழைக்கப்பட வேண்டும்,’ என வேண்டுகோள் விடுத்தார். அவ்வாறே வைகுண்டவாசனாக பூலோகத்தில் இருக்கிறார். பெருமாள் வைகுண்ட நாதன் எனவும், தாயார் வைகுந்தவல்லி எனவும் அழைக்கப்படுகின்றனர்.

நம்பிக்கைகள்

குடும்பத்தில் ஒற்றுமை வளர இத்தல இறைவனை பிரார்த்திக்கின்றனர்.

சிறப்பு அம்சங்கள்

பெருமாளின் 108 திருப்பதிகளுள் இதுவும் ஒன்று. இறந்த பிறகு தான் பெருமாளை வைகுண்டத்தில் தரிசிக்க முடியும். ஆனால், பூலோகத்தில் நாம் வாழும் காலத்திலேயே தரிசிக்க இத்தலத்திற்கு செல்லலாம். வைகுண்டத்தில் பெருமாள் தேவர்களுக்கு காட்சி தருவது போல், இங்கும் காட்சி தருவதால் பரமபதத்திற்கு சமமான தலம். இத்தல பெருமாள் கிழக்கு நோக்கி வீற்றிருந்த திருக்கோலத்தில் காட்சி தருகிறார். மூலவர் சன்னதியின் மேல் உள்ள விமானம் அனந்த சத்ய வர்த்தக விமானம் எனப்படுகிறது. உதங்க மகரிஷி, உபரிசரவசு ஆகியோர் இத்தல இறைவனின் தரிசனம் கண்டுள்ளனர்.

திருவிழாக்கள்

உற்சவங்கள் : தை அமாவாசை மறுநாள் நடைபெறும் 11 கருடசேவை உற்சவம் அன்றி இத்தலத்தில் ஆடிமாதத்தில் 10 நாட்கள் பிரம்மோற்சவம் வெகுசிறப்பாக நடைபெறுகிறது

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

நாங்கூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

சீர்காழி

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

Leave a Reply

Your email address will not be published.

Back to Top